Tuesday, October 10, 2017

மனமே இதைக் கேள்

மனமே  இதைக் கேள்       j.k. sivan                                     

மனதைப் பற்றி சிந்தித்த  மா  மனிதர்கள்,  ரிஷிகள்,  முனிவர்கள், யோகிகள், எல்லோருமே  ஒரே மாதிரியாக  சொல்லும்  ஒரு வார்த்தை  ''மனத்தை அடக்கு''

எப்படி? என்று சில வழிகள் சொல்லிக்கொடுத்தாலும்  பல  யுகங்கள்   ஆகியும், பகவான் பல  அவதாரங்கள் எடுத்து வந்தபோதிலும் மனிதர்களாகிய நம்மை பொறுத்தவரை இந்த மனது அப்படியே தான்  சுதந்திரமாக  மேய்கிறது.  அதை அடக்க ஒரு இடத்தில் கட்டிப் போட வேண்டும்.  அந்த  ஒரு இடம் கிருஷ்ணா  உன்  திருவடியாக இருக்கட்டும்..

''அது''  அப்படி  உன் திருவடியைப் பிடித்துக் கொண்டால்  கிடைக்கும்  சுகமே  தனி.   தேடும்  நிதி, பெருமை,  புகழ், எல்லாமே  வேறில்லை  நீயே''  என புரியவைக்கும்.  எங்கு திரும்பினாலும் என்னை சுற்றி  தேவர்கள் கூட்டம் தான் எனக்கு அருகில் அப்போது கண்ணில் தென்படும்.  தீயவை என்னை விட்டு நீங்கி அந்த இடத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றி வெகு காலம்  ஆகியிருக்கும்.

 ''ஏ,   புலவர்களே  எதை எதையோ  பாடுகிறீர்களே. உங்களுக்கு  நலம் வேண்டுமா?  எங்கே ஆரம்பியுங்கள்  பாட. அந்த பூமாதேவி மணாளன் பக்தவத்சலனை பற்றியே  பாடுங்கள். பாடுவதற்கு விஷயமா  இல்லை?  கிருஷ்ணனைப்  பற்றி நினைத்து,  அவன்  எப்படி அந்த  அசுர கூட்டத்தையே  ஒவ்வொன்றாக  அழித்தான் என்று பாடவே  உங்களுக்கு பல ஜன்மம்  வேண்டுமே.  பக்தி கலந்த கற்பனை குதிரையை தட்டி  பறக்கவிடுங்கள்.

நீங்கள்  அப்படி  அந்த மா மாயன் கிருஷ்ணனைப் பற்றி   பாடினால் என்ன  ஆகும் என்று சொல்லட்டுமா? அஞ்ஞான  இருள்  ஓடும். துன்பம் துயரம் எல்லாம் பறக்கும்.  விண்ணிலுள்ள 
தேவர்களே  உங்களை  ஆச்சர்யமாக  பார்ப்பார்கள். தவம் வேறு எதுவுமல்ல  இதுவே  என புரியும்.   உமாபதி வேறு ரமாபதி வேறு என்ற நினைப்பு ஒழியும். வித்தியாசம்  எழுதும்  '' உ, ர'' ,   என்ற  இரண்டு எழுத்தில்  மட்டுமே, மனதில் அல்ல,   என்று புரியும். ஒன்றே எல்லாம்  என்று உணர்ந்தால்  இன்னொன்றை எதற்காக  தேடவேண்டும்? 

பாரதி இதை எப்படி சொன்னார்  என்று உங்களுக்கு தெரிய வேண்டாமா? இதோ அவரை  ரசியுங்கள்.

மனமே கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே.1
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.2
இங்கே யமரர்சங்கந் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே.3

நலமே நாடிற்  புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே.4
புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே.5

தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர் பார்ப்பார் தவமே.6

தவறா துணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே.7

ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...