Thursday, October 19, 2017

உத்தவ கீதை 5

உத்தவ கீதை 5 - J.K. SIVAN
தத்தாத்ரேயரின் 24 குருமார்கள்

யயாதியின் பிள்ளை யது, ஆனந்தமயமாக இருந்தான். அடடா இது போல் ஒரு சிறந்த குருவை சந்தித்ததே இல்லையே என்று சாஷ்டாங்கமாக தத்தாத்ரேயர் பாதங்களில் விழுந்து வணங்கினான். அடுத்து அவர் தனது 16வது குரு யார் என்று சொல்வதற்கு காத்து கிடந்தான்.

''மகனே யது , எனக்கு கிடைத்த இருபத்து நாலு குருமார்களை பற்றி சொல்கிறேன் .என்றேன். '' வா, நடந்து கொண்டே பேசுவோம்'' என்று ரிஷி தத்தாத்ரேயர் வனத்தில் நடக்க தொடங்கினார்.
யது கை கட்டியவாறு அவரை தொடர்ந்தான்.

''யது, இது வரை எனது பதினைந்து குருக்கள் யார் யார் என்று சொன்னதை விட இனி சொல்வதை கவனமாக கேள்.

எளிதாக கிடைக்கிறதே என்று ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டியிருந்த புழுவை தின்ற ஒரு மீன் எனக்கு நீதி புகட்டிய பதினாறாவது குருவாகும். உலகமே ஒரு தூண்டில் புழு என்பதை கவனத்தில் வைத்து எந்த உலக ஆசா பாச இச்சையிலும் சிக்காமல் இருக்க என் குரு மீனிடம் கற்றுக்கொண்டேன்.

இருவரும் நடந்து செல்கிறார்கள். நாம் அவர்களது சம்பாஷணையை தொடர்ந்து கேட்டு தத்தாத்ரேயரின் பதினேழாவது குரு யார் என்று அறிந்து கொள்வோமா?

நாம் இதுவரை படித்திராத ஒரு அற்புத படைப்பு இந்த தத்தாத்ரேயரின் 24 குரு சமாச்சாரம். இந்த மாதிரி உத்தியை படைத்த அந்த மஹா கலைஞனுக்கு வேத வியாசனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். பதினாறு குருமார்களை பற்றி இதுவரை தத்தாத்ரேயர் கூறினார் அல்லவா. இனி மீதி ஏழு குருமார்கள் அவருக்கு என்ன படிப்பினை, உபதேசம் அளித்தார்கள் என்று அறியப்போகிறோம்.

தத்தாத்ரேயர் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்தார். யது அவர் காலடியில் அமர்ந்து அவரது கால்களை பிடித்து வீட்டுக் கொண்டிருந்தான்.

தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறுகிறார்.

''இதிலிருந்து என்ன தெரிகிறது எனக்கு என்றால், சுவாமி, ''குரு என்பது மானிட உருவில் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று, சரிதானே?''

''ஏன் எந்த மானிட ரூபத்திலும் கூட குரு இருக்கலாமே! ஒரு விலை மாது கூட எனக்கு 17வது குரு தான்.

'' குரு மஹாராஜ் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒரு பட்டணத்தில் நான் அறிந்தது இது. ஒரு விலைமாது தனது பண வருவாய்க்காக ஆசையாக, நேசமாக இருப்பதாக ஒரு வாடிக்கையாளனிடம் நடிக்கிறாள். அவளை நாடி வருவோரும் அதை உண்மையென்று நம்புகிறார்கள் என்பது மட்டுமல்ல. எவ்வளவு அவளிடம் அனுபவிக்க முடியுமோ அதை விரைவில் தேடி அனுபவித்து அல்ப திருப்தி அடைந்தபின் பிறகு அவளை விட்டு விலகுகிறார்கள். இருவருமே போலிகள். இருவருக்கும் உண்மையான திருப்தி எதுவோ அது கிடைக்காதவர்கள். இருவரும் சந்தோஷம் இல்லாமலேயே அதை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். உலகில் ஒழுக்கம், தன்மானம், நேர்மை, இந்திரிய கட்டுப்பாடு எவ்வளவு அவசியம், மாயை எப்படி திருப்தியை அளிப்பதாகமனிதர்களுக்கு போக்கு காட்டுகிறது என்று என் குரு மூலம் கற்றுக்கொண்டேன்.

வாஸ்தவம் குருமஹராஜ். என் அகக்கண்ணை திறந்துவிட்டீர்கள். உங்களது 18 வது குரு யாரோ?''

''பெரிதாக யாருமோ எதுவுமோ இல்லையப்பா. ஒரு சின்ன பறவை.

ஒருநாள் அதிகாலையில் அந்த சின்ன பறவை அதன் வாயில் ஒரு தவளையை கவ்விக்கொண்டு பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த சில பெரிய பறவைகள் இதை கவனித்து விட்டு அந்த சின்ன பறவையை துரத்தின. தன்னால் அந்த பெரிய பறவைகளைச் சமாளிக்க முடியாது, வேகமாக பறந்து தப்ப முடியாது என்று தெரிந்த அடுத்த கணம் அந்த சின்னப் பறவை என்ன செய்தது தெரியுமா?

அதன் வாயில் இருந்த தவளையை கீழே போட்டு விட்டு உயிர் தப்ப பறந்து சென்று விட்டது. பெரிய பறவைகள் அந்த தவளையை நோக்கி பாய்ந்தன. சின்ன பறவை உயிர் தப்பியது. ஆஹா , உயிர் வாழ சில தியாகங்கள் அவசியம் என்று உணர்த்தியது அந்த சின்ன பறவை. அதாவது சின்னப்பறவையான அந்த எனது 18 வது குரு. போதுமா?

'' சின்ன பறவை ஒரு குரு!

சுவாமி நீங்கள் சிறந்த மகான். யாராவது ஒரு மஹா பண்டிதர், வயதானவர் தான் குருவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று உணர்ந்தேன். மேலே சொல்லுங்கள்''

''அப்படியெல்லாம் இல்லை. அவசரப்படாதே . 'வயதானவர்களும் குருவாக முடியும், பிறந்த குழந்தையும் குருவாக முடியும். எனது 19வது குருவே ஒரு பிறந்த குழந்தைதான்!''

பிறந்த சின்ன சிசு என்ன செய்கிறது? பசிக்கும்போது அழுகிறது. தாய் ஓடி வருகிறாள். அதை அணைத்து அன்போடு பாலூட்டுகிறாள். வயிறு நிறைந்தவுடன் அது மேற்கொண்டு பாலை நாடவில்லை முகத்தை
திருப்பிக்கொண்டது. . மீண்டும் தேவையான போது தான் அழுகிறது. பாலைத் தேடுகிறது. தேவைக்கு மட்டுமே , தேவையானதை மட்டுமே, தேடு, நாடு. தேவை பூர்த்தியான பிறகு அதை நாடாதே. தேவையல்ல என்று உணர் என்று எனக்கு கற்பித்தது இந்த சிசுவான பத்தொன்பதாவது குரு.

'மஹா சுவாமி. ஒரு குழந்தை கூட குரு என்பது ஆச்சர்யமாக விளங்கியது''. மேலே சொல்லுங்கள். இன்னும் நான்கு குருமார்கள் யார் யார்?

''ஒரு சிறு குழந்தையின் தாயும் கூட எனக்கு 20வது குருவாக அமைந்தவள் தான். ஓரிடத்தில் பிக்ஷை எடுத்தேன். ஒரு வீட்டில் ஒரு இளம்பெண் என்னை உள்ளே அழைத்து அமரச்செய்து ''சுவாமி, கிடுகிடுவென்று சமையல் செய்கிறேன். இருந்து சாப்பிடுங்கள்'' என்றாள். நானும் அமர்ந்தேன் ஜபம் செய்ய ஆரம்பித்தேன். . வேகமாக அவள் சமையலில் ஈடுபட்டாள் . கை நிறைய கண்ணாடி வளையல்கள் கல கல என்று சப்தம் செய்தது எனக்கு இடையூறாக இருக்குமே என நினைத்து ஒவ்வொன்றாக களைந்தாள் . பிறகு ஒரே ஒரு வளையலுயுடன் சமையலை முடித்தாள். சூடாக உணவை எனக்கு அளித்தாள். நான் த்யானத்தில் இருந்தபோது அவள் வளையல்கள் சப்தம் செய்தன என்பதற்காக ஒவ்வொரு வளையலாக கழட்டி கடைசியில் ஒரே ஒரு வளை மட்டும் இருந்தால் அது சப்திக்காது என்பதால் அதை மட்டும் அணிந்து எனக்கு புத்தி புகட்டினாள் .

''புரியவில்லையே . இதில் என்ன தத்துவம் சுவாமி?

''கூட்டம் சேர்ந்தால் அமைதியில்லை. தனித்திரு என்ற ஞானம் புகட்டிய அவள் எனது 20வது குரு''. யது ஆ வென்று வாயைப் பிளந்தான்.

''அடுத்த குரு யாரென்று சொல்கிறேன் கேள்"

என் 21 வது குரு ஒரு பாம்பு. அது தனக்கு வீடு என்று ஒன்றில்லாமல் வேறு ஜந்து கட்டிய புற்றில் போய் வசிக்கிறது. அல்லது ஏதாவது ஒரு மரத்தின் பொந்து, சந்துகளில், இடுக்குகளில் வசிக்கிறது. உனக்கென்று சாஸ்வதமாக ஒன்றும் தேவையில்லை. எங்கு எது கிடைக்கிறதொ அதை திருப்தியாக அனுபவிக்க கற்றுக் கொள்'' என்பது தான் அந்த இருபத்தொன்றாவது குருவான பாம்பு மூலம் கற்றது.

''எப்படி சுவாமி போகுமிடத்தில் எல்லாம் எதை அறிகிறீர்களோ, உணர்கிறீர்களோ அவை யாவும் குருவே என்ற மனப்பான்மை எப்படி உண்டாயிற்று?

நான் ஊர் ஊராக போய்கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் ஒரு அம்பு செய்பவன் கண்ணில் பட்டான். அவன் கூரான உலோக அம்புகளை உன் போல ஒரு ராஜாவுக்காக தயார் செய்துகொண்டிருந்தான். அவன் தயார் செய்த அம்புகளை ராஜாவோ அவனது சேனையோ அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். ஏன்? அவனது பொறுமையும், ''செய்வன திருந்தச் செய்'' என்ற கவனம் அவன் உருவாக்கிய அம்புகளில், ஆயுதங்களில் கூர்மையாக அழுத்தமாக நம்பகமானதாக இருந்ததால். எதை செய்தாலும் தன்னமலற்ற முழு கவனம் வேண்டும். பிறர்க்குபகாரமாக அது அமையவேண்டும் என்று செய்யும் தன்மை அவசியம் ஒருவனுக்கு இருக்கவேண்டும் என்று எனக்கு உணர்த்திய அவன் எனது 22வது குரு

ராஜா யதுவும் ஸ்ரீ தத்தாத்ரேயரும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கவனம் மேலே சென்றுகொண்டிருந்த ஒரு சிலந்தியின் மீது போனது. தத்தாத்ரேயர் இரு கரம் கூப்பி அந்த சிலந்தியை வணங்கினார்.

''சுவாமி, என்ன செயகிறீர்கள் நீங்கள்?

'' இதோ இந்த சிலந்தியும் எனது ஒரு குரு. அதாவது 23வது குரு''.

''எவ்வாறு சுவாமி? சிலந்தி உங்களுக்கு என்ன போதித்தது ?''

''அந்த சிலந்தி அழகாக இழை இழையாக ஒரு வலையை தனக்காக பண்ணிக்கொள்கிறது. அதில் வாழ்ந்தது. ஒருநாள் வெளியே வந்தது. ஒரு பெரிய சிலந்தி அதை பார்த்து விட்டது. அதை விழுங்க துரத்தியது. சிறிய சிலந்தி ஓடி வந்து தனது வலையில் நுழைந்தது. இழைகளில் கால் சிக்கியதால் அது அதன் வலையில் சிக்கியது. துரத்தி வந்த பெரிய சிலந்தி எளிதில் அதை அடைந்து விழுங்கியது. எதில் என்ன கற்றுக்கொண்டேன்? நீ விரித்த வலை உனக்கே ஆபத்தாக மாறலாம்.''

''அப்பனே கடைசியாக ஒரு குருவைப்பற்றி சொல்கிறேன் கேள். ஒரு புழுவை ஒரு குயில் பிடித்துக்கொண்டு போய் தனது கூட்டில் வைத்துக்கொண்டது. குயில் பாடுமல்லவா. அதன் இனிமையில் தன்னை மறந்து புழு தன்னை எதிர்நோக்கி இருக்கும் பேர் ஆபத்தை மறந்து மகிழ்ந்தது. ஏன் என்றால் குயிலின் ஆகாரம் அந்த புழு. அந்த புழுவின் மனத் திண்மை என்னை உலுக்கி விட்டது. சாவின் எதிரிலும் சந்தோஷம் அடைய ஒரு வைராக்கியம் வேண்டும். நாதத்தின் எழிலில் நரகமே கூட சுவர்க்கமாகும் என்று எனக்கு போதித்த 24வது குரு அந்த புழு.

''ஏன் சுவாமி 24 குருவை மட்டுமே சொல்லி நிறுத்திவிட்டீர்கள். இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதே?''

''அப்பனே , இது வரை நான் சொன்ன குரு விஷயத்தில் உன்னால் கடைப்பிடிக்க முடிந்ததை முதலில் ஆரம்பிக்க செயல்பாடு. உன் வாழ்நாளில் இதை நீ புரிந்து கொண்டு செயல்பட்டால் மீதிக்கு அவசியம் ஏற்படாது என்பது என் எண்ணம்.இந்த 24 குருமார்கள் சொன்னதை, உணர்த்தியதை, நன்றாக அறிந்து அதைக் கடைப்பிடிக்கவே உன் வாழ்நாள் போதாது. அப்புறம் மீதி குருமார்கள் பற்றி தெரிந்து கொள்.

நமஸ்காரம் பண்ணிவிட்டு யது வெளியேறும்போது முற்றிலும் மாறுபட்ட மனிதனாக இருந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. மிருகங்களை வேட்டையாட வந்தவன் மனத்தைக் கோட்டைவிட்டு குருவின் ஞானத்திலேயே மனத்தை புதிதாக நிரப்பிக்கொண்டு அவர் போதனையை செயலாக்க நடந்துகொண்டிருந்தான்.
நாமும் முடிந்தவரை, முடிந்ததை ட்ரை பண்ணுவோமே.



(உத்தவ கீதை தொடரும்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...