Sunday, October 15, 2017

சிவ சாயுஜ்ய பதவி

பேசும் தெய்வம் - J.K. SIVAN

சிவ சாயுஜ்ய பதவி

''என்ன சார் இன்னிக்கு திடீர்னு காதுலே பஞ்சு?'' என்றார் ராமரத்னம். அவர் பக்கத்து ரெண்டு மூன்று தெருவிலே புதுசா வீடு வாங்கிக் கொண்டு நண்பரானவர். ஒரு ரிட்டையர்டு வருமான வரி அதிகாரி

பட்டாசு சத்தம் தூக்கி வாரி போடறது. பக்கத்துலே இருக்கிற பிளேட்ல (FLAT) எட்டு குடும்பம். சின்ன பசங்க ஜாஸ்தி. நாலு நாளாகவே கண்ட கண்ட நேரத்திலே காது செவிடுபடர பட்டாசு. எவ்வளவு காசு கரியாரது. வயசானவர்கள் வியாதிஸ்தர்கள், தூக்கம் வர மருந்து சாப்பிடறவர்கள் கதி என்னாறது? யாரையும் கேக்க முடியாதே. ஒண்ணும் சொல்லமுடியாத நிலையில் இந்த ''பஞ்சா' பகேசன் தான் துணை'' என்றேன்.

''இந்தாங்கோ உங்களுக்கு பெரியவா பிரசாதம்.''

'' அடடா. காஞ்சிபுரம் போயிருந்தேளா ''

''ஆமாம். ஒருமணி நேரம்போல பெரியவாளை கண்ணாடி வழியா பார்த்து தியானம் பண்ணினேன்.
அது சரி உங்களுக்கு பாலூர் கோபாலன் என்கிறவரை பத்தி பெரியவா பேசினான்னு ரெண்டு நாள் முன்னாலே ஒரு புஸ்தகத்தில் படிச்சேன். அது பத்தி தெரியுமா''.

''ஓ அவர் பெரியவாளுடைய சிறந்த பக்தர். அவரைப்பத்தி ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்கோ.''

''ரொம்ப காலத்துக்கு முன்னே மஹாஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்தப்போ ஒரு ஞாயிற்றுக்கிழமை. தரிஸனத்திற்கு ரொம்ப பேர் ஞாயிறுக்கிழமையானா வந்துடுவா. கூட்டம் ஜாஸ்தி.. ஒவ்வொருவராக நமஸ்கரித்து பெரியவாளுடைய ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு நகர்ந்தனர்.

ஒரு நடுத்தர வயது தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கைகூப்பினார்கள் . பெரியவா உற்று பார்த்தவர், அந்த பக்தரை பார்த்து சட்டென்று '' யாரு நீ . பாலூர் கோபாலன் தானே ? ஒரு வருஷத்துக்கு முன்னால் இங்கே என்னவோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே ..... இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சொல்லி பெரியவா சிரித்தார்.

''பெரியவா ஆமாம் நான் தான் அது. உங்க கருணையாலே நாங்க இப்போ பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளி) போஜனம் செய்ய ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! கிராமத்திலே வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது ...... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே ஒருமாதிரியாக தங்கறது.
எல்லாம் உங்க அனுகிரஹத்தாலே, செய்ய சொன்ன அதிதி போஜன மஹிமையாலே. பெரியவா .விடாம தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” தடாலென்று கீழே விழுந்து நமஸ்கரிக்க பக்தர் மூச்சு விடாமல் கண்களில் நீர் மல்க பதில் சொன்னார். அவர் மனைவி ஆனந்தக் கண்ணீருடன் கை கூப்பி நின்றாள்

'' பேஷ் ... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா சரிதான். அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே ... அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?”

”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள் கோபாலன் மனைவி .

பெரியவா முகத்தில் ஸந்தோஷ புன்னகை. ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”

மகா பெரியவாவின் வார்த்தைகளை அங்கிருந்த அனைவருமே சப்தமின்றி செவி நிறைய கேட்டு மகிழ, கும்பல் நெரிசல் அதிகமாகியது. பெரியவாளை சூழ்ந்து கொண்டவர்கள் அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் அப்படியே தரையில் எதிரே அமர்ந்தது.

''அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?” - ஒருவர் கேட்டார்.

“ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!”

கூட்டத்தில் ஒரு பக்தர் எழுந்து நமஸ்கரித்து விட்டு, “என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாள் .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்” என்றார்.

அவரை ஜாடையில் அமரச்சொன்னார் பெரியவர். கப் சிப் எல்லோரும் அமைதி. பெரியவா பேசப்போகிறா என்று புரிந்தது.

”ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம். அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாலே , இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்! சொல்றேன் கேளுங்கோ ...

கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு ஒண்ணு .அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபதினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது. கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார்
பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. குமரேசன் செட்டியாருக்கு அப்போது ஐம்பது ... ஐம்பத்தைந்து வயசு இருக்கலாம். ஆச்சிக்கு ஐம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் “சிவ...சிவ” ..... ”சிவ...சிவ” ங்கற நாமஸ்மரணம் தான் வந்துகொண்டிருக்கும். வேற பேச்சே கிடையாது.

செட்டியார் வீட்ல ஒரு ஒத்தைமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சியை ஒட்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்தியம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் காவேரி ஸ்னானத்தை முடிச்சிண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. அப்டி ஒரு அந்நோன்ய தம்பதி அவா. அவர்களைப்பத்தி ஒரு சம்பவம் சொல்லப்போறேன்''
.
எல்லோரும் சிலையாக ஸ்வாமிகள் என்ன சொல்லப்போகிறாரோ என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க

“பல வருஷங்களா அந்த தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும், அவாளுக்கெல்லாம் முகம் கோணாம, வீட்டுக்கூடத்துல ஒக்காத்திவெச்சு, போஜனம் பண்ணி வெப்பா.

சிவனடியார்களை வாசல் திண்ணையில் ஒக்கார வெச்சு, ரெண்டு பேருமா சேந்து கால் அலம்பிவிட்டு, வஸ்த்ரத்தால் தொடச்சு விட்டு, சந்தனம் குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.
கிரஹத்திலே சமையல்காரர் ஒத்தரையும் வெச்சுக்கல! எத்தன அதிதி வந்தாலும் ஆச்சியே, தன் கையால சமச்சுப்போடுவா.

இதுலே முக்கியமான விஷயம் என்னன்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவர்கள் கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டுவந்து பண்ணிப்போடுவா! அப்டி ஓர் ஒஸந்த மனஸு!

இதெல்லாம் எனக்கு எப்டித்தெரியும்ன்னு யோசிக்கிறேளா? . அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர், குமரேசன் செட்டியாரோட கணக்கு பிள்ளை. அவர்தான் சாகவாசமா
இருக்கறச்சே இதையெல்லாம் வந்து சொல்லுவார்! இப்போ புரிஞ்சுதா?”

சிலைகளாக தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பக்தர்களை சுற்று முற்றும் பார்த்து விட்டு தொடர்ந்தார் மகா பெரியவா.

”ஒரு நாள் நல்லமழை. உச்சிவேளை. வாசலில் வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும் அன்னிக்கி. கொடயப்புடிச்சிண்டு மஹாமஹக் கொளத்துப் படிகள்ல எறங்கிப்பார்த்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு
ஒக்கார்ந்திருந்தார். அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அந்த சிவனடியார் நன்னாவாசிச்சவர். தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார்.

கால அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அழைச்சுண்டு வந்து ஒக்கார வெச்சார் செட்டியார்.நமஸ்காரம் பண்ணினார்கள் செட்டியார் தம்பதியர். ஆச்சி அந்த சிவனடியார் கிட்டப்போய், “ஸ்வாமிக்கு என்ன காய்கறி
பிடிக்கும் சொல்லுங்கோ. கடைக்குப்போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்” என்று கேட்டதுக்கு சிவனடியார் ''நல்ல பசி காத்திருக்க நேரமில்லை'' என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து கொல்லப்பக்கம் போய்ப்பார்த்தார்.
கொல்லையிலே நிறைய முளைக்கிரை மொளச்சிருக்கிறதைப் பார்த்தார். உள்ள வந்தார். ஆச்சியை க் கூப்ட்டு, ” வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீரக் கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணா போதும் ''

கைலே ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப்போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆகிண்டே போச்சு. சிவனடியாருக்கோ நல்ல பசி என்கிறதாலே தானும் போய் பறிச்சா, சீக்ரமா வேலை முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு, கீர பறிக்கப்போனார் சிவனடியார்.

ரெண்டுபேரும் கீர பறிக்கறதை கொல்லைப்புற வாசல்படியிலே நின்று ஆச்சி கவனித்தாள் .பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரத்தட்டை உள்ளே கொண்டுவந்து வெச்சா! உடனே ஆச்சி என்ன பண்ணினா தெரியுமா? ரெண்டு தட்டுக்கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பத் தனித்தனியா மூட்டினா.
ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரயப்போட்டு அடுப்பிலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா.

அதப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு ஒரே ஆச்சர்யம்! “என்னடா இது .ரெண்டும் ஒரே மொளக்கீர தானே பறிச்சோம். ! ஒரே பாத்ரத்லே போட்டு சமைக்காம, ஏன் இப்படித் தனித்தனியா அடுப்பு மூட்டி, சமைக்கிறா?''. சிவனடியார் கொழம்பிப்போனார்.

சித்தநாழி கழிச்சு, கீர வாணலி ரெண்டையும் கீழே இறக்கி வெச்ச அந்த அம்மா, சிவனடியார் பறித்து வந்தக்கீரய மட்டும், தனியா எடுத்துண்டு போய் பூஜை அறையிலே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா.

கூர்மையா நடக்கறதை எல்லாம் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்குப் பெருமை பிடிபடல்லே!
''ஓஹோ, நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த செட்டியார் அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார்.

போஜனம் முடிஞ்சுது. இந்த நிவேதனம் விஷயமாக ஆகிஸி கிட்டேயே கேட்டுடணும் னு சிவனடியார் முடிவு பண்ணிட்டார்.''

பெரியவா சொல்வதை நிறுத்தி , எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் தொடர்ந்தார்.
ஆச்சி கிட்டே '' நான் பரிச்ச கீரை சமையல் பண்ணினியே அதை மட்டும் எதுக்கு ஸ்வாமிகிட்டே நைவேத்தியம் பண்ணினே''? என கேட்டுட்டார்.

ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா? ” சுவாமி, கொல்லேல கீர பறிக்கிறச்ச நா பார்த்துண்டே இருந்தேன். என் கணவர் எப்பவும் போல ''சிவ..சிவ’ன்னு சிவ நாமத்தைச்சொல்லிண்டே கீரயப் பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுச்சு. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியமே இல்லே. நீங்க ஒண்ணும் சொல்லாமப் பறிச்சேள். அதனால் தான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு, ஒங்கக்கீரைய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்”ன்னு சொன்னாள்.

சிவனடியாருக்கு என்னவோ போல ஆயிடுச்சு. ரொம்ப சங்கோஜப்பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டி விட்டுப் புறப்பட்டார். அப்டி அன்னம் [சாப்பாடு] போட்ட தம்பதி அவா.''
என்று பெரியவா சொல்லி சில நிமிஷம் அமைதி....... பிறகு

”இப்டி விடாம அதிதி போஜனத்த, பிரதி தினமும் பண்ணிவெச்சிண்டிருந்த அவாளுக்குக கிடச்ச ’பலப் பிராப்தி’ [பிரயோசனம்] என்ன தெரியுமா? சிலவருஷங்கள் கழிச்சு ஷஷ்டியப்தபூர்த்தி [60 வயது பூர்த்தி] எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹாசிவராத்திரி அன்னிக்கு, கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்ல நாலு கால பூஜையிலே ஒக்காந்து தரிஸனம் பண்ணி வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா, தனக்கு ’ஓச்சலா இருக்கு’ ன்னு சொல்லி பூஜ ரூம்ல ஒக்காந்தவ அப்டியே கீழ சாஞ்சுட்டா. பதறிபோய் “சிவகாமி”ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்திலேயே சாய்ஞ்சுட்டார். அவ்ளவுதான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே அவா ரெண்டு பேரும் ஜோடியா “சிவ சாயுஜ்ய”த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சத்துக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கிடச்ச ’பதவி’யப் பாத்தேளா?

இப்பவும் ஒவ்வொரு மஹாசிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நான் நெனச்சுப்பேன். அப்டி அன்னம் போட்ட தம்பதி அவா.''

பெரியவா சொல்லி முடித்த போது அங்கே அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது.


பெரியவா எழுந்தார் “மணி கிட்டத்தட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ .... உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ” கருணையுடன் அனுப்பி வைத்தது தெய்வம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...