Saturday, July 18, 2020

DAMODHARAN

''கட்டுப் பட்டவன் ''       J K SIVAN   

வளரும்  குழந்தைகள் விஷமம் பண்ண வேண்டும் அப்போது தான் அவர்கள்  நன்றாக  நார்மலாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.  சோர்ந்து வாயில் விரல் போட்டுக் கொண்டு  மூலையில் உட்கார்ந்தால்   'சம்திங் ராங்'' .உடனே வைத்தியரிடம் போகவேண்டும்.  ஏதோ கோளாறு என்று  புரிகிறது.  சில குழந்தை களை  ஹைபர்  ஆக்டிவ்  HYPER ACTIVE   என்கிறோம்.  துறு துறு வென்று  ஏதாவது விடாமல் விஷமம்  பண்ணிக்கொண்டே இருக்கும்.  கூடவே  ஒரு ஆள்  கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடும். 

கண்ணன் பிருந்தாவனத்தில்  அதி அதி ஹைப்பர் ஆக்டிவ்  பையன்.   விஷமம்  என்றால்  கொஞ்ச நஞ்சமல்ல.  சரியான  முள்ளு அந்த பையன்.

“இவனை எப்படி டீ, யசோதா  நீ  கட்டி  மேய்க்கறே?  என்று பக்கத்து வீடு  கோகிலா   கேட்டபோது தான்  அந்த   கேள்வியிலேயே ஒரு  விடை  இருப்பதை   யசோதை  உணர்ந்தாள். 

 சேர்ந்தாற்போல்  இது  இரண்டாவது  வாரம்.  ஒவ்வொரு நாளும்  பிருந்தாவனத்தில்   எந்த வீட்டிலாவது  வெண்ணை சட்டி  உடைந்திருக்கும்  ஆனால்  வெண்ணை  மட்டும்  காணாமல்  போயிருக்கும்.  காரணம் யார்?  என்பதோ  வெட்ட வெளிச்சம். 
ஆகவே யசோதை  அதட்டி பார்த்தாள்.  உருட்டி  விழித்தாள்,  கையை  ஓங்கினாள். அடிக்க  மனசு வரவில்லை. சிரித்தே  அல்லவா  மயக்கி விடுகிறான்.  சரி,  இவனை எப்படி  திருத்துவது?????? 

மேலே  சொன்னேனேஅடுத்த வீட்டு   கோகிலா வின்  கேள்வியிலேயே   என்ன பதிலிருந்தது.?  யசோதை திரும்ப திரும்பயோசித்தாள்
 .
-------"இவனை எப்படி கட்டி மேய்க்கறே"-------
------ஆஹா, இது முன்னாலேயே   தோன்றாமல் போய்விட்டதே!!''   

விடு விடுவென்று கண்ணனை இழுத்துக்  கொண்டு வீட்டின் பின்புறம்  சென்றாள் . 
தோட்டத்தில் ஒரு பெரிய  நெல் இடிக்கும்  உரல் இருக்கிறதே.  அதன்  அருகில்  கன்றுக் குட்டியைக் கட்டும்  ஒரு  சிறிய  தாம்புக் கயிறும்  வசமாக  கண்ணில்  பட்டது.  அப்புறம் என்ன ?  அந்த   கயிறு  கண்ணனுக்கும் உரலுக்கும்   ''இறுக்கமான நெருங்கிய''   உறவாகி விட்டது.  அவன் வயிற்றில் ஒரு முனை. மற்றொன்று  அந்த  கல் உரலின்  வயிற்றில்.   கண்ணன் ''கட்டு'' பட்டான்.  அவளை  தீனமாக  கெஞ்சியவாறு பார்த்தான் .  கண்ணன் கண்களில்  கண்ணீர்   குளமாக  தேம்பி எப்போது  நீர்   சொட்டாக விழுமோ என்று தளும்பி நின்றதை  பார்த்தால்  அந்த   கல் உரலும் உருகிவிடும்.!!  பேந்த பேந்த  அம்மாவை விழித்து பார்த்தான். யசோதைக்
கு அவனைப் பார்த்தபோது அவள் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.  இருந்தாலும்  வேறு வழியில்லை. தண்டனை கொடுத்தால்  தான் திருந்துவான் என்று  மனதை திடப்படுத்திக் கொண்டாள் .அவனைக்  கட்டிப்  போட்ட  வருத்ததோடு

 "போக்கிரி  கிருஷ்ணா,  இது உனக்கு சரியான தண்டனை. இனிமேல் ஒவ்வொரு  தடவையும்  நீ செய்யும் விஷமத்துக்கும் இது போலவே  உன்னை  கட்டிபோடபோகிறேன்" என்று அவனுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு மத்யானம் வரை இங்கே கிட, பிறகு தான்  உனக்கு விடுதலை” என்று  சொல்லி யவாறு உள்ளே போனாள்  யசோதை..

அவள் சென்ற சில  கணங்களில்  கண்ணன்  சிரித்துக்கொண்டே  சுற்றுமுற்றும்  பார்த்தான்.  சற்று  தூரத்தில் இரு  நெடிய  பெரிதாக வளர்ந்த  பழையகால   மருத  மரங்கள்
 ஜோடியாக  இணைந்து நெருக்கமாக வளர்ந்து  குறைந்த  இடைவெளியுடன் நிற்பது கண்ணில் பட்டது.   என்ன பழைய  ஞாபகமோ அந்த மாயக் கண்ணனுக்கு?

கண்ணன்  உரலோடு மெதுவாக நகர்ந்தான் அவ்விரு நெடிய  மரங்களின் இடையில் நுழைந்து மறுபக்கம் சென்றுவிட்டான்.  அவன் மறுபக்கம் சென்றாலும்  கயிற்றின்  ஒரு  முனையில் இருந்த உரல் மரங்களுக்கு இடையில் சிக்கி  அவனை  மரத்தை தாண்டி  அந்தப்பக்கம்  செல்ல முடியவில்லையே. அதனால்  மரங்களால் தடுக்கப்பட்டு  அந்தப் பக்கம்  மேலே செல்ல முடியாமல் நிறுத்தி யது.  சிரித்து கொண்டே கண்ணன் ஒரு இழுப்பு இழுத்தான் . அவனது பலம் அவனுக்கு மட்டுமே அல்லவா தெரியும். 

என்ன ஆச்சர்யம்!  அவனது சங்கல்பத்தால்  அந்த  சிறிய மெல்லிய  தாம்புக்கயிறு, அதோடு  கட்டப்பட்ட  உரல்  இரண்டுமே அசுர பலம் பெற்றன.  அவன்  கயிறை  இழுக்க, அது  உரலை இழுக்க,  உரல்  மரங்களை இடிக்க,   பெரிய நெடிதுயர்ந்த இரு  மரங்களும்   உரல் இடித்த  வேகத்தில், பலத்தில் , வேரோடு  மடாரென்று  சாய்ந்தன.   அவை விழுந்தபோது பெரிய சப்தம் கேட்டது.   யசோதை உள்ளே இருந்து வேகமாக   வீட்டுப்  பின்னாலே  என்ன சத்தம் என்று பயந்து ஓடிவந்தாள்.  அவள்  வருவதற்குள்  நான்  ஒரு பழங்கதை சொல்ல வேண்டிய  அவசியம் வந்து விட்டதே. 

குபேரனுக்கு  இரு மகன்கள்.   நளகூபரன்,  மணிக்ரீவன்.  ஏதோ தப்பு பண்ணி  அவர்கள்  நாரதரால் ஒரு காலத்தில் சபிக்கப் பட்டு நந்தகோபன் வீட்டு தோட்டத்தில்  வெகுகாலமாக  ஜோடியாக மருத  மரங்களாக  நின்றார்கள்.   ''கிருஷ்ணனால் ஒரு காலத்தில்  சாப விமோசனம் பெற்று  தேவலோகம் திரும்புவீர்கள்'' என்று சொல்லி விட்டார்  நாரதர். அந்த நேரம் வந்து விட்டது இப்போது.  கண்ணன் உரலை இழுத்து மரங்களை சாய்த்து  விட்டானே.   குட்டி கிருஷ்ணன் மூலம் இப்போ து  குபேரன் பிள்ளைகள்  இருவரும்  சாப  விமோசனம் பெற்று மீண்டும் கந்தர்வர்களாகி  அவனை வணங்கி ஆசி பெற்று மேலே  பறந்தனர். 

 ''என்ன சத்தம்?''  என அலறி அடித்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்த  யசோதை  இரு பெரிய  மருத மரங்கள் வேரோடு தரையில் சாய்ந்து கிடக்க  குட்டி கிருஷ்ணன்  உரலில் கட்டிய  கயிறோடு அவற்றின் நடுவே  அமர்ந்திருப்பதை பார்க்கிறாள். தலை சுற்றி  கண் மயங்கி, ஹா  என்ற கூக்குரலோடு   தரையில் விழுகிறாள்.   கண்ணன் அவளை நோக்கினான்.  கண் விழித்தாள்.

''என் கண்ணே  கிருஷ்ணா,  இந்த பாவியால்  எவ்வளவு பெரிய  ஆபத்து  உனக்கு வந்திருக் கிறதே. ஏதோ நான் எப்போதோ செய்த  புண்யத்தால்   கடவுள்    கிருபையால்   மரங்கள்  குழந்தை மேல்  விழவில்லை. ஐயோ  நினைக்க க்  கூட மனம் இடம் கொடுக்க வில்லையே. அந்த மரங்களில் ஏதாவது ஒன்று என் குழந்தை மீது விழுந்திருந்தால்  என்ன ஆயிருக்கும்? அதைப்பார்த்து நான்  உயிரோடு இருப்பேனா ?''   இரு கரம் கூப்பி யசோதை மேலே   எங்கோ பார்த்தவாறு     ''பகவானே  நீ  என்னை காப்பாற்றினாய்'' என்று கடவுளை  மனமார  வேண்டிக்கொண்டபோது கண்ணன்  புன்னகையோடு அவளது வேண்டுதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏற்றான் !!  அவன் ''கிருபையால்'' தானே  குபேரன்  பிள்ளைகள்  சாபவிமோசனம் பெற்றார்கள். அது அவன் கடமை இல்லையா. .... பாவம்  யசோதை இதை அறிவாளா?

இறைவன் உள்ளன்பினால் மட்டுமே  பாசக்   "கட்டு"   படுபவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...