Sunday, July 26, 2020

ASWATHAMA



                                                                     

                        அஸ்வத்தாமனின்   ஆசை   J K   SIVAN  


 ஒரு  குருவுக்கு,  ஆச்சார்யனுக்கு,   எது சந்தோஷம்  தரும் ?  

 தன் சிஷ்யன்  தன்னை  மிஞ்சும்  அளவுக்கு  தேறி  விட்டான் என்பதே.   

"நான்  கற்றுக்கொண்ட அஸ்த்ர  வித்தையில் தலை  சிறந்தது பிரம்மாஸ்திரம்.   நேரம் வந்து  விட்டது  அதை
உனக்கு கற்பிக்க .   அர்ஜுனா!   நீயே தகுதியானவன் அதை என்னிடம் கற்றுக்கொள்ள . வா இங்கே''. 

 துரோணர்  ஆனந்தமாக  அர்ஜுனனை  அணைத்தார்.  இதை சற்று தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டு இருந்த ஒருவன் கோபத்தில்  பல்லைக்கடித்தான்.  பற்றி  எறிந்தது அவனுக்கு.    அவன் வேறு யாருமில்லை.   துரோணரின் செல்ல  மகன் அஸ்வத்தாமன் தான். 

''பெற்றமகன்  நானிருக்க  வேரெவனுக்கோவா  இந்த  வித்தையை கற்றுத்தருவது?   அப்பா  நீங்கள்  எனக்கும்  கூட  ப்ரம்மாஸ்திர  மந்திரம்   கற்றுத்தரவேண்டும்  என்று  அவரை  விடாமல் அரித்தான்  அஸ்வத்தாமன்.   
வேறு  வழியின்றி அதை அவனுக்கும்  கற்றுத்தர   துணிந்த  துரோணர்  அவனிடம்  ஒரு  கண்டிஷன் போட்டார்.

"அஸ்வத்தாமா, உனக்கும்   தான்  நான்  தனுர் வேத சாஸ்திரம்  கற்றுத் தந்தேன்.  ஆனால்  பிரம்மாஸ்திரத்தை பொறுத்தவரை இது  எக்காலத்திலும்  என்ன காரண மானாலும்  என்ன   தவறு  செய்தாலும் மானுடர்கள்  மீது பிரயோகப்படாது"  

 மனிதர்களைத்தவிர  வேறு  யார் இருக்கிறார்கள்.  தேவர்கள்,  ராக்ஷஸர்கள்.  இந்த இருவரோடும் என்றும்  அஸ்வத்தாமன் யுத்தம் புரிய போவதில்லை.  அவன் க்ஷத்ரியனோ, ராஜாவோ இல்லை. அவனுக்கு என்று தனிப்பட்ட எதிரிகள்  யாருமே இல்லையே.  ஆகவே   பிரம்மாஸ்திரத்தை கற்றுக்கொண்ட அஸ்வத்தாமனுக்கு அதை பிரயோகிக்க சந்தர்ப்பமே வரவில்லை.   அவன் மனதில் ஒரு விசித்திர  எண்ணம்  உருவாகியது.  சமயம் பார்த்து கொண்டிருந்தான்  அஸ்வத்தாமன் .  அந்த சமயம் வந்தது. 

 பாண்டவர்கள்  வனவாசம் சென்றிருந்த போது  கிருஷ்ணனைப்   பார்க்க  த்வாரகை போனான்.  கிருஷ்ணன் கடற்கரையில்  உலாவ சென்றிருந்தான்.   கிருஷ்ணனை  தனியாக  பார்த்து பேசுவது  முடியாதே.  அவனைப்  பிடிப்பதே வெகு துர்லபம்.   கடற்கரை சென்று கிருஷ்ணனை பிடித்துவிட்டான் அஸ்வத்தாமன்.

"அட,  அஸ்வத்தாமா!   எங்கே இந்த  பக்கம்  வந்தாய்?".
"கிருஷ்ணா,  உன்னை காணத்தான் வந்தேன். நீ  இங்கு இருப்பாய்  என்று சொன்னார்கள்.  நல்லவேளை  உன்னை சந்தித்தேன்."
"என்ன விஷயம்  சொல் அஸ்வத்தாமா?".
"எனக்கு  உன்னிடம் வெகு நாட்களாக மனம் விட்டு  ஒரு விஷயம்  பேச  ஆவல். இன்று  அது  நிறைவேறும்  என்றும் தோன்றுகிறது".
"பீடிகை  வேண்டாம்.   விஷயத்துக்கு  வாயேன் அஸ்வத்தாமா"
"என்னிடம்  பிரம்மாஸ்திரம்  இருப்பது  அனைவருக்கும்  தெரிந்ததே அல்லவா. அதை  உன்னிடம்  கொடுத்துவிட்டு  உன்னிடம்  உள்ள  சுதர்சன சக்ரத்தை  பெற ரொம்ப  ஆசை".
"அஸ்வத்தாமா,   என்னிடம்  உள்ள வில்,  அம்பு, கதை,  சக்ரம்  எதை வேண்டுமானாலும்  நீ  பெறலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால்  அவற்றுக்கு  உன்னிடம்  வர ஆட்சேபணை இருக்குமா  என்று  நீ  அவற்றை  தான்  கேட்கவேண்டும். எனக்கு  உன்  பிரம்மாஸ்திரத்தை  நீ  தரவேண்டாம். எனக்கு  அது  வேண்டாம்.  தேவையுமில்லை.   உனக்கு தேவையானதை  நீயே  எடுத்துக்கொள்".   
கிருஷ்ணன் தன்னிடமிருந்த  சங்கு சக்ரம், கதை, வில், வாள்  அனைத்தையும்   அவன் எதிரே  நீட்டினான். . 

சுதர்சன  சக்ரத்தின் மீதே  கண்ணாக  இருந்த  அஸ்வத்தாமன்  அதையே  எடுக்க  முயற்சித்தான். இடது கையால்  எடுக்க முயன்று  முடியாமல் போனதும்   வலது கையாலும்  பிறகு  இரண்டு கைகளாலும் முயன்று முடியாமல்  முழுபலத்துடன்  கிருஷ்ணன்  கையினின்றும்  அதை  அகற்ற  பிரயாசை பட்டான்  வெகு நேரம் முயன்றும்  எடுக்கமுடியாமல்  களைத்துப்  போய் கிஷ்ணன் காலடியிலே  விழுந்தான். 

"அஸ்வத்தாமா,   நல்ல  வேடிக்கை இது   என்  சிறந்த  நண்பன்  அர்ஜுனனோ,  என்  மகன்  பிரத்யும்னனோ, சாம்பனோ, என் சகோதரன்  பலராமனோ  கூட   இதுவரை  கேட்காததை  நீ  என்னிடம் கேட்டாய்.  அது போகட்டும்.    நான்  உனக்கு தர விருப்பப்பட்டால்  அவற்றுக்கு உன்னிடம்  வர விருப்பமில்லை என்று தெரிகிறது.  அது சரி  உனக்கு  எதற்கு  அதிக சக்தி வாய்ந்த எனது  சுதர்சன சக்ரம்? உனக்கு யார் எதிரி?  எவர்  மீது  பிரயோகிக்க   அதை  கேட்டாய் .  அதை  முதலில்  சொல்?"  என்று கேட்டான் கிருஷ்ணன்.

"உண்மையைச்  சொல்கிறேன். உன் மீதே  அதை  பிரயோகித்து  உன்னை கொன்றால்  பிறகு  என்னை  எவராலும் இந்த உலகில்  வெல்ல முடியாதே  என்ற   தீய எண்ணம்  என் மனதில்  இருந்தது  கிருஷ்ணா.  இப்போது  புரிந்து கொண்டேன்.  உன்னைத்  தவிர  எவராலும்  உன்  ஆயுதங்களை  அசைக்கக்  கூட  முடியாது  என்பதை  தெரிந்து கொண்டேன்." 
கிருஷ்ணனை வணங்கிவிட்டு  வந்தவழியே திரும்பி நடந்தான் அஸ்வத்தாமன். அவன் வெகுதூரம் சென்று ஒரு புள்ளியாய் மாறும் வரை பார்த்துக்கொண்டிருந்த  கிருஷ்ணன்  சிரித்தான் .  பெருமூச்சும்  விட்டான்.  

''ஆசார்யர்  துரோணருக்கு தப்பாமல்  பிறந்தவன் என நினைத்தேன்  அஸ்வத்தாமன்  தப்பாக பிறந்தவன் என்று  நிரூபித்துவிட்டானே''  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...