Thursday, July 9, 2020

NAMASIVAYA PADHIKAM

நமசிவாய பதிகம்   J  K  SIVAN  
                                                                       

ஓம்  நமசிவாய: 

சைவ சமய குரவர்கள்  நால்வரில் மூத்தவரான   திருநாவுக்கரசர் அப்பர் என அழைக்கப்ப டுபவர். அவரது வாழ்க்கை சரித்திரம்  ஏற்கனவே எழுதி உங்களுக்கு அளித்தி ருக்கிறேன். அவர் எழுதிய  நமசிவாய பதிகம் 10 பாடல்கள்  அற்புதமானவை.  எளிது அர்த்தம் புரியும். படியுங்கள். சகல வினைகளும் தீரும். மனம் நிம்மதி பெறும் 

பாடல் 1:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.


பரமேஸ்வரா,  நீ  நான்கு வேதங்களுக்கும்  உட்பொருள்.  அக்னி, ஜோதி வடிவானவன். அதைத்தான்  பிழம்பதோர் மேனியாகி என்று படுகிறோம்.   பொன்னார் மேனியனே, உன் திருவடிகளை மனதில் இருத்தி, நிறுத்தி,  சிரம் மேல் கரம்கொண்டு ஹரஹர மஹா தேவா என்று அடிவயிற்றிலிருந்து  அன்போடு  அழைக்கிறோம் .   ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை  கெட்டியாக  நாவில் பதித்து உச்சரித்தால்  பாறைக் கல்லோடு கட்டி கடலில் தள்ளினாலும்  உயிர்காக்கும் என்றும்  பெரும் நல்ல  துணையாக  பாதுகாக்கும்  என்று அனுபவ பூர்வமாக சொல்கிறார்  திருநாவுக்கரசர். 

பாடல் 2:
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பூக்களில் சிறந்தது தாமரை, வெண்தாமரை, செந்தாமரை என்ற அவ்விரு  தாமரைக ளுக்கு மே அழகுக்கு அழகாக சிறப்பு தருவது  வெண் தாமரைக்கு  கலைமகளும், செந்தாம ரைக்கு  திருமகளும்.   சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து நைவேத்யமாக அளிக்கும்  பஞ்சகவ்யம் பசுவிற்கு  சிறப்பை தருகிறது. பசும் கோமியம் அதில் முக்கிய பொருள்  அல்லவா   நீதி வழுவாது செங்கோல் ஒச்சுவது  ஒரு நாட்டின் ராஜாவுக்கு சிறப்பை தருவது.  இதெல்லாம் உதாரணங்கள், நமது நாவிற்கு  நல்ல சிறப்பை தருவது  ஓம்  நமசிவாய எனும் பஞ்சாக்ஷர ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 3:
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் இவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

மேகத்தை முட்டும் அளவிற்கு அடுக்கி அடுக்கி விறகு கட்டைகள் வைத்தாலும்  ஒரு சிறு தீப்பொறி போதும், அத்தனையும் சாம்பலா கிவிடும்.  அது போல  எத்தனையோ ஜென்மங்கள் எடுத்து கோடிக்கணக்கான பிறவி எடுத்து புரிந்த பாபங்கள் கர்மவினைகள் எல்லாமே  வேரோடு அழிக்க உதவுவது ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 4:
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினும் அருளினால் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.

எனக்கு நிறைய  கஷ்டங்கள்  துன்பங்கள் இருக்கிறதே, தீர்த்து வை  என்று யாரையாவது கேட்டு பலனுண்டா?  கேட்க எண்ணம் தோன்றுமா?   சாமகானம் பாடும்போது   கைலாயமலையை தூக்க முயற்சித்து  அதன்கீழ் மூச்சுவிடமுடியாமல் நசுங்கிய ராவணனை   ஞாபகம் இருக்கிறதா? அப்படி கர்மவினைகள் நம்மை நசுக்கினாலும் நம்மை அத்தகைய  துன்பத்திலிருந்து விடுவிப்பது ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றே. 

பாடல் 5
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.

நீயே  கதி என்று  சிவனை வணங்கி விரதம் இருக்கும்  சிவனடியார்கள் சிவப்பழமாக துலங்க ஒளியுடன் அழகூட்டுவது   நெற்றியிலும் உடலிலும் அவர்கள் பூசும் பால் வெண்ணீறு.   திருமறை கற்ற  அந்தணர்க்கு  அழகு  அவர்கள் ஓதும்  வேத ஒலி.   அவன் ஒலிக்கும் ஷடங்கம் , ஆறு அங்கங்கள் :சிக்ஷ (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை.பிராம்மணன் வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வேதாத்யயனம் செய்யவேண்டும். அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதுவே  அவனுக்கு அழகூட்டும்.   சிவபெருமானின் திருமுடிக்கு அணியாய்த் திகழ்வது பிறைச் சந்திரன். சிவனடியார்களுக்கு  அடியவர்க்கு அழகூட்டுவது,  ஓம் நமசிவாய  எனும் ஐந்தெழுத்து.

பாடல் 6:
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாடொறு நல்குவான் அலன்
குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

பரமேஸ்வரன்  எல்லோருக்கும் பொதுவானவன்.  அனைவர்க்கும் அருள் புரிபவன்.  அவனது தாளை ச் சரணடைந்தவனுக்கு  முக்திஅளிப்பவன். . ஆகம விதிப்படி ஆச்சாரம் - ஒழுக்கம் இவைகளைக் கொண்டு வாழ்பவர்க்கும், அவற்றில் இருந்து நீங்கி நிற்பவர்க்கும், அவரவர் தன்மைக்கு ஏற்ப திருவருளைப் பெற்றுத் தருவது ஓம் நமசிவாய எனும்  ஐந்தெழுத்து. 

பாடல் 7:
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

எனக்கு  சிவனைப் பிடிக்கும் அவனது அடியார்களை காணும்போது அவனைவிட அவர்களை ரொம்ப பிடிக்கும். அதிலும்   அவர்கள் ஓதும்  ருத்ரம் சமகம் ஒலி  எங்கோ கலசத்துக்கு கொண்டு செல்லும்.  நான் பல சிவாலயங்களில் மணிக்கணக்காக  ருத்ரம் சமகம் சொல்லி மகிழ்ந்தவன்.  தேவாரம் திருவாசகம் ஓதும் ஓதுவார்களை ஆவலோடு பக்தியோடு கேட்பது பிடிக்கும்.  ஓம் நமசிவாய என்று சொல்வது எல்லாவற்றையும் விட  அதிகமாக  பிடிக்கும்.  காந்தம் போல்  நாடிச்செல்ல  தேடி ஓட  வைக்கும்  தன்மைய து ஐந்தெழுத்து. அவ்வளவு  பெருமை வாய்ந்தது. .
பாடல் 8
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

நமது இல்லங்களில் இருளைப்போக்குவது  விளக்கு. ஒளி. தீபம்.  புற  இருளை நீக்க இந்த ஒளி.    அக்னி, ஜோதி ஸ்வரூபம்  சிவன்.   திருவண்ணாமலை ஜோதி, சபரி மலை ஜோதி எவ்வளவு மனதுக்கு இனிமை தருகிறது. ஹரஹரமஹாதேவா, ஸ்வாமியே ஐயப்பா என்று எல்லாம் சொல்லவைத்து இன்பம் தருவது.  எந்த வித ரூபத்தில் ஒளி இருந்தாலும்  மனதுக்கு சந்தோஷம் தருகிறது. தீபாலங்காரம்  பார்க்க பரவசம் தருவது அல்லவா. அதுபோல்  அக  இருளைபோக்குவது   அஞ்ஞானத்தை அழிப்பது ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷர மந்திரம். ஐந்தெழுத்து.

பாடல் 9:
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.

மௌன குருவாக, தட்சிணாமூர்த்தியாக ,  அசையாமல் நன்னெறி  காட்டி  அருள்பவர் மூல முதல்வனான முக்கண் மூர்த்தியான  பரமேஸ்வரன். ஞானமார்கத்தில் முன்னேற சிவபெருமானின் திருவடிகளை அடைய முனையும் அனபர்களுக்கு அரும் துணையாய் விளங்கி உய்விப்பது ஓம் நமசிவாய எனும்  ஐந்தெழுத்து மந்திரம். 

பாடல் 10:
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.



இந்த பத்தாம் பதிகம்   பலஸ்ருதியாக விளங்குகிறது. மான்  மழு  ஏந்திய உமையொரு பாகனின் திருவடிகளை உள்ளம் பொருந்து மாறு தொழுவதற்கு, ஓம் நமசிவாய  என்று நா மணக்க  மனதினிக்க இந்த பதிக பாடல்களை  பாடும், ஓதும்  அன்பர்களை, சிவனடியார் களை  எந்த துன்பமுஜம், தீங்கும், தீமையும் அணுகாது என்கிறார்  திருநாவுக்கரசர். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...