Monday, July 27, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்  J K SIVAN
                                                               
      பாட்டி  பெற்ற தரிசனம் 

மஹா  பெரியவாளை   பக்தர்களிடையே பரப்பிய  பெருமை  ஸ்ரீ  ரா.  கணபதிக்கு  தான்  உண்டு.  பெரியவா செயல், சொல்  இரண்டை யும்   எழுத்திலே படமாக்கி  ஸ்புடம் போட்டு கொடுத்த  பெருமைக்கு வேறு யாரும்   எளிதில் சொந்தம் கொண்டாடமுடியாது.

அடேயப்பா!     உலகெங்கும்  அந்த  ''தெய்வத்தின் குரல்''  ஒலிக்க  செய்தவர் கணபதி. பெரியவரின் ஞானத்தை  புரிந்துகொள்வது எல்லோராலும் முடியாது. அதை தவறில்லாமல் வெளிக்  கொணர்வது அதனிலும் கஷ்டம்.   ஏழு பாகங்களை  கொண்ட  தெய்வத்தின் குரலை  எத்தனை தரம் படித்தாலும்   ஞான தாகம் தீராது.

நான் சொல்லும் இந்த சம்பவம் எப்போது எங்கு நடந்தது?    காஞ்சி ஸ்ரீமடத்திலா?   ஒருவேளை  திருச்சி   நேஷனல் காலேஜ்  ஹை ஸ்கூல் வளாகத்திலோ?  அல்லது   ஒரு வேளை   மஹா பெரியவா மதுரைக்கு சென்றபோது அங்கே   சேதுபதி ஹை ஸ்கூலிலோ?  சரியாக   ரா.  கணபதிக்கு கவனமில்லை என்றாலும் சம்பவம் கச்சிதமாக ஞாபகம் இருக்கிறதே.  அதைத் தான்  இன்று தொடுகிறேன். 

எங்கே பெரியவா இருந்தாலும், சென்றாலும், அங்கே   பக்தர்கள் எறும்பு சாரி மாதிரி  வரிசையாக நிற்பார்கள்.   நான் சொல்லும் சம்பவத்தன்று  அப்படி நீளமாக நின்ற  பக்தர்கள் வரிசையை   மேற்கொண்டு நகராமல்  திடீரென்று  அணுக்க தொண்டர்கள் நிறுத்திவிட்டார்கள்.  மஹா பெரியவா தரிசனம் இன்னும்  ஆரம்பிக்கவில்லை,  உள்ளே  ஏதோ  முக்கிய காரியம்.  ஆகவே   இன்னும்   பெரிய வா வெளியே வரவில்லை.    ஆகவே  இன்னும் அரைமணி நேரமாவது  காத்திருக்க வேண்டும். பெரியவா தரிசனம் என்பது அவ்வளவு  எளிதல்ல , சுலபமில்லை.

வரிசையில் முன்னால்  ஒரு வயதான  குடுகுடு பாட்டி  நின்று கொண்டிருந்தாள்.   வயசான  என்று அழுத்தமாகவே சொல்கி றேன்.  நூறு வயதுக்கு மேல் இருக்கும் போல் இருக்கிறது. வயதானவர்களுக்கு எல்லாம் வயதானவள் . ''ட ''  கவிழ்த்து போட்ட மாதிரி முதுகு உடம்பிலிருந்து வளைந்திருந்தது.   கையில் ஒரு கம்பு, அது கிடுகிடுவென்று  ஆடுகிறது.  கால்  தள்ளாடுகிறது. கண் சரியாக தெரியவில்லை..வலதுகையை   உயர்த்தி இரு புருவங்களை மூடியவாறு உற்று பார்க்கிறாள்.   கண்களில்  தாரை தாரையாக  கண்ணீர்.  
''சங்கரா சங்கரா''  என்று  அவள் குரல் அமைதியாக  பக்தர்கள் நின்ற அந்த வரிசையில்  ஸ்பஷ்டமாக கேட்கிறது.  நீங்களும் கேளுங்கள்: 

''சங்கரா,  என் சங்கரா,    உன்னை பார்க்க முடியாமல் போயிடுமோ என்று கவலைப் பட்டேண்டா. பார்க்காமலே போயிடு வேனோ என்கிற  பயம் டா  எனக்கு .      என்னப்பா  அதை புரிஞ்சுண்டு  நீயே   நான் இருக்கிற இந்த ஊருக்கு   வந்துட்டியே. சந்தோஷம் டா. உன்னைப் பார்க்க தாண்டா முடியாம ஓடிவந்தேன் . ஏண்டா,    சங்கரா  இப்படி வந்தவளை   உன்னை பார்க்கமுடியாம  நிறுத்தி வைச்சுட்டியேடா?''    அவள் குரல் எல்லோரையும்  திக்கு முக்காட வைத்தது. அவ்வளவு உரிமையா பெரியவா மேல்?     மரியாதையில்லாமல்  ஏக வசனத்தில் பேசுகிறாளே!! 

அப்போது ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள்  உள்ளே பெரியவாளை பார்க்க போய்க் கொண்டிருந்தார்.  சாம்பமூர்த்தி சாஸ்திரிகள்  மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரம  தம்பி.   ரொம்ப  தங்கமானவர், தாராள மனசு.  கிழவியின் குரல்  காதில் விழுந்ததும்  திகைத்தார்.   விறுவிறுவென்று உள்ளே  சென்றார்.  

உள்ளே  யாருடனோ மகா பெரியவா பேசிக்கொண்டிருக்கிறார்.   சாம்பமூர்த்தி எதிரே வந்து கைகட்டி நின்றதும்  பார்வையினால்  தலையசைத்து  என்ன விஷயம் என்று கேட்கிறார் 

''வெளியே ரொம்ப வயசான  ஒரு பாட்டி,   நூறு  நூற்றிஇருபது வயசு இருக்கும் போல இருக்கு.    பெரியவா தரிசனத்துக்கு  காத்திண்டு   அழுதுண்டு இருக்கா''   ......   சாம்பமூர்த்தி சொல்லி முடிக்கவில்லை.   மகா பெரியவா  விருட்டென்று எழுந்தார். வெளியே  வந்துவிட்டார். 

'' ஏண்டா சங்கரா ,  என்னை நிறுத்தி நிக்க வெச்சுட்டே...... ''பாட்டி விடாமல்  இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தாள் .  யாரும் அவளை வாயை மூடு என்றோ அப்படி எல்லாம் பேசாதே என்று சொல்ல  முயலவில் லை.  அவள் உருவம் வயது அதை அனுமதித்தது...

இந்த  கூக்குரலை கேட்டுக்கொண்டே  பெரிய வா அவளை நெருங்கினார். 

''பாட்டி ,  சங்கரன் இதோ வந்துட்டேன் உன் கிட்டே.  நன்னா  பார்.  நீ வந்திருக்கேன்னு தெரியாது எனக்கு. உள்ளே  ஏதோ முக்கியமான வேலையா இருந்துட்டேன்.  நீ வந்துருக்கேன்னு இப்போ தான் தெரிஞ்சுது. உடனே உன்கிட்டே  ஓடி வந்துட்டேன். ''பாட்டி காது கொஞ்சம் மந்தம்னு எப்படி தான் பெரியவாளுக்கு தெரியுமோ, கொஞ்சம் உரக்கவே  பேசினார். 
அவர் குரலை கேட்டதும்   பரமானந்தம் பாட்டிக்கு . அவர் குரல்  காதில் மதுரமாக  பாய்ந்தது . 

''வந்துட்டியா சங்கரா.... வெறும் எலும்புக்கூடாக இருந்த   இரு  கைகள் நீண்டது... மஹா பெரியவா கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டது..... யாரும் பெரியவாளை  நெருங்கி தைரியமாக அப்படி  தொட்டதில்லை...
பெரிய வாளுக்கு  ஒரு கணம்  தனது அம்மா மஹாலக்ஷ்மி கைகள் தன்  கரங்களை பிடித் துக் கொண்டது போல் இருந்தது.  அவளுக் குப்   பிறகு யாரும் அவரை  தொட்டதில் லையே.  அடேயப்பா  55 வருஷங்களாகிவிட்டதே அந்த ஸ்பரிசம் பட்டு.

தலையை உயர்த்தி , கிட்டே வந்து,   பெரியவா முகத்தை பார்த்தாள்  பாட்டி.   

''வ்ருத்தாம்பிகா'' (வயதான  தாயே)..........         பெரியவா வாய் முணுமுணுத்தது..

''அப்பா  நீ  எனக்காக ஓடிவந்தாயா.  என்னை பார்க்க வந்தாயா,  உன்னை   சரியா  பாக்க முடியலேடா சங்கரா. என் கண் பொட்டயா யிடுத்தேடா... என்னப்பா.....      உன்னை பார்க்க, தரிசிக்க,  எனக்கு கொஞ்சம் த்ரிஷ்டி , (கண் பார்வை)   தருவியா?

அப்போ  சுள்ளுனு  உச்சி வெயில் நேரம்...   பக்தர்கள் வரிசை   இரு சுவர்களுக்கு இடையே  நின்றது..   கொஞ்சம் வெளிச்சம் இல்லாத இடம்.   மே
லே  தென்னை ஓலை பந்தல் வேறே..   நிழல் கட்டி இருட்டாக இருந்தது.  வரிசையாக நிற்பவர்கள் மேல் வெயில் துன்பம் இல்ல்லாமல்   இருக்க  இந்த ஏற்பாடு செயதிருந்தது.

பெரியவா இதை கவனித்துவிட்டு  கொஞ்சம்  விலகி  வெளியே  சூரிய வெளிச்சம் தன்  முகத்தின்  மேல் படும்படி  நகர்ந்து வெறும் காலோடு சுடும்  உச்சி வெயிலில் நின்றார். 
''பாட்டி இப்போ  பார்  என் முகம் தெரியறதா உனக்கு.   பாரு  ?''

" இப்போ  உன் முகம் என் கண்ணுக்கு தெரியறதுடா கண்ணா,   திவ்யமா உன்னை தரிசிக்கிறேன்''   இரு கரங்களால் தனது ஒட்டிய எலும்பு கன்னக்குழிகளில்  பட்  பட்டென்று  அறைந்து கொண்டாள் .  அவ்வளவு பக்தி .
சூரிய வெளிச்சம் தனது முகம், தலை, கண், காது, மார்பு வயிறு , திரும்பி நின்று  முதுகு, என்று உடல் முழுதும்  சூரிய வெளிச்சம் பட்டு அந்த பாட்டியின் கண்ணுக்கு  தெரியும்படியாக நின்று  குனிந்து வளைந்து எல்லாம் தரிசனம் கொடுத்தார். மஹா பெரியவா. 

ஆனந்தமாக  பாட்டி என்னவோ சொல்ல அவள்  மனமெல்லாம் இனித்தது.  அவள் ஆனந்த பரவசத்தில் இருந்தாள் .  மஹா பெரியவா அவளிடம் கேட்டார்: 

''பாட்டி,    நீ  என்னை பார்க்க விரும்பினே.   பார்த்துவிட்டாயா,  நான்  கொஞ்சம் முக்கிய மான வேலையாக  உள்ளே போகட் டுமா?''

''ஆஹா  நான்  கண்ணார உன்னை  பாத்துண் டேண்டாப்பா,  என்னை மாதிரி ஒரு அனாம தேயத்து   மேலே கூட   கருணை வெச்சு  உன் தரிசனம் தந்தாயே  என் அப்பா,  இந்த உசிரை கையிலே பிடிச்சுண்டு இத்தனை நாள் இருந்த தே  இந்த சில  நிமிஷங்களுக்காக தான் பா.  இனிமே என்னை எடுத்துக்கோ, இனிமே  இந்த ஜன்மா  போறும்''  என்னை எடுத்துக்கோ. '' இரு கைகளை கூப்பி  பாட்டி  கதறினாள்''

''அதுக்கு நேரம் வரலை.   அதுவரை  பகவான்  நாம  ஸ்மரணை   பண்ணிண்டு இரு.  இப்போ  உன்னை ஜாக்கிரதையாக  கொண்டு போய் உன் வீட்டிலே விட சொல்றேன்.   அவசரப் பட்டுண்டு இது மாதிரி என்னை பார்க்க றேன்னு  ஓடி வராதே. நான் தான் எப்போவும் உன்னோடேயே இருப்பேனே. ஒரு க்ஷணம் கூட  அந்தண்டை இந்தண்டை போகமாட்டேன்.   போய்ட்டுவா பாட்டி '' என்று  அவளை அனுப்பி வைத்தார்  பெரியவா.   



மஹா பெரியவாளின்  காருண்யத்தை இந்த நிகழ்ச்சி ஒன்றே  விளக்குமே  மேலே என்ன சொல்ல இருக்கிறது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...