Sunday, October 22, 2017

இவள் ஒரு அத்தை.



இவள் ஒரு அத்தை. J.K. SIVAN

வரலக்ஷ்மி என்கிற அத்தை என் சிறுவயதிலேயே எண்ணத்திலிருந்து மறைந்தவள். அவள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் தான் கேட்டிருக்கிறேன். என் அப்பாவின் குட்டி அக்கா. நாலரை அடிக்கு மேல் உயரமில்லையோ? அவளை நான் பார்த்த ஒரே உடை காவி போல் ஒரே துணியில் உடம்பு கழுத்து தலையை சுற்றிய நார்மடி. அதற்கு காவிக்கரை இருந்ததாக ஞாபகம். கிழிசல்களை முடிச்சு போட்டு இணைத்திருப்பாள்.

இடுப்பில் ஒரு கம்பளிப்பை. அது மடி. அவளது ஒரே சொத்தான ரெண்டு இதர நார்மடிகள். விபூதி சுருக்கு பை . அது தான் மணி பர்ஸும் கூட. அதற்குள் ஒத்தை ரூபா நாணயங்கள் நிறைய சேர்த்து வைத்திருப்பாள். ரூபா காகித நோட்டு தொட மாட்டாள். யார் யாரோ எச்சில் பட்டிருக்கும். அலம்ப முடியாது.

அவளுக்கு அதிகம் பல் கிடையாது. ராமநாமமே கல்கண்டு. ஜெபிக்காதவர்களுக்கு எம குண்டு என்பாள். காலை நீட்டி தான் உட்காருவாள். மடக்க முடியாது. அடிக்கடி திருப்பா புலியூர் போறேன் என்பாள். வீடோ வாசலோ ஒன்றுமில்லை அங்கே. யாரோ ஒரு மாமா ஆத்தில் தங்குவாள். அவர்களுக்கு ஏதாவது சித்து காரியம் செய்து கொடுப்பாளோ என்னவோ?

வரலக்ஷ்மி அத்தையை நாங்கள் நாகூர் அத்தை என்று தான் அடையாளம் புரிந்து கொண்டதற்கு காரணம். நாகூர் சுந்தரமய்யர். அவர் நாகப்பட்டினத்தில் ஒரு ஹெட்மாஸ்டர். நிழலாக ஒரு தடவை ரெண்டு தடவை பார்த்தது ஞாபகம் இருக்கிறது. பஞ்சகச்சம். கோட்டு. வழுக்கை தலை. இருந்த சிலவற்றை எல்லாம் சேர்த்து முடித்து பின்னால் ஒரு சிறு குடுமி. அடர்த்தி அற்ற அதை குடுமி என்று அகௌரவப் படுத்தக்கூடாது. சிண்டு என்று சொல்வது சாலப் பொருத்தம்.

சட்டையின் மீது பட்டன் என்றுமே போடாத ஒரு கோட்டு . ஒரே கோட்டு. யாரையும் நேரே பார்த்து பேசமாட்டாராம்.

யார் என்ன கேட்டாலும் ''அது அப்படி இல்லை .. என்ற வார்த்தை தொடரை சொல்லிவிட்டு தான் பேச ஆரம்பிப்பவர்.

நான் நாகப்பட்டினம் சமீபத்தில் சென்றபோது ஏனோ அவர்கள் ஞாபகம் வந்தது. ஒருவேளை அத்தையின் கம்பளிப்பையில் ஒரு எவர் சில்வர் சம்படத்தில் அவள் வைத்திருந்த திராக்ஷை கல்கண்டை அவளுக்கு தெரியாமல் அடிக்கடி கொஞ்சம் சுவை பார்த்த குற்றத்தாலா?

அடிக்கடி அத்தை அந்த சம்படத்தை திறந்து பார்த்து. குறைஞ்சிருக்கு. இன்னும் கொஞ்சம் வாங்கணும் என்பாள். அதன் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. அத்தை எங்கள் வீட்டுக்கு கடைசியாக கோடம்பாக்கம் வந்தபோது கொண்டுவந்து என் அப்பாவிடம் கொடுத்த ஒரு சொத்து ''வீரா கோட்டு''.??!!

படிக்கும்போது புரியாது சொன்னால் தான் விளங்கும். அத்தையின் ஒரே மகன் வீராசாமி நுரையீரல் வியாதியில் 25- 26 வயதில் இறந்தான். அவனை இழந்த சோகத்தில் சுந்தரமய்யர் படமாகி சுவற்றில் தொங்க, அத்தை வீடு வாசல் இழந்து ஒவ்வொரு கோவிலாக சென்று கோலம் போட்டு பாடி, காலம் தள்ளி கோடம்பாக்கம் எங்கள் வீட்டுக்கும் ஒரு நாள் வருவாள்.

''இது உனக்கு. வீரா ஞாபகமாக வச்சுக்கோ'' என்று என் அப்பாவிடம் கொடுத்த ஒரு பழைய ''அல்பாகா'' மெத்து மெத்து பிரவுன் கலர் கோட்டு .

அப்பா இல்லாத நேரத்தில் பெட்டியை திறந்து அந்த பெரிய வீரா கோட்டை நான் என் நிஜாருக்கு மேலே போட்டுக்கொண்டு ஆடி இருக்கிறேன். தொள தொள வென்று இருந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமான நேரம் அது.

அத்தையோடு கையைப் பிடித்துக்கொண்டு கோடம்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் அறுபத்து மூவர் சென்று அநேக நாயன்மார்கள் ஊர்வலம் வந்ததை பார்த்து இருக்கிறேன். அரையணாவுக்கு பொட்டுக்கடலை வாங்கி கொடுத்து மைலாப்பூர் வரையில் ஆறு ஏழு வயதில் நடக்க வைத்திருக்கிறாள்.

நான் பார்த்த அவள் இருந்த ஒரே போட்டோவில் வரிசையாக ஐந்து ஆறு பேர் உட்கார்ந்திருக்க, கோட்டுப்போட்ட சுந்தரம் அய்யர் பின்னால் கோபமாக சிரிக்காமல் இழுத்து போர்த்திக்கொண்டு வலது பக்க ஓரத்தில் குள்ளமாக மூக்கில் அவளைவிட பெரிய புல்லாக்கு, காதில் ஏதேதோ நிறைய தொங்க, தலையை தார் ரோடு போல் கருப்பாக எண்ணெய் தடவி ''பிரஸ்'' பண்ணி வாரிக்கொண்டு சிலையாக நின்றாள் . போட்டோ எடுக்க எவ்வளவு நேரம் அப்படி அந்த போட்டோகிராபர் நிற்க வைத்தானோ.

ஒரு தடவை பாண்டிபஜாரில் இருந்த ராஜகுமாரி தியேட்டருக்கு நடத்தி கூட்டிச்சென்று '' எம்.கே. ராதா நடித்த போர்ட்டர் கந்தன் '' படம் பார்த்ததில் சீர்காழி பாடிய ''பகவானே மௌனம் ஏனோ'' இன்னும் காதில் ஒலிக்கிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...