Sunday, November 26, 2017

THIRUPPORUR

யாத்ரா விபரம் J.K. SIVAN

விண்ணில் தாரகனை எதிர்த்தவர்!

சென்னைக்கருகே காஞ்சிபுர வட்டத்தில், மிக முக்கியமான ஒரு சுப்ரமணியசுவாமி கோவில் திருப்போரூரில் இருக்கிறது. சோழர் பல்லவ ராஜாக்கள் காலத்தை சேர்ந்த கோவில். 2ம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு (கிபி 1076) இவ்வூரை ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர்'' ஆலயம் என்கிறது.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில் சந்நிதிகள் தந்தைக்கு உபதேசம் செய்த ப்ரணவமந்த்ரத்தை ''ஓம்'' எனும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்.

தேவசேனாபதியாகி சூரனை எதிர்த்து அவன் சக்திவாய்ந்த சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார். ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி. கந்தசஷ்டி கவசத்தில் ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார்.

இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

ஷண்முகனுடன் அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து தாக்கினார்கள். ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் அவர்களை முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில் அகப்பட்டு) என்று திருப்போரூர் அருகில் உள்ளது.

சிதம்பர சுவாமிகள் மதுரை மீனாட்சி சொக்கநாதரை அனவ்ரதம் த்யானிப்பவர். மீனாட்சி கலிவெண்பா பாடியவர். அவரது த்யானத்தில் ஒரு அழகிய மயில் தோகை விரித்தாடியது . கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி கட்டளை இட்டாள்:

‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப
வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருள, திருப்போரூர் வந்து கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் மகான் சிதம்பர சுவாமிகள் நிர்மாணித்தார். அவருடைய திருமடம் அருகே உள்ளது.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருடர்கள் திருப்பணிக்கான பொருள்களை திருட முயன்று உடனே கண் பார்வை இழந்தனர். அவர்கள் பார்வை இழந்து கதறி சிதம்பர சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்றனர். நன்றியோடு தாங்கள் களவாடிய தங்கம், வெள்ளி, காசு, பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

இந்தப்பகுதியை அப்போது ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன் மனைவிக்கு தீராத வயிற்று வலி. நவாப் சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி அவர் முருகன் அருளினால் அவன் மனைவிக்கு திருநீறு பூச, அவளுக்கு உடனே வலி நீங்கி, நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்..ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே உள்ளது

ஆலயத்தின் தெற்கே ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கை. திருக்குளத்தில் நீராழிமண்டபம். குளத்தில் 8 கிணறுகள். ஆகவே, வற்றாத நிலை. தைப்பூசவிழாவில் பிரமாதமாக தெப்போற்சவம் நடக்கும்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கீழே ஒரு சிறு பீடத்தில் கந்தசுவாமி இங்கே சுயம்புமூர்த்தி. பிரதான பூஜைகள் செய்ய சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அபிஷேகம் கிடையாது. விசித்திரமாக இங்கே முருகன் பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், 'உபதேச மூர்த்தி'' சன்னிதிகள்.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருஉருவம் தான் ''உபதேச மூர்த்தி''.
உபதேச மூர்த்தி விக்கிரஹத்திற்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சம்ஹார







முத்துக்குமார சுவாமி வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு எதிரிகள், பகைவர்கள் கிடையாது..

வெளி பிராஹாரத்தில் விநாயகர்,சனீஸ்வரர் சந்நிதிகள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகலும்.

ஸ்தல விருக்ஷம் வன்னி மரம். அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர், இடும்பன், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. இங்கே பைரவருக்கு நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் காண்கிறார்..

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் எல்லாம் இங்கிருந்து சுமார் 14 கி. மீ.தான்.

'' திருப்போரூர் சந்நிதி முறை'' என்று சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார்.வள்ளலார் பாம்பன் சுவாமிகள், சந்தானலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர் பாடல்கள் பெற்ற ஸ்தலம். .

விநாயகர் இங்கு கணநாதனாக முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் அவரை வணங்கிய பின் தம்பி கந்தசாமியை ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் . அருகே சிதம்பர சுவாமி சந்நிதி. பெரிய வட்ட வடிவிலான மண்டபம். கொடிமரம் மயில் வாகனம் பலிபீடம் உள்ளது. 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் தெய்வயானை சந்நிதி . இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை விக்கிரஹங்களுக்கு வில்வமாலை இங்கேயே தொடுக்கிறார்கள். கடைகளில் விற்கும் மற்ற மாலைகள் சாற்று வதில்லை.

உள் பிராகாரத்தில் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள ஸ்ரீசக்கர யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள். விசேஷகாலங்களில் சிறப்பு பூஜை.

கோயில் நேரம்: காலை 7 மணிக்கு - நண்பகல் 12.30 மணி- மாலை 4.30 மணி-இரவு 8.30 மணி வரை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...