Thursday, October 5, 2017

மார்கழிச் செல்வி

அமுதன் ஈந்த ஆழ்வார்கள் J.K. SIVAN
மார்கழிச் செல்வி

மார்கழிச் செல்வி என்ற தலைப்பில் ராதாவையோ மீராவையோ அழைக்க முடியுமா? அதற்கென்றே பிறந்தவள் கோதை ஒருத்தி தான்.

''மார்கழி மாதம் எனக்கு பிடித்த மாதம். மாதங்களில் நான் மார்கழியாகவே இருக்கிறேன்'' என்று முகுந்தன் சொல்லும்போது அதற்கு என்ன காரணம் புரிகிறதா?. கோதை தான். அவள் யார்? 'திரு'வே பாவையாக வந்தவள். அவள் எழுதியதும் திருப்பாவை. அதைப் படிக்கும், கேட்கும், பாடும் நம்மையும் அந்த கிருஷ்ணனிடம் கொண்டு சேர்க்கும் தன்மை அதற்கு மட்டும் தான் உண்டு.

மார்கழியில் நமக்கு கிடைக்கும் போனஸ் என்று வேண்டுமானால் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி மனம்உருகி பாடிய அந்த மணிவாசகரின் திருவெம்பாவையை சேர்த்துக்கொள்ளலாம். முப்பது ராகங்களில் கனி ரசமாக திருப்பாவையை அரியக்குடி ராமானுஜய்யங்கார் பாடியதையும் திருமதி M .L வசந்த குமாரி பாடியதையும் கேட்கும்போது தன்னை இழக்காதவன் நிச்சயம் ஒரு அவுரங்க ஜீப் தான்.

இந்த திருப்பாவை முப்பதுமே கன்னிப்பெண்கள் வடக்கே யமுனை நதிக்கரையிலே ஆயர்பாடியிலே சூர்யோதயத்துக்கும் முன்னரே துயிலெழுந்து, யமுனையில் நீராடி வீடு வீடாக சென்று கண்ணனை வாயார பாடி மனமார புகழ்ந்து போற்றி மண்ணில் பதுமை செய்து பூஜித்து கண்ணன் அருள் வேண்டுகிற நிகழ்ச்சி.

உலகத்துக்கே கண்ணன் ஒருவன் தான் புருஷன். மற்ற நாம் எல்லோருமே ஸ்திரீகள் தான். இந்த மார்கழி நோன்பின் மகிமை நம்மை அவன் ஆண்டு அருள வேண்டும் என்பதே. நமக்கு அவன் ஆண்டருள வழி காட்டிய கோதை தான் ஆண்டாள். முப்பதே பாசுரங்கள் எழுதி அவற்றின் மகோன்னதத்தால் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக பிரகாசிப்பவள் தான் ஆண்டாள் எனும் கோதை.

எவ்வளவு பரந்த மனம் இருந்தால் நாட்டில் நல்ல மழை அடிக்கடி பொழிய வேண்டும். பெண்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் இந்த ரெண்டுக்கும் அந்த கண்ணனின் அருள் வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிய பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும். ஆருத்ராவில் (திருவாதிரை நாளில் ) ஜிலு ஜிலுவென்று குளிர்ந்த காற்றை பரப்பிக்கொண்டு மறைந்தும் மறையாதிருக்கும் முழு நிலவு மேலே ஜொலிக்க விடியல் குளிரில் நீராடும் சுகம் கிடைக்கவே தான் மணிவாசகரும் கோதையைப் பின் பற்றி திருவெம்பாவையை எழுதியிருப்பாரோ?

அம்பா என்ற வடமொழி வார்த்தைக்கு அம்மா என்றும் நீர் என்றும் அர்த்தம் உண்டு. அம்மா தான் அம்பா. நீர் தான் அம்மா. காவேரியம்மா, கங்கையம்மன், கோதாவரியம்மா அன்று நதிகளை அம்மாவாக பார்க்கிறோம். பெண்களுக்கு நதியின் பெயரை சூட்டி மகிழ்கிறோமே.

ஸ்ரீமத் பாகவதத்தை புரட்டிப் பார்த்தால் இந்த கோகுலம், ஆயர்பாடி பெண்கள் ஆண்டாளோடு சேர்ந்து, நோன்பு நோற்றது, -- காத்யாயனி விரதம் அனுஷ்டித்தது, ஹேமந்த ருதுவில் முதல் மாதத்தில், அதாவது மார்கழியில் என்று சொல்கிறது.

யமுனை ஆற்றில் குளித்துவிட்டு தலை முடிந்து ஈரத்துணிகளை பிழிந்து அணிந்து அம்பாளில் உரு வரைந்து ஈர மண்ணை அம்பாளின் வடிவாக பிடித்து வைத்து பூஜை செய்து உறுதி எடுத்துக்கொண்ட ஒரு விரதம்.அது.

ஆயர்பாடி கிராமப்பெண்கள் யமுனையில் இடுப்பளவு ஆழத்தில் நின்று கிருஷ்ணனை பாடி ஜலத்தில் கையால் தாளம் போடுவார்கள். மிருதங்கம் வாசிப்பது என்று வைத்துக் கொள்வோமே. இதை ஜலக்ரீடையில் ''உதகங் காதம்'' என்பார்கள். நான் எங்கோ படித்தேன். காத்யாயன ரிஷியின் மகள் காத்யாயனி. இவளுக்கு மற்றொரு பெயர் தமிழ் மொழிவழக்கில் காத்தாயீ. பாட்டாரிகா என்றும் ஒரு பெயர். தமிழில் அந்த பெயர் நாளடைவில் பிடாரியாகி விட்டது. காலம் செல்ல செல்ல மாறுதல்கள் எல்லாவற்றிலும் வருவதில் இதுவும் ஒன்றோ..

எல்லாம் அந்த கண்ணன் மீதுள்ள காதல். பிரேமை, பாசம். பக்தி,பணிவு, அசைக்கமுடியாத நம்பிக்கை.

அவன் சாதாரணமானவனா? முப்பது பாடல்களிலும் அவனை இணையற்ற வார்த்தைகளால் அலங்கரிக்கிறாள் ஆண்டாள். அகில உலகம், பிரபஞ்சம் அனைத்தும் எத்தனை வர்ண ஜாலங்களோடு படைத்திருக்கிறான். அந்த வர்ணக்குழம்பை நாம் நினைத்துப் பார்த்தாலும் உருவாக்க முடியாதே. உயிர் என்கிற அற்புதத்தை அவன் படைத்த எல்லாவற்றிலும் புகுத்தி எத்தனை எத்தனை ஜீவ ராசிகள் நம்மை மகிழ்விக்கின்றன. அவற்றுக்கு தான் எத்தனை வர்ண ஜாலங்கள். தனித்வம். ஒன்றைப்போல் மற்றொன்றில்லையே.

தனக்கென எதற்காக அந்த கார்முகிலின் வண்ணத்தையே கண்ணன் ஏற்றுக் கொண்டான்? இப்போது தான் புரிகிறது. நன்றாகவே புரிந்து விட்டதே. கார்முகில் கறுத்து, பருத்து, எந்தநேரமும் பிளந்து தன் மடி திறந்து அளவற்ற மழையை மண்குளிர மனம் குளிர பொழிகிறது. அதுபோல் கருணை மழையை நமக்கு வாரி வழங்கவே இந்த வண்ணத்தை அவன் மேற்கொண்டானோ?. இருக்கும். அவன் என்ன ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டா செய்பவன்?.

நாம் தான் ஒரு தெரிந்தவர் கல்யாணத்தில் ஒரு நூறு ரூபாய் மொழி எழுதினால் மைக்கில் ரெண்டுதரம் நம் முழுப்பெயரையும் சொல்ல நிற்பந்திக்கிறோம். நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பாதரச விளக்கு கோவிலுக்கோ எங்கோ தானமாக அளித்தால் அதை முழுதும் மறைக்கும்படியாக நமது பெயர் அதன் மேல் எழுதி அது தருகின்ற கொஞ்சம் வெளிச்சத்தையும் மறைக்கிறோம்!.அவன் தனக்கென இல்லாதவன்.

எத்தனையோ வாத்தியங்கள் பிறந்தன. ஆனால் அவன் தனக்கென பொருத்தமாக எடுத்துக்கொண்டது அந்த மூங்கில் நாணல் குழல் ஒன்று தானே. என்ன இசை, என்ன ஓசை, அதில் எழுப்புகிறான். இன்ப லோகத்தை பிளந்து துண்டாக்கி, பொடியாக்கி, தேனுடன் கலந்து, தெள்ளமுது சேர்த்து, இன்னும் கண்ணுக்கு தெரியாமல் பொடித்து அதை காற்றோடு கலந்து நம் காதுகளை நிரப்புகிறானே. நமக்கு சுநாதம் கிடைக்க அவன் எடுத்துக்கொள்ளும் பிரயாசை அல்லவா இது? வானத்தை வெல்லும் கானம். காதலை நெஞ்சில் உரம் விடச் செய்யும் கருவி. ''கண்ணா , நீலாம்பரியில் நீ குழல் இசைத்தால் இந்த அகிலமே உறங்கட்டும் உனது இன்ப எண்ணத்தில் திளைத்து.''

அவள் ஆண்டாளா கோதையா? கோதை என்று பட்டர்பிரான் பெரியாழ்வார் பெயரிட்டு அவளை வளர்த்து உலகுக்கு ''பட்டர் பிரான் கோதை'' என்று அறிமுகமாக்கினார். ஆண்டவனையே ஆண்டதால் அதன் மூலம் நம் மனதையெல்லாம் கொள்ளை கொண்டு ஆளுமை செய்ததால் அவள் நமக்கு என்றும் ஆண்டாள் தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...