Thursday, July 16, 2020

PESUM DEIVAM



பேசும் தெய்வம்.  J K SIVAN
                                                                                             ''அவரை பாட சொல்லு ''
'' விநாயகனே, வினை தீர்த்தவனே.....  அற்புதமாக  கணீரென்று  வெண்கலக்குரல் என்னை  வாரி விழுங்கி முழுங்கியது.  அதை ரசித்து முடிப்பதற்குள்  இன்னொன்று....
''கண்ணன் வந்தான் அங்கே ... ஆஹா  அதே  பக்தி தோய்ந்த  கணீர்  குரலா ?  
ஆஹா  எப்படி கடவுள் இப்படி   இவ்வளவு   ஸ்பஷ்டமாக அக்ஷரங்களை உச்சரிக்கும் மாயக்குரலில் மயங்கவைக்கும் மனிதனை படைத்தான்..? 

சீர்காழி கோவிந்த ராஜன் குரல் எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சியை எனக்கு அளிக்க தவறியதில்லை.

நான் மட்டுமா  சீர்காழி குரல் கேட்டு மகிழ்ந்தவன்? .  மகா பாக்கியசாலி அந்த  சீ .கோ.    காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா ளுக்கும் அல்லவோ  அந்த குரல் பிடித்திருந்தது.   ஆமாம்  அப்படி ஒரு சம்பவம் படித்தேன். 

காஞ்சி மஹா பெரியவா  தியானம் செய்வதற் காக காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கம் செல்வது வழக்கம்.. அப்படி ஒருமுறை மஹா பெரியவா அங்கு  சென்றிருந்தபோது   அவரது தரிசனம் பெற அங்கு பக்தர்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர்.

டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில் மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதால் யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட காஞ்சி புரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய  புதிய பாடல் அடங்கிய இசைத் தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது  எண்ணம். .


சீர்காழி கோவிந்தராஜன்  வந்தபோது  மஹா பெரியவா  பூஜையில் ஈடுபட்டிருந்ததால் திரை போடப் பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காணக் காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார்.   சற்று நேரம் கழிந்தது. 

திடீரென்று  கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணித் தயாராக நின்றபோது   மடத்து  சிப்பந்தி ஒருவர்,  பெரியவா தொண்டர்,  ஒருவர் மட்டுமே  கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார். கூட்டத்தினரை நோக்கி உரக்க பேசினார் 

 “இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக் கிறாரா?” 

 பரபரப்புடன் சீர்காழி, “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.

“உங்களை மஹாபெரியவா பாடச் சொன்னா” என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். 

மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில் உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று பரவசப் பட்டார். தான் பாடுவதற்கு பெரியவர் உத்தரவிட்டதை எண்ணி மகிழ்ந்தார்.

“ஹிமாத்ரி சுதே பாஹிமாம்” என்ற  கல்யாணி ராக பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. 

அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த மஹா பெரியவா , பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்தார்.
மிகவும் மகிழ்ச்சி புன்முறுவலாக  முகத்தில் ஜொலிக்க,  மஹா பெரியவா தட்டில் இருந்து ஒரு  பெரிய  மாம்பழத்தை எடுத்து ஒரு  ரோஜா புஷ்பத்தோடு சேர்த்து   அவர் கரங்களில்  விழும்படியாக  அளித்தார்.  புதிய  இசைத்தட்டுகள் மீது புஷ்பங்கள் நிறைய  மழையாக பொழிந்து இசை மழை அன்றுமுதல் எங்கும்   ஒலித்துக்கொண்டிருக்கிறது.  அபய
ஹஸ்தம்  உயர்ந்தது.   ஆனந்தக் கண்ணீ ருடன்  வணங்கி சீர்காழி கோவிந்த ராஜன் உத்தரவு பெற்று திரும்பினார். .

சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில் அடிக்கடி சொல்வாராம். 
சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சி  மஹா பெரியவா  எப்படி  உள்ளே இருந்தபடியே  அவர் வந்திருந்ததை உணர்ந்தார். 

தனது ஞானசக்தியால்  அனைத்தையும் அறியும் திறமை பெற்றவர்  மஹா பெரியவா. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...