Tuesday, November 7, 2017

SATHI MUTRA PULAVAR

   என்  மனைவியிடம் சொல்கிறாயா? J.K. SIVAN 

இந்த நவம்பர்  நாலு நாள் மழையில்  சுருண்டு கிடக்கிறோம். போர்வை கனமாக மேலே.  நோ fan, நோ ac   என்று கத்துகிறார் தாத்தா.

சத்தி முற்றம் என்று ஒரு கிராமம். கும்பகோணம் அருகே இருக்கிறது.  அருகே   உத்தமதானபுரம் . உ.வே.சா.  தமிழ் தாத்தா, எங்கள் உறவினர் கூட.  நாங்கள் எல்லோரும் அஷ்ட சஹஸ்ரம் எனும் எண்ணாயிரவர் கூட்டம்.

இந்த சத்தி முற்றத்தை சேர்ந்த ஒரு ஏழைப்புலவர் வறுமையில் என்றுமே வாடுபவர்.  யாரோ சொன்னார்கள்   ''மதுரைக்கு போ. பாண்டியனைப் பார். உன் புலமையை பாராட்டி நிறைய  பரிசுகள்  தனம் , தான்யம்  எல்லாம் கொடுப்பான்''

புலவர் நடந்தார். பசி, தாகம், இருக்க இடம் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் ஒண்டினார். குளிர். நடுக்காடு. நான் இப்படி மதுரை மாறன் பார்வை என்மேல் பட்டு எனக்கு சுபிக்ஷம் வர தவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை என் மனைவியிடம் யார்  சொல்லுவார்கள்?  என யோசித்தார்?

எதிரே ஒரு குளம் அதில் ஒரு பெரிய  நாரை தனது ஜோடியோடு  அங்கே  வந்து  குளக்கரையில் இறங்கியது. அதன் அழகில் மயங்கிய  புலவருக்கு ஒரு பாடல் அற்புதமாக  தோன்றியது. இது தான் வெகு தூரம் பறக்க கூடியதாயிற்றே? இதனிடம் சொல்லி  நீ  சத்திமுற்றத்துக்கு பறந்து போய் என் மனைவியிடம் நான் சொல்லும் இந்த விஷயத்தை சொல்கிறாயா நாரையே?  என்று அதை தூது விடுகிறார்.

என்ன அந்த தூது செய்தி?

  ஏ அழகிய  சிவப்பு நிற கால்களைக்கொண்ட   நாரை பறவையே,  நீ வாயை திறக்கும்போது  பார்த்தேன்.  உடனே எனக்கு    பனம் பழத்தை  பிரித்து பார்த்தால்  உள்ளே தெரியுமே  செக்கச்செவேலென்று , பவழம் மாதிரி,  அப்படிப்பட்ட  ஒளிவீசும் கூர்மையான  மூக்கு, அலகுகளை  உடைய  நாரை பட்சியே, . நீயும் உன் மனைவியும் இங்கிருந்து நேரகா தெற்கே பறந்து, வழியில்   கன்யா குமாரி சமுத்திரத்தில் குளித்துவிட்டு, கொஞ்சம் மீன் சாப்பிட்டுவிட்டு, வடக்கே தெம்போடு பறந்து செல்லுங்களேன். 

அப்படிப்  போகும்போது  என் ஊர்  சத்திமுற்றம் வழியே  வருமே.   அங்கேயும் ஒரு நல்ல குளம் நிறைய மீனோடு இருக்கிறதே.   

அங்கிருந்து பார்த்தாலே,  மழையில்  நனைந்த சுவர்களை உடைய  ஒரு ஒட்டு வீடு தெரியும்.   வாசல்  திண்ணையின் மேலே  சுவற்றில் டிக் டிக் டிக் என்று ஒரு கிழட்டு பல்லி  எப்போதும் சப்திக்கும். அது தான் என் வீட்டு அடையாளம். 

அந்த  பல்லி   ஜோசியம் சொல்லுமா  என் கணவன் எங்கே இருக்கிறார். ஏதாவது அவருக்கு பரிசு கிடைத்ததா என்று காத்திருப்பாள் என்  மனைவி. 

அவளைக்கண்டு  இந்த செய்தியை சொல்லுங்கள்  "இந்த பாண்டியன் அரசாளுகின்ற  மதுரையை சென்று அடைந்துவிட்டார் உன் கணவன்.  இருக்கும் ஒரே மெல்லிய  மேல்துண்டு தான் சொத்து. விர்ரென்று  தோலை டீ துளைத்து உள்ளே செல்லும் குளிரோடு  வாடைக்காற்றில்  அவர்  ரொம்ப  இளைத்து மெலிந்து, கைகள்  இரண்டையும் சேர்த்து மார்பை மறைத்துக்கொண்டு, துவண்டு சுருங்கி அமர்ந்துகொண்டு , கால்களை முழங்காலோடு சேர்த்து  இணைத்தவாறு  உடம்பை ஒட்டி  தழுவிக்கொண்டு, பாம்பாட்டியின் சிறிய கூடைக்குள் சர்வ சக்தியும் இழந்து  சுருண்டு கிடைக்குமே  பாம்பு  அதேபோல உயிர் மட்டும் ஊசலாட  தவித்துக்கொண்டிருக்கும் உன் கணவனை நாங்கள் இருவரும் பார்த்தோம். கவலைப்படாதே. இன்னும் உசிரும் நம்பிக்கையும் இருக்கிறது  என்று சொல்கிறாயா?''  என்கிறார். 

நான் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கும்போது  கணபதி என்கிற தமிழ் வாத்தியார் தியாகராயநகர்  பள்ளியில்  தூங்குமூஞ்சி  மரத்தடியில் இந்த பாடலை பதம் பிரித்து அர்த்தம் சொல்லி கேள்விகள் கேட்டது நினைவுக்கு வருகிறது. 

''நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே''





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...