Wednesday, November 15, 2017

ஒரு சுய சிந்தனை

ஒரு சுய சிந்தனை.. J.K SIVAN ...

என்ன வாழ்க்கைடா இது சாம்பமூர்த்தி. யோஜனை பண்ணினா என்னிக்கு எதிலே, எதுக்கு சந்தோஷமா இருந்தோம் என்பதே புரியலே. எதோ மூணுவேளை சாப்பாடு, தூக்கம், வெட்டி அலைச்சல். இது தான் என் 75 வருஷ வாழ்க்கையா? ஒருவேளை சந்தோஷம்னா என்னவென்று தெரியாமலேயே வளர்ந்துட்டேனோ?

உத்யோகத்திலே இருந்தேன் . நிறைய சம்பாதிச்சேனே. குடும்பம் குழந்தைகள் ....நிறைய நண்பர்கள். சுற்றம் சூழல் நிறைய. மோசமா ஒண்ணும் இல்லையே. ஏதோ ஒவ்வொருநாளும் முதல் நாள் மாதிரியே இருந்துட்டேன்.

கொஞ்சம் சிந்திக்கட்டுமா. ஆமாம் என்னைப்போலவே தான் எனக்கு தெரிஞ்சவர்களும் இருந்தார்கள். ஒரு லக்ஷியம் இல்லாத அன்றாட '' முதல்நாள் மாதிரி மறுநாள் '' வாழ்க்கையை தான் எல்லோரும் வாழ்ந்தார்கள்.வாழ்கிறார்கள்.

ஏன் இப்படி எல்லோரும் செக்குமாடு மாதிரி?? ஏதோ சிறைக்குள்ளே கைதியா நாம் எல்லோரும்?.

நிறைய புஸ்தகம் படிச்சேன். மனோ தத்துவம், வேதாந்தம், புராணம், சாஸ்திரம்....ஆன்மீகம்... இப்போது கொஞ்சம் வித்யாசம் புரியறது. தெரியறது. நடு ராத்திரி எழுந்து உட்கார்ந்தேன்.எங்கோ இதுவரை தெரியாத ஏதோ புதுசாக தோன்றுகிறதே.

யாரு என் தலைமேல் ஒரு டன் செங்கல்லை கொட்டினது?

என் சிறைச்சாலைக்கு சாவி நான் படிச்ச புஸ்தகத்தில் இல்லை. உள்ளே புகுந்து நானே ஆராய்ச்சி செய்ததன் பலன். நிலைமை புரிந்துவிட்டது எனக்கு. சில உண்மைகள் லேசாக புரிபடுகிறது. சொல்லட்டுமா.

டேய் , தூங்குகிறவனே, விழித்துக்கொள் . உனக்கு என்று ஒரு சக்தி இருக்கிறதே தெரியாமல் இருக்கிறாயே.
எப்போவும் யாரையோ பார்த்து காபி அடித்து அந்த வாழ்க்கை வாழ்ந்தது போதும். 'அவன் லட்சிய புருஷன் '' என்று எவனையோ பார்த்து காப்பி அடித்த வாழ்க்கை. நான் ஒரு டாக்டர், ஜட்ஜ், வக்கீல், வாத்யார், வியாபாரி,... நான் சோகமா, சந்தோஷமா, தனியா, கோபமா, பொறாமையா, பயமா, துக்கத்தில், -- இப்படிப்பட்ட நிலையில் என்னை அடையாளம் கண்டு கொண்டல்லவோ இருந்து விட்டேன். உண்மையில் நான் யார் என்று கண்டுகொள்ளவே இல்லையே!.

நான் தூக்கத்திலே அல்லவோ நடந்திருக்கிறேன். நான் என் உணர்ச்சிகள் அல்ல. எனக்கு எந்த லேபிளும் ( label ) கிடையாது. அதெல்லாம் என் மனசிலே உண்டானது. நான் தான் மனசு இல்லையே. நான் அதையெல்லாம் தண்டி ஒரு சக்தி வாய்ந்தவன். இதை தான் ஆரம்பத்திலே சொன்னேன்.

எத்தனை கணங்கள் என்னை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த அந்த கணங்களில் நான் வாழவில்லையே. இனி ஒவ்வொன்றையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு நகர்வேன்.

எனக்கு இனி எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. மாற்றம் எதுவும் கிடையாது. வாழ்க்கை உண்மையில் அவற்றை தேடி ஓடும் பந்தயம் இல்லை.

தைரியமாக இரு. உன்னை சீராக்கி வளர உயர, சரியான முடிவு எடு. இது தான் என் கடைசி கணம் என்ற நினைப்பில் உன் கடமைகளை தவறாமல் செய். யாருக்காகவும் நேரம் காலம் நிற்கப்போவதில்லை. எது அத்யாவசியமோ அதை செய்,

தொய்ந்து தளர்ந்து போகாமல் உற்சாகத்தோடு செயல்படு. உன் வாழ்க்கை உன் கையில். அதன் வழியில் நீ இல்லை. உன் பொறுப்பில் உன் சக்தியில் செயல்படு. அதனால் என்ன விளைவு ஏற்படுமோ என்ற பயம் வேண்டாம். அது உன் கையில், பொறுப்பில், கிடையாது. உன் உள்ளே இருக்கும் உலகத்தை அறிந்து கொள் . அதுதான் வெளியே தெரிவதும் என்று புரிந்துவிடும்.

நமது சக்திக்கு மீறிய சந்தர்ப்பங்கள் என்று எதுவும் இல்லை. விளைவை உன்னால் அப்போது கட்டுக்குள் கொண்டுவரமுடியும். ''டேய் உன்னிடம் ஏதோ அதீத சக்தி இருக்கிறது'' என்று எவனாவது சொன்னால். ஆமாம் என்று உணர்ந்துகொள். அது சொன்னபடி தான் வெளியுலகில் நடக்கும்.

யாரும் யாருக்கும் குருநாதன் இல்லை. மற்றவர்கள் அபிப்ராயம் உனக்கு பொருந்தாமல் இருக்கலாம். உள்ளே உன் மனச்சாட்சி எதை ஆணையிடுகிறதோ அதுவே உன் குருநாதன். உன்னைவிட உன்னை அறிந்தவன் வேறு எவனும் இல்லை தம்பி. உன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை சீராக செயலாக்க நீ நினைத்தால் அது முடிந்தே தீரும்.

நீ வீராதி வீரன், சூராதி சூரனடா . யாருடனும் உன்னை ஒப்பிடாதே. உனக்கு பகவான் கொடுத்திருப்பதற்கு நன்றி மறவாதே. உன்னிடம் இருப்பதில் கவனம் வை. எது என்னிடம் இல்லை என்று நேரத்தை அதன் மேல் வீணாக்காதே. இருப்பதே போதும் போதும் என்று உணர்வாய். தேவையான எதுவுமே உன்னிடம் உள்ளது. உனக்கு சந்தோஷம் தர அதுவே ஜாஸ்தி. கண்ணை திறந்து பார் தெரியும். எதையும் எங்கேயும் போய் தேடவே வேண்டாம். சந்தோஷம் உனக்குள்ளே, உன்னிடமேயே இருக்கிறது. அதை எதையோ போட்டு மூடிவிட்டாய். இப்போது குப்பையை அகற்றி விட்டதால் அது இருப்பது தெரியும்.

நீ நீயாகவே இரு. உன்னையே நீ நேசி. நீ அழகானவன்.குறையில்லாதவன். அப்படி நம்பு. அப்படியே ஆகிவிடுவாய்.

அமைதியாக இரு. அவசரமாக தலை தெறிக்க உன்னை தாண்டி போகிறவன் போகட்டுமே. கலங்காதே. கோபப்படாதே. ரத்த கொதிப்பு, அழுத்தம் இதனால் வேண்டாமே. அவனவன் செயலுக்கு அவனவன் பொறுப்பு. பலன் அனுபவிக்கட்டும். உன் செயலுக்கு நீ பொறுப்பு.

வாழ்க்கை ஒரு பயணம். ஆங்காங்கே அவரவர் சேர்ந்து கொள்வார். பிரிவார். நல்ல காலம் வரும் என்று கனவு எல்லாம் காணாதே. ஒவ்வொரு கணமும் நல்ல காலம் தான். இருக்கும் சந்தோஷத்தை மறந்து விட்டு, மறைத்து விட்டு, இல்லாத சந்தோஷத்தை தேடாதே.


தூங்குபவர்கள் எல்லோருமே விடிந்தால் எழுந்திருப்பார்கள் என்றோ இன்றிரவு நிச்சயமாக சாப்பிட்டு விட்டு படுக்கைக்குப் போவார்கள் என்றோ யார் சொல்ல முடியும். அதனால் தான் ஒவ்வொரு கணத்திலும் வாழ் என்று சொன்னேன். எனக்கு கிடைத்த ஒவ்வொரு கணத்திற்கும் ''கிருஷ்ணா, உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி அப்பா''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...