Tuesday, July 28, 2020

BRINDHAVAN




பிருந்தாவனத்தில் சில நிமிஷங்கள்  J K SIVAN


நாம்  இப்போது  பிருந்தாவனத்தில்  இருக்கிறோம்.  சந்தோஷமாக இருந்தால்  சைதாப்பேட்டை கூட  பிரிந்தாவனமாகும் . 

கோடை வெயிலில் எங்காவது குளிர்ச்சியாக  இருக்கும் இடம் தேடும்போது  உடலுக்கு மட்டும்  குளிர்ச்சி போதாதே.   கொடைக்கானல், ஊட்டிக்கு போகிறவர்கள்  உடல் குளிர்ச்சியை தான் அனுபவிக்கிறார்கள். 
 உள்ளத்துக்கு  குளிர்ச்சி தரும்  இடம்  எது என்று  சில  இடங்களைத்  தேடும்போது ஆயர்பாடி ''இதோ  நான் இருக்கிறேனே   என்னை உனக்குத் தெரியவில்லையா?''  என்று  கேட்டது. எனவே நான் உங்களையும் அங்கே அழைத்துச் செல்கிறேன்.  நம்முடைய அதிர்ஷ்டம்  நாம்   இப்போது  கிருஷ்ணன்  இருந்த காலத்திலேயே  ஆயர்பாடியில்  இருக்கிறோமே!!   

இங்கு வரும் வரை   சென்னை  போக்கு வரத்து  நெரிசல்,   டீசல்,  பெட்ரோல் நாற்றம், புழுதி, குப்பை , டிவி,  கட்சி கொடிகள் , ஊர்வலம், பொதுக்கூட்டம்,  '' ஒழிக, வாழ்க''   சத்தம் கேட்டோம், அதெல்லாம் இங்கே காணோமே. அது தான் பிருந்தாவனம். 
இங்கே   அன்றாடம்  நடப்பது.    ஆயர்பாடி  சிறுவர்கள்  சேர்ந்தே  போவர் வருவர் எங்குமே.  யாருக்கும் சட்டை கிடையாது. அதை சட்டை செய்யாதவர்கள்.   மேல் துண்டு,  இடையிலே ஒரு துண்டு,  காலில் செருப்பெல்லாம் கிடையாது.  எப்போதும் உற்சாகமாக இருக்கும்  அவர்களை  பார்த்து  ஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள்.  

இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம் .அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது ?  என்பதன் ரகசியம்  அனைவரும்  அறிந்ததே.  
கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களை  இவ்வாறெல்லாம்   ஆட்டி  படைக்கிறவன்.  அந்த  சிறுவனே அவர்களுக்கு  தலைவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட   மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா  என்று  முதலில் பார்த்துக் கொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவித்   தாவி   குதித்து  ஓட  தாய்ப்   பசுக்கள்  பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் தான்  நிற்பான்.    கூடவே அதன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  நடப்பான்.  அவன்  இடையில்  இருக்கும்  சிறு  மூங்கில் குழல்  பகல் பூரா சில சமயம் அந்த  காட்டு பிரதேசத்தில்  அவனது வேணு கானத்தைப் பரப்பும்.  சில  சமயங்களில்  சிறுவர்கள் யமுனை நதியில்  குதித்து  நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள் . சில சமயங்கள்  ஒன்று கூடி பேசி பாடி ஆடுவார்கள்.  கண்ணன் வேணுகான நேரங்களில்  பசுக்கள்   எல்லாம் வயிறு   நிரம்ப உண்டு ஒன்றாக  கூடி  அவனருகே   மர  நிழல்க  ளில்   கூட்டமாக அமர்ந்து   அசை போட்டுக்கொண்டு  கண்மூடி தலையாட்டி கண்ணனின்  குழலிசையை  கேட்கும்.

ஒரு  கன்று  குட்டி  தாயைக்  கேட்டது. அது பிறந்து முழுக்க  ஆறு நாள்  ஆகவில்லை. 

 " அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?

"   ஏன்  இரண்டுமே பிடிக்கும்.!  

"   ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?

".  உன்னைப்   பார்த்துக்   கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும் ;"  கண்ணன்  குழலிசையைக் கேட்டுக்  கொண்டே  இருக்க ரொம்ப பிடிக்கும் "   என்று  பசு  சொன்னது.

ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது.  "ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை?   அதற்கு  அந்த மூங்கில் புல்லாங்குழல் பதில்   சொன்னது:  

 " நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில்  இருந்து பிறந்தவர்கள்,  வந்தவர்கள் தான். என்னை இந்த   ஆயர்பாடிச் சிறுவன்,      கண்ணன் ஊதுகிறதைப்போல   உபயோகிக்கவில்லையே. அதற்கு  நான்  என்ன செய்ய முடியும்?''

இதை கேட்ட  அந்த  சிறுவன்  தனது   குழலை  கண்ணனிடம்  கொடுத்து   '' கிருஷ்ணா,  என்னுடைய   புல்லாங்குழலில் நீ   வாசி நான்  உனதில்  வாசிக்கிறேன்'' என்றான்    அவன்    கண்ணனுடைய புல்லாங் குழலை  வாங்கி  ஊதினான்.   அப்போதும் அவன் வாசித்த  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லை

.அப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:  
 
" ஏ, சிறுவா, நான்  மாற்றமே  இல்லாத மரத்துண்டு  தான். நீ ஊதினால்  நான்  அதுவாகவே  இருக்கிறேன். கண்ணன்  என் மீது அவன்  காற்றை  செலுத்தும்போது  எனக்கு   ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின் ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக் கிறேன்".

ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்?  நாமும்  சென்னை  வெயிலுக்கே  திரும்புவோம்.  இப்போது கரோனா என்ற பரிசு வேறு நமக்கு...




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...