Sunday, October 22, 2017

குடும்ப உறவும் பிளவும்

குடும்ப உறவும் பிளவும் J.K. SIVAN ..

சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு இப்படிக்கூட அறிவுரைகள் கொடுக்கி
றார்கள் என்று அறியும்போது 250 வோல்ட் ஷாக் அடிக்கிறது. உண்மையோ பொய்யோ?. பொய்யாகவே இருக்கவேண்டும் என்றும் அறப்பளீஸ்வரனை வேண்டுகிறேன். நல்லவேளை இப்படிப்பட்ட அம்மா அப்பா நமக்கு வாய்க்க வில்லை. தப்பித்தோம்.

1 என் குழந்தை நீ. நீ நல்லா சாப்பிடணும். ஆரோக்யத்தோடு இருக்கணும் என்று உனக்காக பாடுபட்டு நல்ல சத்தான ஆகாரம் கொடுத்தால் நீ எப்படி மத்த பசங்களுக்கு அதை தானம் செய்கிறாய் .பிச்சுப்பிடுவேன்''

2 சுந்தரம் மாமி பையன் கோபாலைவிட இந்த மாதம் நீ நிறைய மார்க் வாங்க வேண்டும்.

3. ஸ்ரீநிவாசன் வாத்யாரை எப்படியாவது காக்காய் பிடித்து டெஸ்ட்லே என்னென்ன கேள்விகள் வரும் னு மெதுவா கற்றுக்கொள். அவரை வீட்டுக்குக் கூட்டிவா. உனக்குத் தனியாக சொல்லித்தர ஏற்பாடு செய்வோம்.

4. படிச்சுட்டு இந்தியாவிலே யே இருக்கவேண்டாம். கனடாவுக்கு போ. கை நிறைய அங்கே தான் கிடைக்குமாம்

5. ஒருவேளை அங்கேயெல்லாம் போனா நான் வெஜ் தேவைப்படுமே. இப்பவே சாப்பிட பழகிக்கொள். பிழைக்க வேண்டாமா. உடல் முக்யமல்லவா?
6. வெளியே போகும்போது பார்த்து பார்த்து உனக்கு மட்டும் செலவு செய். எல்லாருக்குமாக ஏமாளியாக காசை விரயம் செய்யாதே. மணி கிருஷ்ணன் பணக்கார வீட்டு பையன்.அவனோடு சேர்ந்துக்கோ. அவன் செலவு செய்யட்டும் உனக்கும் சேர்த்து.

7. உன்னை ஹாஸ்டலில் சேர்க்கிறோம். வீட்டில் இருந்தால் நன்றாக படிக்க மாட்டாய்.அப்பா அம்மா எல்லாம் எங்கும் ஓடிப்போயிட மாட்டோம். இங்கேயிருந்து அவ்வளவு தூரம் காலேஜ் போய் படிக்க நேரமும் பிரயாண காசும் அதிகம்.

8.உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ஏதாவது ஒரு விளையாட்டுத்துறையில் பயிற்சி பெற்றால் காலேஜ்ல் கோடா சீட் கிடைக்க வசதியுண்டே. அதுக்காக தான் விளையாட்டு. தேகப்பயிற்சி மண்ணாங்கட்டி ஒன்றும் இல்லை.
9 கூடவே ஏதாவது ஒரு மியூசிக் லைன். தெரியவேண்டியது அவசியம்.சமயத்தில் கை கொடுக்கும். எக்ஸ்ட்ரா சம்பாதிக்க வழி வகுக்கும். வெளிநாட்டில் பிடில், மிருதங்கம் தெரிஞ்ச பசங்க கொள்ளையாக சம்பாதிக்கிறானுங்க.

10. சுகுமாரோடு சேராதே. அவன் சுய கார்யப்புலி . பாலனை தினமும் உன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போகவேண்டாம். அவன் நடந்தே போகட்டும். ஊரிலே இருக்கிறவனை ஏத்திண்டு போக உனக்கு வண்டி வாங்கலே நான். முடிஞ்சா சுந்தரராமன் வண்டியே அவனோடு போ. திரும்பி வா. பெட்ரோல் மிச்சம்.

11. ட்யுஷன் கிளாஸ் போறியே. முதலில் உட்காரு. அந்தப் பெண் அபிராமி எப்படி முதல் இடம்பிடித்து உட்காருகிறது பார். அதை விட நீ அதிகம் கத்துக்கணும்.

12 சுப்புவின் மார்க் என்ன என்று கவனி. உன் மார்க் எவ்வளவு என்று சொல்லாதே.

சில குழந்தைகள் பெற்றோரால் இவ்வாறு வளர்க்கப்பட்டு பெற்றோருடன் பிற்காலத்தில் எப்படி நல்ல உறவு கொண்டு அவர்களை போஷிப்பார்கள் என்பது ஆச்சர்யம். வளர்ந்தவுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி இன்னும் அதிகமாகும் சந்தர்பங்களும் வருகிறதே. பிள்ளையோ பெண்ணோ தூர தேசங்களில் போய் தங்கி படிக்கவோ சென்று பிறகு பெற்றோரை மறந்து, அங்கேயே சம்பாதித்து தனியாக வாழ்கிறதும் ஆச்சரியம் இல்லை. முன் கை நீண்டால் தான் முழங்கை நீளும்.

ஒன்றிரண்டு அபூர்வமான தெய்வீகமான கூட்டுக்குடும்பங்களை தவிர மற்றவை பெரும்பாலும் ஏட்டில் தான் இன்னும் இருக்கிறது. தெரியாததை எல்லாம் டிவி சொல்லித்தருகிறதே .

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே அம்பலவாணக் கவிராயர் என்ன கனவு கண்டார் தெரியுமா. எப்படிப்பட்ட குழந்தைகள் பெற வேண்டும் என்று அறப்பளீச்வரரை வேண்டுகிறார் பாருங்களேன்.

அப்பா அறப்பளீஸ்வரா சதுரகிரி என்ற புகழ்பெற்ற ஸ்தலத்தில் உள்ளவனே, எனக்கு அனுதினமும் காட்சி அளிப்பவனே, எனக்குத்தெரிந்தவரை ஒரு குலத்தில் நல்ல சத் புத்திர புத்ரிகள் பிறக்க, அந்த குலத்தில் முன்னோர்கள் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கவேண்டும் அந்த புண்யவான்களுக்கு தான் . நல்ல பிள்ளை பிறக்கும். அந்த பிள்ளை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

1 யோக ஜாதகன் என்று ஜொசியனால் புகழப்பட வேண்டும்.
2 கொஞ்சம் கூட சுணக்கம் இல்லாமல், தந்தை, தாய், ஆசிரியன், சொல் தவறாமல் நடக்க வேண்டும்,
3 குறை இல்லாதபடி, மூத்தோர், நீத்தோருக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஆற்று பவனாக இருக்கவேண்டும்.
4. தன நற்செயல்களால் மற்றோரின் மனமார்ந்த ஆசியுடன் நீண்ட ஆயுள் பெற வேண்டும்.
5 எல்லோருடனும் எங்கே எப்படிப்பழக வேண்டும் என்று இங்கிதம் அறிந்தவனாக இருக்க வேண்டும்.
6 இனிய ஸ்வபாவம் கொண்டவனாய் அமைய வேண்டும்.
7கல்வி கேள்விகளில் தேர்ந்தவனாக இருக்க வேண்டும்,
8 தனக்கென வாழா பிறர்க்குறியாளனாக இருத்தல் அவசியம்.
9 தான தர்மத்தில் ஈடுபாடு வேண்டும்
10. இறைவனிடத்தே நீங்காத பக்திமானாக விளங்க வேண்டும்
11 சன்மார்க்கம் தெடுவொரைச் சார்ந்து சத் சங்க ஈடுபாடு இருக்கவேண்டும்.
.
''நன்மக்கட்பேறு''

தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலுந
தன்மமிகு தானங்கள் செய்தலுங் கனயோக
சாதக னெனப் படுதலும்
மங்குத லிலாததன் றந்தைதாய் குருமொழி
மாறாதுவழி பாடு செயலும
வழிவழி வருந்த மாதுதேவ தாபத்தின்
மார்க்கமுந் தீர்க்கா யுளும்
இங்கித குணங்களு வித்தையும் பத்தியு
மீகையுஞ் சன்மார்க் கமு
மிவையிலா முடையவன் புதல்வனா மவனையே
யீன்றவன் புண்ய வானாம்
அங்கச விரோதியே சோதியே நீதிசே
ரரசனெம தருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே.

இப்பவாவது பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி எதாவது சிந்தனை செய்ய அவசியமோ அவகாசமோ இருப்பதாக உணர்கிறோமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...