Saturday, October 14, 2017

பார் போற்றும் பரமஹம்சர்




பார் போற்றும் பரமஹம்சர் - J.K. SIVAN


''M ''

இத்தனை நாள் பகவான் ராமகிருஷ்ணரைபற்றி அவரது தக்ஷிணேஸ்வர வாழ்க்கை வரலாறு எல்லாம் சொன்னேன். இனி அவரை உலகலாவிய மகானாக காணப்போகிறோம். இதற்கு மூல காரணமாக அமைந்த ஒருவரை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமகிருஷ்ணரின் நெருங்கிய சிஷ்யர்களில் ஒருவர் மஹேந்திரநாத் குப்தா. அவர் எழுதி வைத்த நாட்குறிப்பு அன்றாடம் ராமக்ரிஷ்ணரோடு யார் யார் வந்தார்கள் பேசினார்கள், பகவான் என்ன சொன்னார் செய்தார் என்ற விவரங்கள் வெளி உலகத்துக்கு வர முக்கிய காரணம் ஸ்ரீ மஹேந்த்ரநாத் குப்தா. தன்னை அடக்கமாக முதல் எழுத்தான M என்று மட்டுமே குறிப்பிட்டு ராமக்ரிஷ்ணரோடு இணைந்த தனது குறிப்புகளை ''GOSPEL OF SRI RAMA KRISHNA '' என்ற புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவர் தாய்மொழி வங்காளியில் ராமகிருஷ்ண கதாம்ருதா என்று வெளிவந்தது. அபூர்வமான தகவல் நிரம்பிய புத்தகம் அது. பலமுறை படித்திருக்கிறேன். கொஞ்சம் உங்களோடும் பகிர்ந்து கொள்வேன்.
1854ல் பிறந்த M கல்கத்தா ப்ரெசிடென்சி காலேஜில் படித்தவர். சமஸ்க்ரிதம் ஆங்கிலம் தவிர எல்லா மதங்களையும் பற்றி தெளிவாக அறிந்தவர். பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுரேந்திரநாத் பானெர்ஜி போன்றவருடன் நெருக்கமான நண்பர்.

கூட்டுக்குடும்பம். ஏதோ மனக்கசப்பு. ஒரு நள்ளிரவு வீட்டை விட்டு வெளியேறிய M கல்கத்தா பரநகரில் சகோதரி வீட்டில் தங்கினார். நிம்மதி இல்லை. கல்கத்தாவில் எங்கெங்கோ அலைந்தவர் ராமகிருஷ்ணரை பற்றி கேள்விப்பட்டு தக்ஷிணேஸ்வரம் வந்தார். ரோஜா தோட்டங்களில் சுற்றிவிட்டு ராமகிருஷ்ணர் வசித்த அறைக்கு வருகிறார். அது 1882ல் மார்ச் மாதம் ஒரு ஞாயிறு .

அன்றுமுதல் என்ன நடந்தது என்பதை இனி M வாயிலாகவே அறியப்போகிறோம்.

ராமகிருஷ்ணர் ஒரு மர சாய்வு நாற்காலியில் கிழக்கே பார்த்தவாறு சிரித்த முகத்தோடு. எதிரே நிறைய பேர் உட்கார்ந்து அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள் .

''இது என்ன ஆச்சர்யம். நான் எதிரே பார்ப்பது சுக தேவரா, சைதன்யரா?''
பேச்சே வரவில்லை M க்கு. பகவான் பேசிக்கொண்டிருந்தார்:

பகவான்: ''ஹரி, ராமா என்ற பெயரை சொன்னாலே, கண்கள் நீரால் மறைக்கப்படுகிறது. மயிர்கூச்செரிகிறது. எதுவுமே பண்ணவேண்டாம். இந்த நாமங்களை சொல்லிக்கொண்டே இருந்தால் போதும். சந்தியா காயத்ரியின் கலக்கிறாள். காயத்ரி ''ஓம்'' எனும் ப்ரணவத்தில் இணைந்தவள்''

M தீர்மானித்து விட்டார். இனி இந்த இடத்தை விட்டு, இந்த மஹானை விட்டு பிரிவதில்லை.
ஆலயங்களை தரிசித்துவிட்டு ராமகிருஷ்ணரின் அறைக்கு வருகிறார்.

காவல் காக்கும் ஒரு பணிப்பெண்ணை கேட்கிறார் : ஸ்வாமிகள் எத்தனை வருஷமாக இருக்கிறார் இங்கு?''
''பல காலமாக''
''என்னென்ன புத்தகங்கள் படிப்பவர். வெகு அற்புதமாக பேசுகிறாரே''
''என்னய்யா கேட்க்கிறீர்கள். புத்தகமா. ஸ்வாமிகள் எதையும் தொட்டதே இல்லை. நாக்கில் சரஸ்வதி இருக்கும்போது எதற்கு புத்தகம்.
உள்ளே நுழைந்தார். வழக்கம்போல் மர நாற்காலியில் பகவான் ராமகிருஷ்ணர்.

''உட்காருங்கள். எங்கே இருக்கிறீர்கள் என்ன உத்யோகம். எதற்கு பரநகர் வந்தீர்கள்?''

தான் சொன்னதை பகவான் கேட்டாரா என்று அதிசயித்தார் M . பகவான் கண்கள் சொருகி இருந்தது. தூக்கமா? இல்லை அவ்வப்போது நிகழும் சமாதி நிலை என்று பிறகு புரிந்து கொண்டார்.

''குருநாதா, சாயரக்ஷை பூஜைக்கு இடையூறாக இருக்கிறேனா?''

'' இல்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை . இன்னொரு தரம் வாங்களேன்''

ஏன் நான் இப்படி காந்த சக்தி இரும்பு கம்பியை இழுப்பது போல் இருக்கிறேன். ''இன்னொரு தரம் வா'' . நிச்சயம் நாளையே அவரை பார்க்க போகவேண்டும்''. வழியெல்லாம் இதே நினைவு M க்கு. மறுநாள் கால் தானாகவே பகவானை தேடி சென்றது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...