Tuesday, July 7, 2020

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  J K  SIVAN
                                                                                         

         
   ''சங்கரனாவது கிங்கரனாவது''
                                       
மஹா பெரியவா பற்றி ஒரு சின்ன விஷயம்.    பெரியவா சம்பந்தமாக  ஒரே  சமாச்சாரத்தை  பல பக்தர்கள் பல மீடியாக்களில், பத்திரிகைகளில் வாட்சப்பில், முகநூலில்  பரப்பும்போது நாம் ஒன்றையே பல முறை படிக்க, பார்க்க,  கேட்க நேரிடும். அதில் எந்த தப்புமில்லை.  எல்லாம் இன்பமயம்.  அவரைப்  பற்றி யார் எவ்வளவு, எப்படி,  சொன்னாலும் கேட்க  அலுக்காது.   சொல்லும் விதம் வேறு வேறாக இருப்பதால் பாதம்  ஹல்வாவை பல இலைகளில்,  வித விதமான கலர்  தட்டுகளில், வேறு வேறு அளவில்  யார் யார் கையாலோ அன்பாக அளிக்கப்பட்டு  ரசித்து உண்ணும் சுகம்  கிடைக்கும் . 



இந்த விஷயம் அப்படிப்பட்ட ஓர்  பாதம் ஹல்வா அல்ல, அதை   விட  மேன்மையான இனிய அம்ருதம்.


மஹா பெரியவாவின் எண்ணற்ற பக்தர்களில் சதாசிவம் என்று ஒருவர்  கும்பகோணத்துக்காரர்.  எந்த அனுஷமும் அவரிடமிருந்து தப்ப முடியாது.    ரெண்டு மூன்று நாள் முன்பே  பெரியவா எங்கிருக்கிறார் என்று கேட்டு அறிந்துகொண்டு கட்டாயம் அன்று பெரியவா தரிசனம்.  ரொம்ப தூரத்தில் பெரியவா இருந்தால் போகமுடியாதபோது மனதால் அன்று முழுதும்  பூசலார் மாதிரி மனதர்சனம் .

ஒரு அனுஷம் அன்று கும்பகோணத்திலிருந்து   காஞ்சிக்கு போக  முதல் நாளை சாயங்காலம் பழம், கல்கண்டு, பூ வாங்க சென்ற போது என்ன ஆச்சர்யமாக இருக்கிறது ஒரு கடை கூட  ஏன் இன்று திறக்கவில்லை.  அப்போதெல்லாம் கொரோனா இல்லையே?

மூடப்பட்ட ஒரு கடையின்  வாசலில் கடைக்காரர் ஒருவரிடம்  ''ஏன் இன்னிக்கு கடை திறக்கலை?''

''மெட்றாஸ்லே  ஏதோ பெரிய  பிரச்னையாம்.  கும்பலா  கட்சிக்காரங்க கொடியோடு வந்து   எல்லா கடைகளும் மூடச்சொல்லிட்டாங்க.  வண்டி காடி கூட எங்கும் போகாது. எங்கேயும் போவாதே ''

"அட ஈஸ்வரா  அப்போ  காஞ்சிபுரம்  போக  பஸ்  இருக்காதோ ?''

''இன்னா சாமி இப்படி கேட்கறே,  கடையே மூட சொல்றவங்க  பஸ் போக விடுவாங்களா ? கட்சி காரங்க கல்லால அடிச்சு, எரிச்சுட மாட்டாங்களா ?'   சதாசிவம்  வீடு திரும்பினார். 

"ஏன் கவலையா திரும்பி வெறுங்கையோடு, பையோடு, வரேள் ?''

''ஜானகி, என்ன பண்றதுன்னு தெரியல.  தெருவெல்லாம் வெறிச்சுனு இருக்கு. கடையெல்லாம் மூடிட்டா, நாம இனிமே  காஞ்சிபுரம் போகமுடியாது போல இருக்கு. பஸ் ஓடாதாம்''  நாளைய  அனுஷம்..... ஆத்திலே தான் போல் இருக்கு. பிராப்தம் இருந்தா காஞ்சி புரம் போகலாம் '

வாசலில் நின்று சதாசிவம்  யோசித்துக்கொண்டே  சில மணிகள் ஓடியபின்  திடீரென்று ஒரு வெள்ளை நிற அம்பாஸடர் கார் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது.  அதிலிருந்து  வெள்ளை வெளேரென்று  ஜிப்பாவுடன், பஞ்சகச்சம் கட்டிய, ரெட்டைநாடி மனிதர் இறங்கினர். நெற்றி முன் கைகளில் பட்டையாக கண்ணைப் பறிக்கும் வெள்ளை விபூதி.   அங்கு மிங்கும் தயங்கி தயங்கி பார்த்த அவர்  கண்ணில் சதாசிவம் பட்டு விடவே அவரிடம் வந்தார்.   கைகள் கூப்பின .  புன்சிரிப்பு.    சதாசிவமும்  யாரென்று தெரியாமல் பதிலுக்கு கைகூப்பினார்.


"சார்,   நமஸ்காரம்.  நான்  தஞ்சாவூர்.  சங்கரன்.  கார்லே  அம்புஜம். என் மனைவி.   உடம்பு திடீர்னு சரி யில்லாம போயிடுத்து. பொறுக்க முடியாத  ஒத்தை தலைவலியாலே  துடிக்கிறா.  வர வழியிலே ஹோட்டல் எதுவும் கண்லே  பட லே.     அவளுக்கு  ஒரு பழக்கம்.   கொஞ்சம் சூடா  காப்பி குடிச்சா தலைவலி பட்டுனு நின்னுடும்.   என்ன செயறது . வெட்கத்தை விட்டு கேக்கறேன்.  உங்க வீட்லே  கொஞ்சம்  சூடா   காப்பி, இருந்தா பில்டர் காப்பி  கிடைக்குமா.  உங்களுக்கு சிரமம் இல்லேன்னா  எனக்கும் சேர்த்தே ரெண்டு பேருக்கும் காப்பி கொடுப்பேளா?''

''என்ன சங்கரன் சார் இப்படி கேக்கறேள்?  மாமியை அழைச்சுண்டு உள்ளே வாங்கோ. சித்தே  உட்காரச் சொல்லுங்கோ. சூடா காப்பி போடச் சொல்றேன். ரெண்டே நிமிஷம்.  இருந்து டிபன் சாப்பிட்டுட்டும்  போங்கோ  வழிலே  இன்னிக்கு எதுவும் கிடைக்காது  போல  தோண்றது''

ஜானகி காபி போடுவதில் நிபுணி.    சுடச் சுட  காப்பி ரெண்டுபேரும் சாப்பிட்ட திருப்தி முகத்தில் தெரிந்தது. 

மெதுவாக  சதாசிவம் பேச்சு கொடுத்தார். 
''எதுவரைக்கும்  கார்லே   பிரயாணம்.  எந்த பக்கமா  போறேள் ?'

"ரொம்ப நாளா  பிளான். இன்னிக்கு காஞ்சிபுரம் போய் பெரியவாளை  காமாட்சியை ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்கணும்னு கிளம்பினோம்.  நான்  வெளியூர்லே வேலையா இருக்கேன். சிட்னி.  ஆஸ்திரேலியா.  போனவாரம் ஒன்றரை மாசம்  லீவ்லெ  வந்தேன்.   போறது போறோம், நாளைக்கு பெரியவா நக்ஷத்ரம்   அனுஷமா இருக்கே  போவோமே  ன்னு அம்புஜம் சொன்னா. உடனே கிளம்பினேன்.  கார்லே இடம் இருக்கு .நீங்களும் வரேளா?''

இது காதில் விழுந்தபோது சதாசிவத்துக்கு எப்படி இருக்கும் என்று எழுதாமல் வாசகர்கள் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பும்போது சதாசிவம் தம்பதியர்  பேசிக்கொண்டது சங்கரன் காதில் விழுந்தது. 
''இப்படி பழம் பூ கல்கண்டு இல்லாமல் பெரியவாளை பாக்க  போனது இல்லை. என்ன பண்றது கடை ஒண்ணுமே இல்லையே ''  என்றாள்  ஜானகி.

''எல்லாம்  ஏகமா  நான் வாங்கிண்டு வந்திருக்கேன் உங்களுக்கும் தரேன். ''-  சங்கரன் மனைவி.

 காஞ்சிமடம் போய் சேரும்போது இரவு  11மணி ஆகிவிட்டது.   

மடத்து வாசலில் கார் நின்றது.  ரெண்டு பெரிய  ஓலை தட்டுகளில் பழம் பூ கல்கண்டு எல்லாம் நிரப்பி  சதாசிவம் தம்பதியிடம் கொடுத்து விட்டு  சங்கரன்  '' உங்களை  இங்கே  மடத்து வாசலில் விடறேன்.  கொஞ்சம் தூரத்தில்  என் நண்பன் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தேன். அவன் வீட்டுக்கு போய்  தங்கி விட்டு நாளை காலையில் இங்கே மடத்தில் உங்களை சந்திக்கிறோம் '' கார்  சென்றது.

சதாசிவம் மடத்து வாட்ச்மன்  அனுமதியுடன்  உள்ளே சென்று  தங்கினார். . 

பொழுது விடிந்தது.  எறும்பு சாரி மாதிரி  பக்தர்கள் கூட்டம் வரிசையாக வந்தார்கள். அன்று அனுஷம் அல்லவா? . சதாசிவத்துக்கு பரம சந்தோஷம். .  கடைகள் காஞ்சியில் திறந்து இருந்தது. புதிதாக பூ, பழம் எல்லாம் வேறு  அருகாமை கடைகளில் வாங்கிக்கொண்டு  சங்கரன் கொடுத்த தட்டு  நிரம்பி ,  தயாராக பஞ்சகச்சம் மடிசார் புடவையோடு வரிசையில் நின்றார்கள்.    நேரமாக  ஆக,  சதாசிவம் கண்கள்  எல்லோரையும் துழாவியது. எங்கேயாவது சங்கரன் கண்ணில் படமாட்டாரா?  கவனம் அதிலேயே  இருந்து தலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தனர் காதில்  யாரோ கூப்பிடுவது விழவில்லை.  
கூப்பிட்டவர் மடத்தில் ஒரு  சிப்பந்தி.

சதாசிவம் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்.. நீங்க  யாரையாவது தேடறேளா?'' பெரியவா உங்களை கூப்பிடறா.  உங்க பேர் சதாசிவம் னு எனக்கு தெரியுமே, உங்களை கூட்டிண்டுவர சொன்னா  பெரியவா . ரெண்டுபேரும் என் பின்னாலே வாங்கோ ''

மஹா பெரியவா அன்று பேசினார். மௌன விரதம் இல்லை.    சதாசிவத்தை பார்த்து  சிரித்தார்.  

"வாடா   சதாசிவம்.. கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கினியோ?''

ஆச்சர்யத்தில் உடம்பு நடுங்கியது. பக்தி பரவசம் மேலிட்டு  வார்த்தை குழற  "அம்மாம்   கடையிலே கும்பகோணம் திறக்கலே  என்று உளறினார் .

"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே  மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...
இந்தா"

''ஆமாம்  பெரியவா,  சங்கரன் னு ஒருத்தர் தஞ்சாவூரிலிருந்து  கார்லே கும்பகோணம் வந்து எங்களை அழைச்சுண்டு வந்து விட்டார் ''

மடத்துக்கு இன்னி வரணும்னு  மனசிலே தீர்மானிச்சு  ஆசைப்பட்டது . நடந்தது. வந்துட்டே. இதிலே சங்கரனாவது கிங்கரனாவது '' ஹாஹா என்று சிரித்தார் பெரியவா. 

தெய்வத்தின் கை  நீண்டது.   பிரசாதம் கையில் விழுந்தது.''

காரில் சங்கரனுடன் வந்தது எப்படி பெரியவாளுக்கு தெரிந்தது.  உடல் வியர்த்தது. தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறது......   பிரசாதத்தை வாங்கி இருவரும் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். கும்பல் என்பதால் வழியைவிட்டு நகர்ந்தார்கள்.

சதாசிவத்துக்கு பெரியவா சொன்னதில், சிரித்ததில்  ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால்ரியாதது மாதிரியும் இருந்தது.

போகும்போது  பெரியவா  அன்போடு  ஆசிர்வதித்து காதில்  ரீங்காரம் செய்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச் சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போய்ச்சேர்

கடகடவென்று வேகமாக நடந்த  அதிசய    சம்பவ காட்சிகளின்  ஆச்சர்யத்தில் இருந்து இன்னும் மீண்டுவராத சதாசிவம் வெளியே வந்து   முதல் நாள் இரவு டூட்டியில்  இருந்த  வாட்ச்மேனை  பார்த்து  

"ஏம்ப்பா..நேத்து ராத்திரி  பதினொன்றரை  பன்னிரண்டு மணிக்கு   ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து  வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ..அவர் திரும்ப இன்னிக்கு
வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே  இல்லியே சாமீ...காலையில்தானே நான் வந்திருக்கேன்"
சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து   ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து
வாசல்ல..." 

"என்னங்க நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க..நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு  இல்லயே ''   

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.   நான் எப்படி இங்கே வந்தேன்?  கும்பகோணத்தில் வீட்டில் காப்பி குடித்துவிட்டு  காரில்  காஞ்சிபுர மடத்தின் வாசலில் இறக்கி விட்டுவிட்டுப்போன .... சங்கரன் யார்?

''சங்கரனாவது கிங்கரனாவது''  என்று ஹாஹா  சிரிப்பு மீண்டும்  காதில் கேட்டது.......   கண்களில் நீர்  வழிய  இரு கரம் சிரம் மேல் தூக்கி  மஹாஆஆ  பெரியவா தெய்வமே..... என்று  மண்ணில் விழுந்து மடத்தை நோக்கி நமஸ்கரித்தார் சதாசிவம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...