Wednesday, November 8, 2017

கம்பன் கவிநயம் 1




கம்பன் கவிநயம் 1 - J.K. SIVAN
கம்பர் வேஷ்டி கட்டிய சரஸ்வதி. தமிழ் அவருக்கு அடிமை. சொற்கள் அவரது ஏவலாட்கள். கவிதை நயம் அவருக்கு கைவந்த கலை. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். அவர் ஒரு ரவிவர்மா என்று நாம் கற்பனை பண்ணினால், அவரது எழுத்துக்கள் வண்ணம் தோய்த்த எண்ணங்கள். அவரது சிந்தையில் உதித்த நறுமண வண்ணமலர்கள். கம்பர் கவி புனைந்து கொண்டிருக்கிறார். எங்கோ ஏதோ யார் சொல்கிற ஒரு வார்த்தை அவர் காதில் விழுகிறது. ''..... வண்ணம்..''. ஆஹா ... இந்த வண்ணம் என்ற சொல்லே அவர் எழுதிக் கொண்டிருக்கும் ஓலைச்சுவடியில் கவிதையாக வண்ணமலராக பூக்கிறது. கம்பராயமாயணத்தில் பாலகாண்டத்தில் மிதிலைக் காட்சி படலம் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் எழுதிய பாடலில் இந்த ''வண்ணம்'' குடி புகுந்து விட்டது. அதை பார்ப்போமா? வண்ணம் என்கிற வார்த்தை எந்தெந்த ரூபத்தில் என்னென்ன பொருளை உணர்த்துகிறது!! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனிஇந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ண லேஉன் கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் (கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.) இவ்வண்ணம் : இவ்வாறு, நிகழ்ந்த வண்ணம் : நடந்த மாதிரி உய்வண்ணம் - வாழும் வழி துயர்வண்ணம்: துக்கம் , துன்பம் மைவண்ணம் = கருப்பு நிறம்; மழைவண்ணம் - சூல் கொண்ட கருப்பு மழை நிறைந்த கருமேகம். கைவண்ணம் " கை செய்யக்க்கூடிய திறமை கால் வண்ணம் : காலின் திறமை இந்த வண்ணம் என்ற பல பொருள் கொண்ட சொல்லை வைத்து ஒரு கவிதை விளையாட்டு விளையாடி இருக்கிறார் கம்பர். ராமன் விஸ்வாமித்ரருடன் லக்ஷ்மணனுடன் நடக்கிறான். மிதிலை செல்கிறார்கள். ராமன் வழியே ஒரு மண்மேடான பழைய ஆஸ்ரமத்தை பார்க்கிறான் அதன் வெளியே ஒரு கல் கிடக்கிறது. ராமனின் கால் அந்த கல்லின் மேல் படுகிறது. அடுத்த கணமே அந்த கல் உரு மாறுகிறது. கல் இருந்த இடத்தில் இப்போது ஒரு ரிஷி பத்னி தென்படுகிறாள். கௌதம ரிஷி மனைவி அகலிகை. எத்தனையோ வருஷ சாபம் நீங்கி இப்போது விமோசனம் பெறுகிறாள். ராமனுக்கு ஆச்சர்யம். இதைக் கண்ட விசுவாமித்திர முனிவர் புன்னகைக்கிறார். '' ராமா இந்த ஒரு கணநேரத்திற்காகத்தான் இத்தனை யுகங்களாக அகலிகை காத்திருந்தாள். உன் பாத தூளி படுமா என்று ஏங்கிய துக்கம் துன்பம் இப்போது தீர்ந்தது. “கரிய நிற ராமா, இனி இந்த உலகில் யாருக்கேனும் துயரமோ துன்பமோ கிடையாதப்பா. நினைத்துப்பார்க்கிறேன். மகிழ்கிறேன். உனது கோதண்டத்தின் சக்தியால் எவராலும் கொல்ல வெல்ல முடியாத தாடகை என்ற ராக்ஷஸி மாண்டாள். உன் கை திறம் அங்கே பேசியது. இதோ இங்கே உன் பொற் பாதம் பட்ட மறு கணமே அகலிகை உயிர் பெற்று விட்டாள். உன் காலின் திறமை இங்கே வெளிப்பட்டது..விசுவாமித்திரர் இராமனைப் புகழும் இந்த செய்யுளில் ''வண்ணம்'' எப்படி நிறம், திறம் , காலம் என்று பல பொருளில் திரும்பத் திரும்ப அடிக்கு அடியாக வருகிறது. அடடா இது போல் எழுத எவரேனும் இப்போது உண்டா? இதோ இன்னொன்று. இது சற்று மாறு பட்ட அனுபவம். இங்கே இந்த செய்யுளில் கம்பர் வார்த்தை கிடைக்காமல் திணறுகிறார்!! நம்ப முடிகிறதா? இராமன் அழகை எப்படி வர்ணிப்பேன்? என்ன வார்த்தை போடுவேன். எப்படி சொல்லுவேன்? கவிதையால் சொல்ல, வர்ணிக்க, எழுத இயலா அற்புதம் இராமனின் லாவண்யம். ஒருக்கால் இப்படிச் சொல்லலாமா? இந்த உதாரணம், உவமை பொருத்தமாகுமா? என்று யோசிக்கிறார்? இப்படிச் சொன்னால் பொருத்தமாகுமா? எவ்வளவோ முயற்சிக்கிறார் ஹுஹும். முடியவில்லை. கடைசியில் ‘ஐயோ’ என்று திணறுகிறார் கம்பர்.அந்த செய்யுள் அயோத்யா காண்டத்தில் கங்கைப் படலத்தில் முதல் செய்யுள்: ''வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோ மர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோ இவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான். வெய்யோன்: சூரியன் பொய்யோ எனும் இடையாள் '' இல்லாதது போல் இருக்குது'' என்பாரே கண்ணதாசன் அது போன்ற இடை. முகில் : மேகம். வடிவு:உருவம்) சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டாள் கைகேயி. ரெண்டு வரம் பெற்றாள் . தசரதன் கொடுத்தான். தவித்தான். ஒன்றில் ராமனின் வனவாசம். ராமன் அயோத்தி அரண்மனையை விட்டு புறப்படுகிறான். கானகம் செல்றாலும் அழகை கம்பர் பார்த்துவிட்டார் கவிதை புறப்பட்டுவிட்டது. சூரியன் ஒளி யைக் காணோம். அது தான் ராமனின் உடல் ஒளியில் மறைந்து விட்டதே. அவ்வளவு தேக காந்தி, ஒளிமயமான உட ல். சீதை லக்ஷ்மணன் தொடர காட்டில் நடக்கிறான். இந்த ராமனின் அழகை கருப்பு மை வர்ணம் என்று சொல்லலாமா? இல்லை இல்லை. இது கரும்பச்சை போல் இருப்பதால் மரகதக் கல் போல் என்று சொன்னால் பொருத்தமாகுமா? அப்படி இல்லை, எங்கோ தவாறு செய்கிறேனே? யோசிக்கிறேன். மையாவது மரகதமாவது. நீல நிற பெரும் கடல் போல அல்லவா ராமன் நிறம் எனக்கு தோன்றுகிறது. இதை எழுதிவிட்டு அடித்த்து விடலாமா என்று ஒரு பாதி மனது. அடாடா இத்தனை நேரம் தோன்றவில்லையே. மழை நிரம்பி ததும்பும் கருமேகம் அல்லவோ சரியான உவமை. அடுத்த நிமிடமே தலையை ஆட்டுக்கிறார். இல்லவே இல்லை. இது எதுவுமே கொஞ்சம் கொஞ்சம் தான் அவன் அழகை நிறத்தை கூறுகிறது. முழுமையான பொருத்த மான வார்த்தை கிடைக்கவிலையே. ஐயோ என்று தலையை கையில் தாங்கி அமர்கிறார். .... இந்த வர்ணிக்க முடியாத அழகு கொண்ட ராமனை எப்படி எழுத்தில் காட்டுவேன்? இன்னும் கொஞ்சம் பாடல்களை அடுத்து பரிமாறுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...