Friday, October 20, 2017

இரு பெருசுகள் பேச்சு

இரு பெருசுகள் பேச்சு J.K. SIVAN

வழக்கமாக நங்கநல்லூர் தேசிய பூங்காவில் ஒரு ஜமாபந்தி ஆறு மணிக்கு கூடும். பெருசுகள் மாநாடு. ஆராவமுத அய்யங்கார் வீட்டு நாய்க்குட்டியிலிருந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் வரை எல்லாம் வாய்கிழிய பேசும். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் ஒவ்வொன்றும் பேசுவது கேட்க வேடிக்கையாக இருக்கும்.

சாம்பு ஏன் இன்னிக்கு டல்லா இருக்கே. ஆத்துக்காரியோடு சண்டையா வழக்கம்போல?

இல்லேடா சாமா. நானே உன்னை கேக்கணும்னு இருந்தேன் தாத்தா, சில பேருக்கு கஷ்டம் எதுக்காக வருது ?''

'' என்னடா கேள்வி இது. உலக வாழ்க்கையிலே கஷ்டம் இல்லாதவனே கிடையாது. எல்லோருக்குமே அளவில்லாத கஷ்டங்கள் இருக்கு. பணக்காரன், பெரிய பதவியில் உள்ளவன் எல்லாம் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், அவரவர்களை கேட்டால் தான் தெரியும் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று. நாம் திண்ணையில் இருக்கிறோம், கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு சரி. அவர்கள் மேலே பால்கனியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். பிராணனுக்கே ஆபத்து வரலாம். எனவே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பணம் செல்வம் உள்ளவர்கள் அதிகம் ஒழுக்கம் காக்க வேண்டும், மற்றவர்க்கு பரிவு காட்டவேண்டும்''
மனுஷனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஓயாமல் அலையாய் அலைந்து கொண்டு இருக்கிறான்.
எதற்காக?
தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான்.
ஒரு வஸ்து மேல் ஆசை. அது கிடைக்க அலைந்து, அது கிடைத்துவிட்டபின் அதால் கிடைத்த இன்பம், ஆசை, அவனுக்கு போதவல்லையே. இன்னும் கொஞ்சம். அடுத்தது. அதால் கிடைத்த இன்பம் இன்னும் தேட வைக்கிறது. இவனுக்கு இப்படி ஓடி ஓடி சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

சாமா, நீ சொல்வது எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தான். ஆனாலும் நான் இதெல்லாம் பத்தி எவ்வளவு படித்தாலும் மனதில் நிற்கவில்லையே?

எனக்கும் அதே கதி தான். படிப்பது வேறு. சிந்திப்பது வேறு. சிந்திப்பது மட்டும் போதாது. மெதுவாக, விடாமல் ஒவ்வொன்றாக கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளவேண்டும். தானாகவே அது சிறிது காலத்தில் சித்தியாகிவிடும். ஒரு மரத்தில் பூ, பிஞ்சாகி, காயாகி, பழுத்து, பின்னர் கிளையிலிருந்து தானாகவே கீழே விழுவதற்கே சில காலம் ஆகிறதே, மனிதன் தன்னை பழுக்க வைத்துக்கொள்ள காலம் தேவை அல்லவா?. சிலருக்கு பல பிறவிகள் கூட தேவையாகிறது.

இதை தெரிஞ்ச சில விஷமிகள் ஏதேதோ ஆசை காட்டி மதம் மாற்ற செய்ய முயல்கிறார்கள் இல்லையா.

இதோ பார் சாம்பு, நமது இந்து சனாதனம் மத மாற்றத்தை எப்போதுமே ஆதரிக்கவில்லை. ஜன்ம விமோசனத்தைத் தான் எல்லா மதங்களும் முக்கிய குறிக்கோளாக எடுத்துரைக்கின்றன. அவனவன் தன்னுடைய மத போதனைகளை வழுவாமல் அனுசரித்து வந்தால், அதுவே அவனுக்கு விமோசனத்தை அளிக்கும். ஆகவே, ஒரு மதத்தைப் பற்றி புகழ்ந்து கூறவோ, இகழவோ எந்த அவசியமும் இல்லையே .
இந்த உலகே ஒரு நாடகம் ; ஆண்டவன் தான் சூத்ரதாரி, அதன் கதாசிரியர்.

ஏன் பேரன் கூட கேட்பான்: ' தாத்தா நீ ஏன் துப்பறியும் கதைகள், விறுவிறுப்பான காதல் கதைகள் எழுதுவதில்லை என்று. என் நண்பன் கேட்கிறான் நீ எழுதுவது சத்யம், நேர்மை, உண்மை இதை எப்படி எல்லோருக்கும் புரிய வைக்கிறாய்?''
'' சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரையாகத் தரவேண்டும். ஜனங்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக இந்த்ரிய சுக விஷயங்களை எழுத கூடாது. எந்த நல்ல விஷயத்தையும் ஜனங்களுக்கு பிடிக்க வைக்கிறமாதிரி எழுத வேண்டியது தான் பத்திரிகை எழுத்தாளர்கள் கடமை. தம்மையும் உயர்த்திக்கொண்டு வாசகர்களையும் உயர்த்தவேண்டும்.
உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல காலங்களாக ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக உருவெடுத்திருக்கிறது. சிஷ்ய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக, இப்படிப் பல உருவங்களாக. இந்த உயர்ந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்னும் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுக்கிற உருவமே எல்லா உயிர்களிடமும் அன்பு பெருக செய்யும். உலகமே ஒன்றாகிவிடவே ண்டும் என்று எண்ணுகிற அன்பு சகலரிடமும் பரவ உதவும். இது மெதுவாகத்தான் வளரும். ஒரே ராத்ரியில் மந்திரத்தால் மாங்காய் இல்லை.''

''எப்படி சாமா இதை ஆரம்பிக்கவேண்டும்?''

''ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வீட்டிலேயே மாலை வேளைகளில் ஒரு பத்து நிமிஷமாகவாவது பகவன் நாமா பாடியோ உச்சரிக்கவோ பஜனையோ செய்யவேண்டும். இதில் சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. பூஜை அறையிலோ அல்லது பூஜை அறை இல்லாவிட்டால் ஒரு கூடத்திலோ, ஒரு குத்து விளக்கை ஏற்றி அதைச்சுற்றியோ எதிரிலோ உற்கார்ந்து தெரிந்த கீர்த்தனங்கள்,நாமாவளி சொல்லவேண்டும். பாடத்தெரிந்தால் பாடலாம்.
பாடுவதற்கு எதற்கு வெட்கம்?
சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை. பக்தி, பாவைனதான் முக்கியம். எங்கோ ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் குழந்தை அம்மாவின் நினைவு வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா? தேடி ஓடிவருகிற தல்லவா. அதில் என்ன வெட்கம்? அது போல் மனதை இறைவனிடத்தில் கூட வைக்க இது உதவுமே''

ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் என்ன சொல்கிறார்?

"அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ,கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ , நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி.

''சாமா, உங்கூட பேசினா நேரம் போறதே தெரியல. இருட்டாயிடுத்து பசுமாடு பஸ் எதிரே வந்தா அப்புறம் தெரியாது. நாளை நிறைய கேள்விகள் கேட்கிறேன்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...