Wednesday, July 22, 2020

PESUM DEIVAM

`

பேசும் தெய்வம் J K SIVAN

''ஸார் விஜயம்''

மஹா பெரியவாளைப் பொறுத்தவரை, படித்தவர், பண்டிதர், பாமரர், பாட்டாளி, பெண்கள், குழந்தைகள், எல்லோரும் சமம். எல்லோரும் ஈஸ்வர ஸ்வரூபம் என்று நினைப்பவர். அவரிடம் வருவோரை அவர்கள் அறிமுகப் படுத்திக் கொள்ளும் முன்பே, அக்கு வேறு ஆணி வேறாக ஒரு பார்வையி லேயே கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களைப் பற்றி சகலமும் தெரிந்து கொள்ளும் திரிகால ஞானி. அவரை ஒரு சாதாரண பள்ளிக்கூட சிறுவன் சந்தித்த இந்த காட்சி பல பேர் பலவிதமாக எழுதி படித்திருக்கிறேன்.
இது நடந்தது 1857-58 களில் சென்னை யில், ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் சந்திக்கும் இடத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் ஸமஸ் க்ரித கல்லூரி வளாகத்தில் மஹா பெரியவா சாதுர் மாஸ்ய விரதம், பூஜைகளில் ஈடுபட்டிருந்த போது,

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து எல்லாம் பெரியவா தரிசனத்துக்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்போதெல்லாம் தினமும் சாயங் காலத்தில் பெரியவா பிரசங்கம் செய்வதை கேட்பதற்கென்றே கூட்டம் அலைமோதும்.

பிரதி தினமும் பெரியவா வீதி வலம் வருவார். பக்தர்கள் அவரை தங்கள் இல்லங்களுக்கு பூரண கும்பத்தோடு வரவழைத்து பாத பூஜை செய்வதும் உண்டு. வீடு தேடி வந்த பெரியவா ஆஸிர்வாதம் பெற்ற குடும்பங்கள் பாக்யம் செய்தவை.
அதே மாதிரி, மைலாப்பூர், நுங்கம் பாக்கம், அடையார் என்று அவரை எங்கெல்லாமோ அழைப்பார்கள்.

ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார். நுங்கம்பாக்கத்தில் இப்படி மஹா பெரியவா பல வீடுகளுக்கு சென்று அவர்கள் அழைப்பை ஏற்று ஆசிர்வாதம் செய்வதை ஒரு தெருவில் யாரோ ஒரு குட்டி பயல் பார்த்துக்கொண்டே இருந்தி ருக் கிறான். மேள தாளங்களோடு யாரோ ஒரு தாத்தா, தன்னுடைய வீட்டு தெருவிற்கு வந்து சில வீடுகளில் நுழைவது அவனுக்கு வேடிக்கையாக இருந்ததால் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பெரியவா சிலர் வீட்டுக்குள் போவதை யும் அந்த வீட்டுக்காரர்கள் சந்தோஷத் தோடு சில நிமிஷங்களில் அவரை நமஸ்கரித்து வழி அனுப்புவதையும் பார்த்தவனுக்கு ஒரு ஆர்வம்.

ஏழெட்டு, மிஞ்சினால் அதிக பக்ஷம் பத்து வயது தாண்டாத சிறுவன் அவன். அவன் வீட்டில் பெரியவாளை பூர்ண கும்பத்தோடு வரவேற்று ஆசி பெற வசதி இல்லை. அது அவனுக்கு தெரியுமா? தெருவில் சில வீடுகளில் நடப்பதை உன்னிப்பாக கவனித்தான். வறுமை ,தெரியாத வயசு. வசதிகள் இல்லை என்று அறியாத பருவம். அவன் ஒரு கிழிந்த காக்கி நிஜார் மட்டும் போட்டுக் கொண்டு ஒரு உயரமான வீட்டு திண்ணையில் ஏறி கூட்டத்தில் இப்படி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டி ருந்தான்.
மஹா பெரியவா உருவம், உடை, அவருக்கு எல்லோரும் செய்யும் மரியாதை. அவர் புன்னகையோடு அவற்றை பெறுவது, அவர்களை ஆசிர் வதிப்பது அவரை நோக்கி எல்லோரும் ஜெய ஜெய சங்கர ஹர ஹரசங்கர என்று கோஷிப்பது எல்லாமே அந்த குழந்தை யின் மனதில் அவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கி விட்டது.
அவனைப் பொறுத்தவரை ஒரு எண்ணம் ஸ்ட்ராங்காக பதிந்துவிட்டது. இவரை கூப்பிட்டால் எல்லோர் வீட்டுக்கும் வருவார் போல் இருக்கிறது. அவனுக்கு அவர் தன்னுடைய வீட்டுக்குள்ளும் வரவேண்டும் , தானும் அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. அவ்வளவு தான். இளங்கன்று பயம றியாது அல்லவா.
அவர் ஜகத்குரு, காஞ்சி காமகோடி மடாதி பதி, ஞானி என்றெல்லாம் ஒன்றும் அவனுக்குத் தெரியாது. அவரை பூர்ணகும்பத்தோடு வேதகோஷத்தோடு எப்படி முறைப்படி அழைக்கவேண்டும் என்றும் தெரியாது.
அவனுக்கு தெரிந்த முறையில், மற்ற பெரியவர்களை எப்படி அழைக்கும் வழக்கமோ அப்படியே மஹா பெரிய வாளையும் அழைப்பது என்று தீர்மானித் து விட்டான்.
அவன் நான்காம் வகுப்பு மாணவன், மைலாப்பூரில் தான் படிக்கும் பள்ளிக் கூடத்தில் உபாத்யாயரை எப்படி அழைப் பான்? '' ஸார் ஸார்'' என்று தானே.
பெரியவா அருகில் வீட்டில் நுழைந்து ஆசிர்வதித்துவிட்டு வெளியே வரும் போது ஒரே பாய்ச்சலாக சென்று அவர் இருக்குமிடம் அருகே சென்றுவிட்டான். மகா பெரியவாளை சூழ்ந்து கொண்டு மடத்து சிப்பந்திகள், உள்ளூர் பெரிய வர்கள், பக்தர்கள் சிலர் இருந்தார்கள். அவன் உரத்த குரலில் அழைத்தான்:

“ஸார், எங்காத்துக்கும் வாங்கோ ! இங்கே தான் கடைசி வீடு சந்து முடிவிலே... ஸார், நீங்க எங்காத்துக்கும் வரணும். உள்ளே அம்மா இருக்கா. வாங்கோ! ஸார் ..”

அவனை முதலில் யாரும் லக்ஷியம் செய்யவில்லை. அவன் விடாக்கண்டன். உரக்க நிமிஷத்துக்கொருதரம் மேலே சொன்னதையே திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பெரியவா தனது வீட்டுக்கு வரவேண்டும் என்ற ஒரே பிடிவாத ஆசை. பையன் முண்டி யடித்துக்கொண்டு அவர் முன்னே செல்ல முயற்சித்தான்.
“டேய்! போடா அந்தண்ட ஓடு இங்கே நிற்காதே .” என்று விரட்டினார்கள். சிலர் அவனைப் பிடித்து தள்ளினார்கள். அவன் விடாப்பிடியாக வெறிவந்தவன் போல் உரக்க கத்தினான். யாரோ பிடித்து தள்ளியதில் பெரியவா இருக்கும் பக்கம் நெருங்கி விட்டான்.
“ஸார்…ஸார்…..எங்காத்துக்கும் நீங்க வரணும் ஸார் .....
மஹா பெரியவாளை அழைத்துக் கொண்டு அடுத்த எங்கோ ஒரு வீட்டுக்கு பக்தர்கள் கூட்டம் சென்று கொண்டி ருந்தது. பையன் கத்திக்கொண்டே அவர் தன்னுடைய வீட்டை தாண்டி போய்விடப்போகிறாரே என்ற ஆதங் கத்தில் மீண்டும் உரக்க கத்தினான்.
பெரியவாளை அவன் “ஸார்….ஸார்” போயிடாதீங்கோ ஸார் . இதோ இங்கே தான் எங்க வீடு. உள்ளே வாங்கோ ஸார்'.
அவன் குரல் கேட்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம். சிலருக்கு மரியாதைக் குறைவாக, துஷ்டப்பையன் என்ற கோபமாகவும் இருந்திருக்கலாம். .
ஆச்சு! இதோ….அவனுடைய வீடு இருக்கும் தெரு முனை வந்துவிட்டது.! அவன் வீட்டை தாண்டினால் ஒரு குறுகலான சந்து வலப்புறம் திரும்பும். ஒருவேளை இந்த ஸார் அந்த பக்கம் போய்விட்டாள் மறுபடியும் இங்கே வரமாட்டார். நிச்சயம் அவரை விடக்கூடாது என்று தீர்மானித்தான்.
அந்த அவஸ்தை, பரிதவிப்பு அவனுக்கு. இந்த பத்து வருஷங்களில் அவன் வாழ்க்கையில் இப்படி ஒருவர் அவன் வீட்டுப்பக்கம் வந்ததே இல்லை. அவரை விடக்கூடாது என்ற துடிப்பு அவனிடம். “ஸார்…….ஸார்….அந்தப் பக்கம் இல்லே சார். இங்கே தான் கடைசி வீடு இதோ பாருங்கோ.. ஸார். ….இந்த பக்கமா வாங்கோ……எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ…ஸார்” பெரியவாவின் காதில் இந்த சத்தம் விழுந்துவிட்டது. அவர் பார்வை பையன் மேல் பட்டது. அவன் சொல்வது கேட்டது. புரிந்தது. கூட்டத்தை விலக்கினார் . அவனைப் பார்த்தார். இப்போது அவன் அவர் அருகில்.
''என்னடா குழந்தை உனக்கு வேணும்?''
''இதோ தெருமுனையில் எங்க ஆம் இருக்கு ஸார் . நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்குள்ளேயும் வரணும் ஸார்''
கண்ணீரோடு கெஞ்சினான். தெய்வம் புன்முறுவலித்தது. அதை இப்படி யாரும் ஸ்தோத்ரம் பண்ணியதே இல்லையே . அருகிலே இருந்த அணுக்க தொண்டர் கண்ணனிடம் சொன்னார்:

“கண்ணா…..நான் ''ஸார்'' ஆம் டா இவனுக்கு. சரி இவன் வீடு எங்க இருக்குன்னு பார் கேளு. அங்கே போ.''

இதை கேட்ட பையனுக்கு படு குஷி. எல்லோருக்கும் முன்னால் ஓடினான்.

“இதோ! இந்தப் பக்கந்தான்!…இப்டி வாங்கோ…ஸார்…”
முன்னால் வழி காட்டிக் கொண்டு, ஓடினான். அந்த குழந்தையின் வீடு அந்த தெரு முனையில் தான் இருந்தது. ஒரு சிறிய ஒட்டு வீடு.

வீடு வந்ததும், “விர்”ரென்று உள்ளே ஓடினான்…..
“அம்மா!…யார் வந்திருக்கா பாரு! ஸார் வந்திருக்கார்..மா!…” பாண்டுரங்கன் கதையில் பக்தன் புண்டலீகனுக்காக விட்டலன் அவன் வீட்டு வாசலில் அவன் வெளியே எறிந்த “செங்கல் “லை ஆசனமாகக் கொண்டு இரு கைகளையும் இடுப்பு மேல் வைத்துக் கொண்டு புண்டலீ கன் வெளியே வர காத்துக்கொண்டிருந்தது போல் மஹா பெரியவா அந்த பையன் வீட்டு வாசலில் நின்றார்.

பெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், அண்டை அசல் வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் ஓடிவந்து அந்த பையன் வீட்டு வாசலில் நின்ற மகா பெரியவா காலடியில் விழுந்து வணங்க, பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள்! பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாததால் இரு கை கூப்பி வணங்கி நின்றாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அந்த ஏழைக் குழந்தையின் அன்புக் கட்டளையை ஏற்று ஆஹா இந்த பேசும் தெய்வம் வந்து நிற்கிறதே. .

‘ஸார் நிற்கிறார்! காஷாயமும், தண்டமும், பாதக் குறடும், பக்தர் குழாமுமாக!
பையன் ஆனந்தத்தில் பெருமையோடு அம்மாவைப் பார்த்தான். அவன் வீட்டுக்கும் எல்லோர் வீடு போல் ஸார் வந்துவிட்டார். அது ஒன்று தான் அவனுக்கு திருப்தி.
அந்த ஏழைத் தாய் எதிர்பாராத இந்த அபூர்வ தரிசனத்தில் தன்னை இழந்து நடுங்கி நின்றாள். இப்படியொரு பாக்யம் தனக்கு கிடைத்ததை அவளால் நம்பமுடியவில்லை. எவ்வளவு எளிமையான உத்தமர்.
அவளுக்கும் குழந்தைக்கும் பிரசாதம் தந்து விட்டு தெய்வம் நகர்ந்தது. ஊர்வலம் தொடர்ந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...