Friday, July 17, 2020

PRIDE




போட்டியும்  முடிவும்    J K  SIVAN  


ஏதோ கொஞ்சம்  விஷயம் தெரிந்து கொண்ட தும்  தலை கனம் ஏறிவிடுகிறது. 

''என்னைப்போல்  படித்தவன் இல்லை, எவனுக் கும் எதுவுமே  தெரியவில்லை''  என்று பேசுகிற வர்கள் அதை நம்புகிறவர்கள் நம்மிடையே  அநேகர் இல்லையா?  

எல்லா அஸ்திர வித்தைகளும் துரோணரிடம் கற்ற அர்ஜுனனுக்கு  தலை கனம், கர்வம்  இருந்தால் என்ன அதிசயம்.  அது பற்றி ஒரு குட்டிக்கதை.  ஏற்கனவே பல முறை சொல்லி இருந்தாலும்  அடிக்கடி சொல்லவேண்டிய ஒன்று.

அர்ஜுனன்  தீர்த்த யாத்திரை தெற்கு நோக்கி  சென்றபோது  தான். ராமேஸ்வரம்  சேதுக்கரை வந்துவிட்டான். அங்கே   ராமருக்காக  வானர சைன்யம் கட்டிய    சேது  பாலத்தை  பார்த்த தும் அவனுக்கு சிரிப்பு வந்தது. 

 ஸ்ரீ  ராமன் சிறந்த வில்லாளி அவனால்  தனது அம்புகளைக்  கொண்டே   சிறந்த பாலம்  அமைக்க  முடியுமே?   ஏன்  வானர சைன்யத் தின்  உதவி நாடினான்?  என்னாலேயே  இத்தகைய  பாலத்தை   சரங்களால் அமைக்க  முடியுமே?. ஒருவேளை   ராமனுக்கு   தன்னளவு  வில்வித்தையில்  நம்பிக்கை குறைவோ?    இதற்கு யார் பதில் சொல்வார்கள்?  அர்ஜுனன் யோசித்துக் கொண்டே  நடந்தான்  ராமேஸ் வரம்  வரை  நடந்து சென்றவன்  ஒரு  காட்டில்   எங்கிருந்தோ  ''ஜெய் ராம்  சீதா ராம் '' என்று விடாமல்  ராம நாம   ஜபம் ஒலிப்பதை  கேட்கிறான்.   காட்டில் எவரும் தென்பட வில்லை. சத்தம் எங்கிருந்து வருகிறது.?   காட்டில் தேடுகிறான்.  ஒரு  சிறு  ஆலயம்.  அதனுள்ளே இருந்து வருகிறது இந்த நாம ஜபம். உள்ளே நுழைகிறான். 

என்ன  ஆச்சர்யம்!.  அவனுக்காகவே  அங்கு  காத்திருந்தது போல  ஆஞ்சநேயர்    ராமர்  விக்ரஹம்  முன்னாள்  அமர்ந்துகொண்டு   ராம நாம ஜபம்  செய்து கொண்டிருந்தார்.     கண்ணை மூடிக்கொண்டு நாம ஜபம் செய்யும் அவர் எதிரே நிற்கிறான். சற்று நேரத்தில்  கண்ணை விழிக்கிறார் ஹனுமான். 

''யார் நீ? என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?''

''சுவாமி நான்  அர்ஜுனன்,  பாண்டவன்,  உங்களைப் பார்த்தால்  ஸ்ரீ ராம பக்த தூதன்  ஹநுமானைப் போல இருக்கிறது என்பதால்  உங்களை  தரிசித்து  ஆசி பெற வந்தேன். அதோடு ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்துகொள்ள விருப்பம்.'' 

''நல்லது . என்ன சந்தேகம் உனக்கு கேள். ?''  

''என்னிடம் காண்டீபம் உள்ளது போல் ஸ்ரீ  ராமனிடம் சர்வ சக்தி வாய்ந்த கோதண்டம் இருந்தபோதும், ஏன் அவர் இங்கே காணும் சேது பாலத்தை தனது  அம்புகளைக்  கொண்டே  நொடியில்  அமைக்க வில்லை? . என்னாலேயே  இத்தகைய  பாலத்தை   சரங்களால் அமைக்கமுடியுமே?.

ஆஞ்சநேயன்   சிரித்துக்கொண்டே “ அர்ஜுனா  ஏன்  ராமர் அம்பு பாலம்  கட்டவில்லை என்று  கேட்டாயே அது வானர சைன்யங்களின்  பலத்தை  தாங்க கூடியதில்லை!!.  யாராலும் அப்படி ஒரு அம்பு பாலம் கட்ட  இயலாது.''

“ஆஞ்சநேயா,   நான் கட்டும்  அம்பு பாலம்  எந்த  பாரத்தையும்  தாங்கக்கூடியது.  எத்தனை வானர சைன்யங்களும்  அதன் மீது  செல்ல லாம்''  .     சற்று கோபத்தோடு சொன்னான் அர்ஜுனன். தனது காண்டீபத்தை குறைத்து மதிப்பீடு செய்தால் அவன் தாங்க மாட்டான்.

“ நீ சொல்வதை நான்  நம்பவில்லை, அர்ஜுனா!”.

“என்ன  போட்டி  உங்களுக்கும்  எனக்கும். இப்போதே  நான் ஒரு அம்பு பாலம் அமைக் கிறேன்.   நான் கட்டிய அம்பு பாலம்  நொறுங் கினால்  நான்  உடனே  தீ  மூட்டி  அதில் மாள்கிறேன்.   அது நொறுங்காமல்  நீங்கள்   தோற்றால்   உங்களுக்கும் அதே முடிவு.  அதே  விதி.  ஒப்புக்கொள்கிறீர்களா?''

சவால்  விட்டான்  அர்ஜுனன். ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்டார். இருவரும்  கடற்கரை சென்றார்கள்.  அர்ஜுனன்   வில்லை எடுத்தான். சரங்களை தொடுத்து  விரைவில்  ஒரு  பாலம்  அமைத்தான்..'''ம்ம்   எப்படி?''என்றான். 

  “அர்ஜுனா  நீ   கட்டிய   சீட்டு கட்டு  பாலம்  என்   ஒருவனையே  தாங்காதே,   எப்படி  ராமரின் வானர சைன்யத்தை  தாங்க முடியும்?  இதோ பார்'' . 

“ஜெய் ஸ்ரீ ராம்” என்று   ஆஞ்சநேயன் தன் வாலால்  அந்த  பாலத்தை  ஒரு  தட்டு தட்ட  அது  பொடிப் பொடியாய்  நொறுங்கியது.  தோல்வியை  ஒப்புக்கொண்ட  அர்ஜுனன்  தீ மூட்ட தொடங்கினான். அவன் மனமும் நொறுங்கியது. தனது ஆருயிர் நண்பன் கிருஷ்ணனை நினைத்துக் கொண்டான். கடைசியில் அவனிடம் விடைபெற்று தீயில் மறைய முடிவெடுத்தான். 

“கிருஷ்ணா, நான்  முதல் முறையாக   தோல்வி யடைந்து  உன்னை  இனி பார்க்க எனக்கு  முகமே  இல்லை. முடிந்தால் அடுத்த ஜென்மத் தில் சந்திக்கிறேன்.''

அர்ஜுனன்   தீயில்  குதிக்கு முன்  அந்த பக்கமாக ஒரு  முதிய துறவி  வந்து கொண்டி ருந்தார்.  

' நில்.....'யாரப்பா நீ,  எதற்கு தீமூட்டி அதில் விழ முயற்சிக்கிறாய்.?'  என்று கேட்டார். அருகே நின்ற  ஆஞ்சநேயரிடம் 

'' என்ன  நடக்கிறது இங்கே? நீயாவது சொல் ” என்கிறார்.   ஹனுமான் போட்டி நிபந்தனையை சொல்லி அர்ஜுனன் தோற்றதைச்  சொல்ல. அந்த துறவி  அதை ஏற்கவில்லை.

“இந்த போட்டி  தவறாக நடந்திருக்கிறது உங்கள்  போட்டிக்கு  யார்  சாட்சி?”

“ஒருவருமில்லை”  

“சாட்சியில்லாத  போட்டி  செல்லாது. நீங்கள்  மீண்டும்  போட்டி போடுங்கள்  நானே  வேண்டு மானால்  சாட்சியாக இருக்கிறேன்”  நெருப்பு அப்படியே எரியட்டும் . இந்த முறை தோற்றவர்  தீக்குளிக்கலாம்''

“ஆஹா  அப்படியே;;  அர்ஜுனனும் ஆஞ்ச நேயனும்  ஒப்புக்கொண்டு அர்ஜுனன் மீண்டும் அம்பு பாலம்  அமைக்க ரெடி!  

அவன்  உள் மனதில் சிறிது பயம். ஒருவேளை இம்முறையும்  தோல்வி  நிச்சயமோ.?கிருஷ்ணனை வேண்டினான் 

“ஹரே,  கிருஷ்ணா உன்னை  வணங்கி  இம்முறை   அம்பு பாலம் கட்டுகிறேன்.
 தோற்றால்,  அடுத்த  ஜன்மத் தில் சந்திப்போம்”

அர்ஜுனன்   சரங்களால் பாலம்  கட்டிவிட்டான்.  ஆஞ்சநேயன்  சிரித்து கொண்டே அதன் மீது தன் வாலால் தட்டினான்.  அசையவில்லை.  காலால்  உதைத்தான். கால் தான் வலித்தது. அதன் மீது   ஏறி முழு  பலத்துடன் குதித்தான். பாலம்  இம்மியும்  அசையவில்லை.  ஆஞ்ச நேயன்  ஆச்சர்யமுடனும்  அதிர்ச்சியுடனும்  முகம் கவிழ்ந்து  யோசித்தான். என்ன  ஆயிற்று?. 

 துறவி  முடிவைக்  கூறி விட்டார்: 

“அர்ஜுனனால் முதலில்  கட்டிய  பாலத்தை  ஆஞ்சநேய னால் நொறுக்க முடிந்த தற்கு  காரணம்  அர்ஜுனன்  தன்  வில் வித்தை கர்வத்தால்  தான்  ராமனை மிஞ்சியவன் என்ற  மமதை. கர்வம். அதை  ஆஞ்சநேயன் ''ஜெய்  ஸ்ரீ ராம்  '' என்று சொல்லி உடைக்க முயன்றதால்   அவன் அதை தனது  வாலால்  அடித்து   நொறுக் க முடிந்தது..இம்முறை  அர்ஜுனன்  ஸ்ரீ கிருஷ் ணனை முழுதும் நம்பியே  தனது பாலத்தை  கட்டியபோது  ஆஞ்சநேயன்  தன் பலத்தின் மீது  இருந்த  கர்வத்தால்   வாலால்  அடித்தபோது  அதை அசைக்கக்  கூட  முடியவில்லை. உங்கள்  இருவருக்கும் இது புரிந்ததா?'' 

இருவரும்  முதிய துறவியின் கூற்றை ஏற்று, அவர்  காலில் விழுந்து வணங்கி  எழுந்தபோது  அங்கே அவரைக் காணோம்.  அர்ஜுனன்  எதிரே   கிருஷ்ணன் நின்றான்.  ஹனுமான் கண்ணுக்கு  ராமனாக காட்சி அளித்தான். 

''என் இரு கண்கள்  நீங்கள் அகம்பாவம்  வேண்டாம் உங்களுக்கு” என்று  அருளினான்.
கிருஷ்ணனின் அறிவுரை  ஆஞ்சநேயன்  அர்ஜுனன் இருவருக்கும் மட்டும் அல்ல.  நமக்காக அவர்களை  சாக்கிட்டு சொன்னது என்று புரிந்தால்  இந்த கதை எழுதியதற்கு நல்ல பலன் கிடைக்கும் . 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...