Friday, November 24, 2017

எங்கள் வம்சம். J.K. SIVAN

எங்கள் வம்சம். J.K. SIVAN
இநதியா இப்படியா?
நாம் வெள்ளைக்காரன் காலத்துக்கு அப்புறமும் அவனது பாஷையை பேசிக்கொண்டு அவனது நடைமுறை பழக்க வழக்கங்களை, அவனே நம்மை விட்டு சென்றபோதும், நம்மை அடியோடு மறந்துபோய் வெறுத்தாலும், அவனை பின்பற்றி கொண்டு, அது தான் சிறந்த நாகரிகம் என்று மனப்பால் குடிப்பதும் அவனை போற்றி வாழ்வதும் கேவலம்.
ஜெர்மன் தேசத்தவர், ஜப்பானியர் ஆகியோர் தமது மொழியைத்தவிர ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை காலால் கூட மிதிக்கமாட்டார்கள். இங்கிலிஷ் தெரியாத அவர்களை விட நாம் உயர்ந்து விட்டோமா. இங்கிலிஷ் பேசாததால் அவர்கள் குறைந்து விட்டார்களா. ?
நம்மைவிட எந்த விதத்திலும் நமது முன்னோர்கள் குறைந்தவர்கள் அல்ல. நமக்கு தான் அவர்கள் அறிந்ததெல்லாம் தெரியாது. மனக்கணக்கு, ஞாபக சக்தி, எல்லாம் நமக்கு குறைந்துவிட்டது. கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எல்லாம் வந்து நம்மை அவற்றுக்கு அடிமையாக்கி விட்டன. நம்மை விட நமது அடுத்த தலைமுறை 4+4* 7 - 2 எவ்வளவு என்றால் ஓடிவிடும், அல்லது கால்குலேட்டர் கொடு என்று கேட்கும்.
அக்காலத்தில் கணக்கு எல்லாம் மனக்கணக்கு தான். மாகாணி, வீசம், வேலி , மா, ஆழாக்கு உழக்கு, படி, சேர், வீசை, மரக்கால் என்று தான் பேசுவார்கள்.
மனிதர்களிடம் நம்பிக்கை நேர்மை, கடவுள் பக்தி எல்லாம் நிறைய பார்க்கமுடிந்தது. பணம் நிறைய இருந்தால் நம்பகமான ஒருவரிடம் எல்லோருமே கொடுத்து வைத்திருப்பார்கள். அவர்களும் நியாயமாக வேண்டும்போது, தேவைக்குத் தக்கவாறு அந்த பொற்காசுகளை தந்து உதவுவார்கள். கொடுத்தவருக்கு கணக்குத் தெரியாவிட்டாலும் பெற்றவர் அதை வட்டிபோட்டு திருப்புவார். அவர் சொல்வது தான் வேத வாக்கு. எழுத்தில் கணக்கு வழக்கு கிடையாது. பிள்ளையாருக்குப் பொதுவாக என்ற நம்பிக்கையில் இந்த பட்டுவாடா நடைபெறும். எல்லோருமே என்றுமே நேர்மையாக இல்லை என்பது வாஸ்தவம். ஆனால் நம்பர் குறைவு.
ஒருவருக்கு சங்கீதம் தான் உத்யோகம், கவித்வம், புலமை தான் பாண்டித்தியம் என்றால் அவர் ஊர் ஊராகப் போய் அங்கு இருக்கும் தனாதிபதிகளை, மிராசு, ஜமிந்தார், குறுநில ராஜா, பிரபுக்கள் ஆகியோரைக் கண்டு அவர்களைப் புகழ்ந்து பாடி அவர்கள் தந்த சீர்களோடும், தனத்தோடும் ஊர் திரும்புவார். சிலரை அந்தந்த பெரிய மனிதர்கள்
'' பண்டிதர், புலவரே, குருவே,, உங்கள் குடும்பத்தோடு இங்கே வந்து விடுங்கள்'' என்று அழைத்து ஆதரித்தார்கள். நடக்க முடியாதவர்களை குதிரை வண்டி, மாட்டுவண்டி வைத்து அழைத்து போவார்கள். கோடி பணம் வந்தாலும் ஊரை விட்டு நகராத வர்களும் வாழ்ந்தார்கள்.
புலவர்களது, கவிஞர்களது, பண்டிதர்களது ஞானத்தை, பிரசங்கத்தை, பாடல்களைக் கேட்க எல்லா ஊர்களிலும்ரசிகர்கள் இருந்தார்கள். ஆகவே பல ஊர்களிலிருந்து படித்தவர்கள், பண்டிதர்கள், ரசிகர்கள், சிஷ்யபிள்ளைகள் மற்ற ஊர்களுக்கு வந்தார்கள். சிலகாலம் வித்வான், குருநாதர் வீட்டிலேயே தங்கி குருகுல வாசம் செயது, திண்ணைப் பள்ளியில் கற்று முடிந்தபின் ஊர் திரும்புவார்கள்.
என் குடும்ப முன்னோரில் பலர் புலவர்கள், சங்கீத வித்வான்கள். இவ்வாறு தான் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களது சாதுர்யத்தை அந்த அந்த ஊர் சென்று பெரிய மனிதர்களைப் புகழ்ந்து இயற்றிய பாடல்களால் அவர்களை மகிழ்வித்து பரிசு பெற்று அவர்கள் குடும்பம், ஜீவிதம் ஓடியது. சிலர் பொதுவாக கடவுள் மீது பாடல்கள் இயற்றி அதில் எங்காவது தன்னை ஆதரித்த அல்லது தன்னை பராமரித்த அந்த பிரபு, ராஜா, வள்ளல் பெயரைக் குறிப்பிடுவதும் ஒரு வழக்கம். இப்படி தான் கம்பர் சடையப்ப வள்ளலை தனது ராமாயண பாடல்களின் இடையிலே போற்றி பாடியிருக்கிறார்.
எங்கள் வம்சம் அஷ்ட சஹஸ்ரம் (எண்ணாயிரவர்) என்கிற வகுப்பை சேர்ந்தது. இதன் பூர்விகம் தேட வேண்டுமானால் நிறைய பழைய காகிதங்களைப் புரட்ட வேண்டும். பல நூறு ஆண்டுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் நான் இப்போது உங்களை கூட்டிச்செல்லவில்லை .
என் தாய் வழி பாட்டனார், பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதியார், ஒரு கம்பராமாயண ப்ரவ்சன கர்த்தா. ஸ்ரீ ராம பக்தர். சிறந்த தமிழறிஞர். அறிஞர்கள் பலரால் புகழப்பட்டு வாழ்ந்தவர். அவரைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.
அவர் முன்னோர்கள், முன்னோர்கள் எல்லோருமே ராம பக்தர்கள், தமிழ் அறிஞர்கள், பக்திமான்கள். அவர்களில் சிலரைப் பற்றி நான் சொல்லும்போது நீங்களும் ஆச்சர்யப்பட்டு, அக்காலத்தை பற்றிய விவரங்கள் உங்களில் பலருக்கு இதெல்லாம் முற்றிலும் புதிதாக இருக்கும். சுவாரஸ்யமாக அனுபவிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நமது நாட்டை அப்போது ஆங்கிலேயர்கள் கிழக்கு கடற்கரையில் வந்து இறங்கிய சூட்டோடு சூடாக சென்னையிலும் கல்கத்தாவிலும் காலடி எடுத்து வைத்த நேரம். நாடு முழுதுமாக முகலாய அரசர்கள் ஆண்டுவந்தனர். தனித் தனி பிரதேசங்களாக நாடே பிரிந்து கிடந்தது. அங்கங்கு அந்தந்த ராஜாக்கள், அதிகாரிக ள் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று தனித்தனி அவனவன் வைத்தது தான் சட்டம், நியாயம்.
வாழ்க்கை எவ்வளவு அநித்தியமாக கஷ்டமாக பயத்தோடு இருந்திருக்கும் என்று யோசனையோடு நிறுத்திக் கொள்வோம். தெற்கே, சில நாயக்க மன்னர்கள், மராத்திய ராஜாக்கள் கொஞ்சம் மனதில் ஈரமோடு, பக்தியோடு, ஆதரித்த காலம்.
தென்னாட்டிலும் மெதுவாக முகலாய சுல்தான்களின் ஆதிக்கம் தலை தூக்கியபோது தங்களது கடவுள்களையே ஹிந்துக்கள் காப்பாற்ற வேண்டியிருந்தது. கோயில்கள் இடிபட்டன. விகிரஹங்கள் உடைப்பட்டன . கர்நாடக வடுக நாயக்கர்கள், ராயர்கள், திருச்சி, மதுரை தஞ்சை, பிரதேசத்தை ஆண்டபோது வடக்கே முழுதுமாக முகலாயர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடியது. சரித்திர புத்தகத்தில் இந்தியா மேப் போட்டு அதில் அலாவுதீன் கில்ஜி சாம்ராஜ்யத்தை வரை என்று டேவிட் டீச்சர் அம்மா கேட்டபோது இந்தியா முழுதும் சிகப்பு கலரடித்தது எனக்கு ஞாபகம் வருகிறது. சின்ன வயதில் நான் சிகப்பு கலரடித்த இந்தியா வெங்கும் லட்சக்கணக்கான ஹிந்துக்களின் ரத்தம் சிவப்பு ஆறாக அந்த முகலாயர் ஆட்சியில் உண்மையாகவே ஓடியதைத் தெரியாமலேயே சிகப்பு வர்ணம் தீட்டியிருக்கிறேன்.
அங்கிருந்த மக்கள் பட்ட கஷ்டம் நமக்கு தெரியவில்லை என்பதை அதிர்ஷ்டமாக எடுத்துக்கொள்வோம். அந்த துன்பங்களை விவரித்தால் இதைப் படித்தபின் பலர் தூக்கம் இழக்க நேரிடும். துக்கம் தொண்டை அடைக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...