Saturday, October 14, 2017

தேனு புரீஸ்வரர் ஆலயம்





​​
​யாத்ரா விபரம் - J.K. SIVAN

தேனு புரீஸ்வரர் ஆலயம் ​

புராதன​ கோவில்களுக்கு செல்லும்போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோஷம் குடி புக காரணம் அங்கே வியாபித்துள்ள அநேக நல்லாத்மாக்களின் கண்ணுக்குத்தெரியாத வாசம் தான். ஆயிரம் வருஷங்களில் எத்தனை மஹான்கள் வந்து பூஜித்த, வழிபட்ட புண்ய ஸ்தலம். அவர்கள் சுவாசித்த பிராணன் என்றும் அங்கே காற்றில் நிலையாக கலந்திருக்கும். இதையே ஆங்கிலத்தில் வைப்ரேஷன் (vibration ) என்கிறோம்.​ நிறைய பேர் பிரகாரத்தில் அமர்ந்து த்யானம் செய்வது மனது பூரிப்படைய தான். ​

சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம், காமதேனு பசுவின் கொம்பு வடிவில் அமைந்துள்ளது. சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி​ அபூர்வமானது.

கபில ரிஷி முக்தியடைய சிவனை நோக்கி தவமிருந்தார். அவரிடமிருந்த சிவலிங்கத்திற்கு அன்றாட பூஜை. ஒருநாள் இடது கையில் சிவலிங்கத்தை பிடித்து வலது கையில் பால் அபிஷேகம் செ​​ய்ததால் தோஷம் வந்தது. இடது கையில் சிவனை தொடலாமா? மோக்ஷம் கிடைக்கவில்லை. சித்தேரி எனும் கிராமத்தில் ஒரு பசுவாக ஜென்மம் எடுத்து பிரார்த்தனை செய்து தினமும் தனது பாலை ஒரு புற்றின் மேல் சொரிந்தது. ஊர் ராஜா விஷயம் அறிந்து அங்கே தோண்டி தோன்றியது தான் இப்போதுள்ள சிவலிங்கம்.
ஆரம்பத்தில் ராஜா கட்டின கோவிலில் மூலவர் சித்தேரிநாதர். அம்பாள் நம்பிராட்டியார்.

சித்தேரி தான் இப்போ​து ​ ராஜகீழ்ப்பாக்கம்​ பகுதியில் மாடம்பாக்கம்​. பட்டயங்களில் இந்த ஊர் உலகுய்யவந்த சோழ சதுர்வேதி மங்கலம் என பெயர் கொண்டது. இப்போது இந்த பெயர் சொல்வதற்குள் பஸ் போய்விடும். மாடம்பாக்கம் எல்லோரும் அறிந்த பெயர்.​ மூலவர் தேனு புரீஸ்வரர். காமதேனுவாக கருதப்படும் பசு, கபிலர் அவதாரம். எனவே தேனு புரீஸ்வரர். அம்பாள் தேனுகாம்பாள். ​​ ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய ஆலயம். கஜப்பிரஷ்ட (தூங்கானை) விமானம்​. அருகே சித்தர்கள் வாழ்ந்த இடம் சித்தர் பாக்கம், இப்போது சித்தல பாக்கம். ​

​இந்த ஆலயத்தை ரெண்டாம் பராந்தக சோழன் கட்டியதாக வரலாறு. அவனுடைய இன்னொரு பெயர் தான் பிரபலமான சுந்தர சோழன். ராஜராஜன் அப்பா. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கற்றளி கோவிலாகியது.

இந்த கோவில் செல்பவர்கள் மறக்காமல் பார்க்கவேண்டியது ஒரு தூணில் உள்ள உக்கிர சரபேஸ்வரர். நரசிம்மனை கீழே சாய்த்து கோபத்தை அடக்குவது தத்ரூபம். படம் இணைத்திருக்கிறேன். ஒவ்வொரு இறக்கையிலும் துர்கா, பிரத்யங்கராவையும் காணலாம்.

​மாடம்பாக்கம் ​ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்​ கோவில் கிழக்கு தாம்பரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மாடம்பாக்கம்​ கிராமத்தில் உள்ளது. தாம்பரம் - வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.

​கர்பகிரஹத்தில் ​ சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் ​ ஸ்வயம்பு லிங்கம் தேனுபுரீஸ்வரர். அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி​. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர்​.

திருப்புகழ்-பாடல் 701​ மாடையம்பதி என்று மாடம்பாக்கம் என்று அருணகிரிநாதர் காலத்திலேயே பேர் பெற்றது. கீழே திருப்புகழை படியுங்கள்.
தோடு றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

​மிக மிக முக்கியமான ஒரு விஷயம். மறக்காதீர்கள். இந்த ஆலயத்தை அடுத்து பதினெட்டு சித்தர்கள் ஆலயங்கள் உள்ளன. அதில் சேஷாத்திரி ஸ்வாமிகளின் பிருந்தாவன அதிஷ்டானமும் உள்ளது. மகா மேரு சக்திவாய்ந்தது. அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம். சேஷாத்திரி ஸ்வாமிகள் சூக்ஷ்ம சரீரத்தில் பக்தர்களுக்கு இன்னமும் அருள்பாலிப்பது விசேஷம்.​



​கோவில் நேரம்: ​காலை 07:00 - 12:45 & மாலை 04:00 - 08:30 தொடர்புக்கு 04366-238818 , 04366-239700 , 94427-14055

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...