Wednesday, July 22, 2020

FLUTE SARABASASTHIRI



சங்கீத ஜாம்பவான்கள்.    J K  SIVAN 

              புல்லாங்குழல்  சரப சாஸ்திரி

நான்  சின்ன வயதிலே  கேள்விப்பட்ட  ஒரு புல்லாங்குழல் மஹா வித்வான்  பெயர்  சரப சாஸ்திரிகள்.  என் தந்தை சொல்லி `தான்  இந்த பெயர்  எனக்கு  அறிமுகமானது.  புல்லாங்குழல் என்றால் கிருஷ்ணன், அவனுக்கு அடுத்தபடி  சரப சாஸ்திரிகள் என்று சொல்லலாம்.  அவரை  எத்தனை பேருக்கு தெரியும்??? 
அவர் வாழ்ந்த காலம்  1872-1904.  அதென்னவோ  40 தாண்டாமல்  வாழ்ந்தவர்கள் உலக ப்ரஸித்தியாகி உள்ளார்கள்.  ஆதி சங்கரர்,  விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம்., அலெக்சாண்டர், சரப சாஸ்திரி..... போதுமா  உதாரணம்.
முப்பது வருஷங்களுக்குள்  அமரத்துவம்  என்பது  அதிசயிக்கத்தக்கது.  நமது துர்பாக்கியம்  சரப சாஸ்திரி  வாசித்ததை கேட்க  ஒரு  உபகரணமும்   இல்லை.  எப்படி இருந்தார்  என்று அறிய  ஒரு  போட்டோவும்  கிடைக்கவில்லை.  
நேரில் கேட்டு ஆனந்தித்த  நமது முன்னோர்கள் பாக்கியவான்கள்.  சரப சாஸ்திரி காலத்துக்கு முன்பு  புல்லாங்குழல் ஒரு பக்க வாத்யமாகதான் இருந்தது.   ஒரு சின்ன  மூங்கில் குழாயை சபையில் நடுநாயக முக்யத்வம்  பெற வைத்தவர்  சரபஸாஸ்த்ரி. எங்கள் அஷ்டஸஹஸ்ரம் வகுப்பினர். கும்பகோணத்துக்காரர்.   இளம் வயதிலேயே கண்பார்வை இழந்தவர்.  தோட்டத்து மூங்கில் ஒன்றை வெட்டி, துளை போட்டு  அவருக்கு கொடுத்த அவர் அப்பா  சங்கீத உலகுக்கு மகத்தான  சொத்தை வழங்கி விட்டு  போயிருக்கிறார்.  புல்லாங்குழல்  துளைகளில்   தானே  விரல் களை  பலவகையில்  அழுத்தம் கொடுத்து, மூடி திறந்து  சப்தத்தை  பல கோணங்களில் வெளிப்படுத்திக்  கற்றுக்  கொள்ள ஆரம்பித்த சாஸ்திரிகளுக்கு  ஆரம்பத்தில்  குரு யாரும் இல்லை.  விடா  முயற்சியால்   கீர்த்தனைகளை எல்லாம்   வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.  மடமடவென்று  கச்சேரிகளில்   வாசிக்க கூப்பிட்டார்கள்.   சமஸ்க்ரிதமும்  நன்றாக கற்றுக்கொண்டார். நல்ல குரல் வளம். பாடவும் முடிந்தது, சமஸ்க்ரிதத்தில் கீர்த்தனைகள் சாஹித்யம் செய்திருக்கிறார். தவிர  தமிழ், தெலுங்கு, மராட்டி  மொழிகள் வேறு நன்றாக தெரியும்.  வயலின் மிருதங்கம் கச்சேரிகளில் வாசித்திருக்கிறார்.  இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?    ஸ்வர  ஜாதி  கால  தாள  பேத  பிரமாண   இலக்கண  சுத்தமாக சங்கீத ஞானம்.  சங்கீதம் கற்றுக்கொண்டது தஞ்சாவூர்  மானாம்பு  சாவடி வேங்கட சுப்பையரிடம். 
 புல்லாங்குழலில் துளைகளில் விரல்கள் அழுத்தம், பிடிகள் , விரல் நுனிகள் நடனம்   எல்லாம்  அபாரம். வேணுகானம் சரப சாஸ்திரி என்ற பட்டம் எளிதில் பெற்றார். 
மனுஷன்   கச்சேரிகளில்  நகுமோமு  என்று  புல்லாங்குழலில் ஆபேரியை உதிர்க்கும்போது,  குருவிகள் ஆகாயத்தில் சின்ன ரெக்கை அடித்து பறப்பது போல் ஒரு பிரமை ஏற்படுமாம். சுகமான  ராகம் காற்றில் மிதந்து வரும்போது  ப்ரம்மாவின்  அம்சம் பறப்பதுபோல் இருக்குமாம்.   அவர் காலத்தில் அருமையான  ஜாம்பவான்களின் பக்க வாத்யம் அமைந்து  ஈஸ்வர சங்கல்பம்.   இவரது   தோடி  ராகத்தை கேட்ட  வித்துவான் திருமருகல் நடேசன்   “ ஹா ஹா   இதல்லவோ  தோடி, நான் வாசிப்பது இதில் ஒரு கோடி” என்றாராம். 
சரப சாஸ்திரிகள் காலத்தில்  இருந்த   பிற சங்கீத வித்வான்களில் சிலர் பெயர்களை  சொல்கிறேன். அசந்து போவீர்கள்.  பழனி  கிருஷ்ணய்யர்,   கடம், ,   கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை,  மிருதங்கம்  தக்ஷிணாமூர்த்தி பிள்ளை,  சங்கீத வித்துவான்   பட்டணம் சுப்ரமணிய ஐயர்.   வயலின் அப்போது பிடில்  என்று தான் சொல்வது வழக்கம்.  பிடில்  திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்.  திருமருகல் நடேச பிள்ளை நாயனம்,  நடேச பிள்ளை தவில், எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர்.  எல்லோரும்  போற்றிய மகத்தான வித்துவான்  வேணுகானம் சரப சாஸ்திரிகள்.  தாள கட்டு  ஞானம் அபாரம்.  கல்பனா ஸ்வரங்கள்  அப்படியே  மத்தாப்பூ வாக  பளிச் பளிச்சென்று  வெளிப்படும்.   ப்ளூட் வாசிக்கும்போது  தாளம்  போடுவது கஷ்டம்.  இரு கைகளும் குழலில் இருப்பதால்  தாளம் போடுவது காலால் தான்.   புது புது  கற்பனையில்  உதித்து  தங்கு தடையின்றி  தவறு ஒன்றுமில்லாமல் வந்தது அதிசயம்.   க்ரிதிகளின்  பாவத்தை (BHAVA )உணர்ந்து அதற்கு தேவையான காலப்ரமாணங்களை அளவோடு தந்து வாசிப்பார்.  குறித்த நேரத்தில்  கச்சேரிக்கு வருவார். ஒப்புக்கொண்ட  பணத்துக்கு மேல் ஒரு ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டார். கச்சேரிகளுக்கு என்று   தனியாக  சாதகம் ரிஹர்சல்  எதுவுமே கிடையாது. 
 காலக்ஷேபங்களுக்கு என்று  63 நாயன்மார்கள் மேல் கீர்த்தனைகள் எழுதி தந்திருக்கிறார்  மராத்தியில் இவர் கீர்த்தனைகள் உண்டு. 500க்கு மேல்  மனுஷன்  கண் இல்லாமலேயே  இயற்றியிருக்கிறார். சரப சாஸ்திரிகளை க்ரிஷ்ணாவதாரம் என்பார்கள்.  

இன்னொரு விசேஷ  சேதி:   சரப சாஸ்திரிகள் வாசிக்கும் கச்சேரிகளில்  அடிக்கடி  சர்ப்பம், நாகம் வரும்.  காவேரி நதிக்கரையில்  நாகங்கள் ஜாஸ்தி.  
ஒரு கல்யாணம்  தடபுடலாக  ஒரு  தனவந்தர் மகளுக்கு நடந்தது.  ஆறு ஏழு நாள் கல்யாணம் தினம் யாரேனும் ஒரு பிரபலம் கச்சேரி,. சரப சாஸ்திரி ஒருநாள் வந்தார்.  அவர் வருகிறார் என்று  கேள்விப்பட்டு என்றுமில்லாமல் அதிக கும்பல். அருகில் இருந்த ஊர்களில் இருந்தெல்லாம் ரெட்டை மாட்டு வண்டி, ஒற்றை மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில்  என்று நிறைய  ரசிகர்கள் கூடி விட்டனர் . விடிய விடிய  வாசிப்பாரே .  
இவருக்கென்ன இவ்வளவு கூட்டம் என்று கல்யாணப்பெண் கேலி செய்தாள்.  அவர் உருவம், சிறிய மூங்கில் குழாய் வாத்யம், இதற்கா இத்தனை பீத்தல் என்று அவர் காது கேட்கவே சொல்லிவிட்டாள் . அவர்  ஒன்றுமே  கோபிக்கவில்லை. கச்சேரி ஆரம்பித்தது. ராகங்கள் பிரவாகமாக ஓடின.   காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது.  எங்கிருந்தோ ஒரு நீண்ட சர்ப்ப நாகமும்  மேடைக்கு வந்துவிட்டது. அவர் எதிரே  படமெடுத்து ஆடியது. அவருக்கு கண் தெரியாதே. அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்.   அடுத்த பாடல்  புன்னாக வராளி பாடி அதை ஆட வைத்தார்.   பாட்டு  முடிந்ததும் அது தலை குனிந்து அவரை வாழ்த்தி விட்டு  அங்கிருந்து மறைந்தது.   கல்யாண பெண் தனவந்தர் எல்லோரும்  சரப சாஸ்திரிகள் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார்கள்.
சரப சாஸ்திரிகள் சிஷ்யர்கள்.   வேணுகான சிரோமணி பல்லடம் சஞ்சீவ ராவ்.   அஷ்டபுத்ர வெங்கட்ராம சாஸ்திரி.
ஒரு கச்சேரி.  அதில் திருக்கோடிக்காவல்  கிருஷ்ணய்யர் வயலின், மாமுண்டியா பிள்ளை கஞ்சிரா, அழகநம்பி  மிருதங்கம்,  பல்லவி  ஆலாபனையில்  சாஸ்திரிகளும்   கிருஷ்ணய்யரும்  வெகு நேரம்  ரசிகர்களை மயங்கினர்.  மாமுண்டியாபிள்ளை  இதை பார்த்துவிட்டு   சாஸ்திரிகள்  உங்களைப்போல்  தாள ஞானம் கொண்டவர் எவரையும் நான் பார்த்ததில்லை'' என்றார்.



சரப சாஸ்திரி தனது 32ஆவது வயதில் காலமானபோது  தான் உபயோகித்த  புல்லாங்குழலை சிஷ்யன்  பல்லடம் சஞ்சீவ ராவிடம் கொடுத்தார்.   இன்னொரு விஷயம்.  சாஸ்திரி உபயோகித்த ஒரு  புல்லாங்குழல்  ஸ்ரீ ராம பஜனை ஸபா என்ற  அவர் வசித்த ஒரு வீட்டில் 110 சோலையப்பன் தெரு, கும்பகோணத்தில், 100 வருஷங்களுக்கு மேலாக இன்னும் வைத்து பூஜித்து வருகிறார்களாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...