Saturday, July 11, 2020

MAYA






எல்லாம் மாயை தானா...? J K SIVAN

''ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரி சொல்றாங்களே? ஏன் ஸார் ? -- மணவாளா முதலியாருக்கு இது பெரிய கவலை?

''வாஸ்தவம் முதலியார்வாள் . முழுக்க பதினைஞ்சு நாள் ஆகலே, அதற்குள்ளே சாத்தான் குளத்தை பத்தி சொல்லும்போதே ஆளுக்கு ஆள் ஒவ்வொரு மாதிரி......... ஐந்தாயிரம், ஏழாயிரம் வருஷ சமாச்சாரம் ராமாயணத்தையே பல மஹான்கள் கொஞ்சம் வித்யாசத்தோடு அங்கும் இங்குமாக அளித்திருக்கிறார்கள். கம்பர் எழுதினமாதிரி துளசிதாசர் இல்லை, வியாசர் ஆனந்த ராமாயணம் வேற மாதிரி.... இருக்கட்டும். அதே போல் அப்படி தான் பாரதமும் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ரிஷி, மஹான் ஒவ்வொரு விதமாக உபதேசிப்பார். வியாசர், வில்லிபுத்தூரார், பெருந்தேவனார் என்று இருந்துட்டு போகட்டுமே. எல்லாம் ருசிதான். கத்திரிக்காயை கூட்டாக, கறியாக , சாம்பாராக, வத்தலாக, சாதமாக எப்படி சாப்பிட்டாலும் கத்திரிக்காய் ருசிக்கிறதே. மொத்தத்தில் கத்திரிக்காய். இதை தான் சமஸ்க்ரிதத்தில் ''லோகோ பின்ன ருசி'' என்பார்கள். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான அணுகுமுறை''

''எனக்கு ஒரு கிருஷ்ணன் கதை சொல்லுங்கோ. நீங்க நிறைய எழுதி தள்ளறேங்க. படிக்க முடியலை சார். ''

''நான் என்ன பண்ணுவேன் முதலியார். ஏதோ மனசிலே ஊற்று மாதிரி பொங்கறது. முடிந்ததை யெல்லாம் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்... தான். அப்புறம் இழுத்த முடியுமோ முடியாதோ. எழுதி வச்சுட்டா என்னிக்காவது யாரவது எப்பொ வேணுமின்
னாலும் படிச்சுக்கட்டுமே. படிக்காட்டாலும் சந்தோஷம். எனக்கு எழுதின சந்தோஷம் நிம்மதி இருக்குமே. நான் காசு, பெருமைக்கு எழுதறவன் இல்லை..''

''தெரியும் சிவன் சார், உங்க ஸ்பெஷல் கிருஷ்ணன் கதை. அதிலே ஒண்ணு சொல்லுங்கோ ''

''ஒரு டம்பளர் சூடாக வெந்நீர் சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்.''

''நாரதரும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட குரு சிஷ்யன் அல்லவா?. அடிக்கடி ஏதாவது நாரதர் சந்தேகம் கேட்க அதை கிருஷ்ணன் நிவர்த்தி பண்ணுவார். அன்று காலை இருவரும் வழக்கம் போல வாக்கிங் போகும்போது திடீரென்று நாரதருக்கு ஒரு சந்தேகம்.

"கிருஷ்ணா, மாயை மாயை என்று நொடிக் கொரு தரம் சொல்கிறோம் உண்மையில் மாயை என்றால் என்ன என்று கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன்"

"சரி, யோசித்து பார்க்கிறேன், எப்படி அதை உனக்கு புரிய வைக்கிறது என்று. நாம் ஏதோ பேசிக்கொண்டே வந்தோம் குறுக்கே இந்த சந்தேகம் கேட்டு எனது சிந்தனை தொடரை அறுத்து விட்டாயே நாரதா!,. அதோ தெரிகிறதே அந்த மலை வரை நடந்து செல்வோம் வா'' என்றான் கிருஷ்ணன்

இருவரும் ஏதோ பேசிக் கொண்டே நடந்தனர். வழியில் கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் நின்றான். அது கிராமம். சில வீடுகள் தூரத்தில் தெரிந்தன.

''சற்று நாம் இங்கே அமர்வோம். நாரதா, எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?"

"சொல்லுங்கள், பிரபு!"

"ரொம்ப தாகமாக இருக்கிறது. ஒரு செம்பு ஜலம் அதோ அந்த வீடுகளில் ஏதாவது ஒன்றிலிருந்து சீக்கிரம் வாங்கி வாயேன்".

" இதோ, நொடியில் வருகிறேன்" என்று சென்ற நாரதன் ஒரு குடிசை வாசலில் நின்றான்.

உள்ளேயிருந்து ஒரு அழகிய பெண் வெளியே வந்து என்ன என்று கேட்க, நாரதன் ஒரு செம்பு நீர் கேட்கப் போய் அவள் அழகில் மயங்கி அவள் குடும்ப விஷயம் எல்லாம் கேட்டு அவள் மேல் காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பி, அவள் என் அப்பாவிடம் சொல்லி அவர் அனுமதி வாங்கு என்று சொல்லி, அவன் மெதுவாக அவரை அணுகி அவர் கடைசியில் அனுமதி வழங்கி, இருவருக்கும் மணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்து ஒருநாள் அந்த கிராமத்தில் வெள்ளம் வந்து அனைவரும் மூழ்கிவிட நாரதன் தன் மனைவியை தன் இடுப்போடு பிணைத்துக் கொண்டு தலையில் ஒரு சிறு குழந்தையை சுமந்து மற்றொரு கையில் பெரிய குழந்தையை பிடித்தவாறு தண்ணீரில் ஒருவாறு தத்தளித்து நீந்தி கரை சேர முயற்சிக்கும் போது வெள்ளத்தில் தலைமேல் இருந்த குழந்தை அடித்துப் போகப் பட்டு, அதை பிடிக்கப் போய் வலது கையை சுதாரிக்கும்போது அந்த கையில் பிடித்திருந்த பெரிய குழந்தையை நழுவ விட்டு அது நீரில் அடித்துக்கொண்டு போன பின் , ஐயோ என் குழந்தைகள், குழந்தைகள்.... என்று அலறி, குமுறி, இடுப்பில் பிணைக்கப்பட்ட மனைவியையும் வெள்ளத்தில் கோட்டைவிட்டு நிறைய தண்ணீர் குடித்து மயங்கி கரையில் ஒருவாறு தள்ளப்பட்டு விழுந்தான்.

சினிமா எடுப்பவர்கள் ஒன் லைன் என்பார் களே அதுபோல் ஒரு வரியில் நாரதன் கதை சொல்லிவிட்டேன். அப்புறம்.....
..
மெதுவாக சுய நினைவு வந்து விழித்து பார்த்த நாரதன் எதிரே கிருஷ்ணன் நின்று கொண்டி ருந்தான்.

":ஐயோ, இது என்ன கொடுமை பதினைந்து வருஷங்கள் ஆகி விட்டனவே" என்று நாரதன் வருந்த கிருஷ்ணன் சிரித்தான்

"என்ன, நாரதா! நொடியில் தண்ணீர் கொண்டு வரேன் என்று சொல்லி அரைமணி நேரமாக காத்திருக்க வைத்தாய் என்னை!" என்ற கிருஷ்ணனிடம்

"என்ன அரை மணி நேரமா பதினைந்து வருஷம் அல்லவோ ஆனது..... காதல், கல்யாணம், குழந்தைகள், மரணம், எல்லாம் இழப்பு.... மயக்கம்..... ஐயோ......''

" எதுவுமே நடக்கவில்லையே நாரதா, நிஜமாக தோன்றும் இது தான் மாயை . இப்போது இந்த அனுபவம் புரிய வைக்கிறதா? என்றான் கிருஷ்ணன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...