Sunday, October 8, 2017

''வேதத்தின் வித்து''

அமுதன் ஈந்த ஆழ்வார்கள். --J.K. SIVAN

''வேதத்தின் வித்து''

எப்போது விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் கோதையை எடுத்து பெண்ணாக வளர்த்தாரோ அவள் விஷ்ணுசித்தரின் குலத்தை சேர்ந்தவள் தானே!. அவள் யார்? வேண்டியதை உடனே வழங்கும் கற்பக தரு, அடியாரை ரட்சிக்கும் அரங்கனை அணைந்து கொண்டு படரும் கொடி தான் கோதை. அவள் பூமி தேவியா, லக்ஷ்மி தேவியா, யாராகத்தான் இருந்தால் எனக்கென்ன? நிர்கதியான எனக்கு கோதை ஒருவளே கதி. அவளையே நான் சரணாகதி பண்ணுகிறேன்.'' என்று பவ்யமாக பாடுகிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகர். .

ஆண்டாளின் 30 திருப்பாவையையும் பற்றி ''அப்படி என்றால் என்ன?'' என்று இன்னமும் கேட்போர் திருப்பாவையைப் படித்தால், கேட்டால், அது நாம் செய்த, செய்யும், பஞ்ச மகா பாதகங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்ததுஎன்பதை அறிவார்கள். திருப்பாவை ஒன்றே நமக்கு அந்த பரமனின் திருவடியை அடைய வைக்கும் வழிகாட்டி என்றும் அறியமுடியும். திருப்பாவை சாமான்யமான ஒரு பாடல் புத்தகமல்ல. நான்கு வேதத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கும் ஒரு அதிசய அபூர்வ நூல்.

மார்கழி எல்லா நாட்களும் இறைவனுக்கு உகந்த நாளாயிற்றே. கோதை நாச்சியார் இயற்றிய 30 பாசுரங்களையுமே ஒவ்வொரு நாளிலும் ஒரு அமுதப்பாடலை படைத்ததாகவே எடுத்துக்கொள்வோம். அன்றாடம் இறைவனுக்கு மலர்களைத்தொடுத்து தந்தையோடு சேர்ந்து மாலையாக்கி அரங்கனுக்கு அனுப்பினாள். பூமாலையோடு இந்த அழகிய என்றும் வாடாத பாமாலையும் தொடுத்து அரங்கனுக்கு சூட்டினதாகவே ஸ்ரீ தேசிகர் மனத்தில் எழுந்த அற்புத எண்ணத்தில் பங்கு கொள்வோமே.

நாம் எதையே நினைக்கிறோமோ, எதையே விழைகிறோமோ, மனம் பூரா நிரப்பிக்கொள்கிறோமோ நாம் அதுவே ஆகிறோம், என்பது தெரிந்தது தானே. கிருஷ்ணன் அதைத்தானே கீதையில் தெளிவாக சொல்கிறான்.

பெரியாழ்வாரிடமிருந்து அரங்கனைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு அவன் மேல் பற்று வளர்ந்து, அவனின்றி தான் இல்லை என்ற நிலை அடைந்து, அவனே மூச்சு, அவனே ஜீவன், என் இக வாழ்வில் கணவன் என்ற ஒருவன் உண்டென்றால் அது அவனன்றி வேறில்லை என்ற முடிவெடுத்தாள் கோதை . அழகன் அவனுக்கு தான் நிகராக வேண்டுமே என்றே தன்னை அலங்கரித்து க்கொண்டாள். ஒருவருமறியாமல் ரங்கனுக்கு என்று அப்பா தொடுத்த வித விதமான மலர் மாலையைத் தன் கழுத்தில் முதலில் அணிந்து அழகு பார்த்தாள். தனக்கு பிடித்திருந்தால் அது அரங்கனுக்கும் பிடிக்குமே இருவர் எண்ணமும் ஒன்று தானே என்று ராதாவைப் போல் கோதாவும் தீர்மானித்தாள் .

ஏற்கனவே ஒருவர் அணிந்த மலர் இறைவனுக்கு ஏற்காது என்று தெரியாதா என்ன அவளுக்கு? அவள் வேறு அவன் வேறு என்று இருந்தால் தான் இது வாஸ்தவம். ஆனால் மனத்தால் எப்போதோ ஆண்டாள் அரங்கனாகி விட்டாளே ! எனவேதான் அவள் அணிந்த மாலை அரங்கன் தோளில் அவன் விருப்பத்தோடு பரிமளித்தது.

ஒருநாள் இது அறிந்த தந்தை வெகுண்டார். அபசாரம் என்று அரற்றினார். பெண்ணை கோபித்தார்.
அரங்கனிடம் ''தவறை மன்னித்தருள் என்று வேண்டி வேறு மாலை உடனே தயார் செய்து அணிவித்தார். ''

''ஆண்டாள் சூடிய மாலையே எனக்கு ஆனந்தமளிக்கிறது, அதையே கொண்டுவா '' என்று அரங்கனே அங்கீகரிக்க அரசன் மற்றும் அவள் அப்பாவின் கனவில் தோன்றி, ஆண்டாளை அலங்கரித்து மேள தாளங்களோடு வரவழைத்து தன்னோடு இணைத்துக்கொண்டான் அரங்கன். தெரிந்த விஷயம் என்றாலும் தெவிட்டாத அமுது ஆண்டாளின் வரலாறு.

முக்கியமாக‌திருப்பாவை தந்த கோதை நாச்சியார் காட்டிய வழியிலே, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கும் நாம் அதைக் கடைத்தேற்ற முயற்சிக்க வேண்டும். திருப்பாவை 30 பாசுரங்களையும் ஆண்டாள் எழுதியபோது தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகபடுத்தி பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியது அல்லவா?.

சொட்டு சொட்டென்று மழை. குளிர்ந்த அமைதி. எங்குமே எவரின் நடமாட்டமும் இல்லை. அந்தகாலத்தில் ஒரு லௌகீக வேலையும் செய்ய முடியாத இத்தகைய மாதம் இறைவனுக்கென்றே, இறை சிந்தனைக்கென்றே ஒதுக்கப்பட்டது. மார்கழியில் சுப லௌகீக நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டன. காரணம் மார்கழி மோசமான மாதம் என்பதால் அல்ல. மோட்சம் தரும் மாதம் என்பதால் காரியங்கள் மாத முழுதும் நாராயணன் நினைவுக்காகவே அவன் அருளைப் பெற பிரத்யேகமான சிறந்த மாதமாக மார்கழி ஏற்றுக்கொள்ளப்பட்டது ''மாஸானாம் மார்கசீர்ஷாம்'' ; மாதங்களில் அவன் மார்கழியானதால் தான்.

கிருஷ்ணன், ராமர், போன்றோர் கூட அவதாரம் எடுக்கும்போது ஒரு மானிட பெண்ணின் கர்ப்ப வாசம் அவசியமானது. தாயாருக்கோ நினைத்த மாத்திரத்தில் மானிட ஜென்மம் சாபல்யமாயிற்று. சீதை அவ்வாறு தான் ஜனகனால் கண்டெடுக்கப் பட்டாள். பூமா தேவியோ கோதையாக அவதரிக்கையில் துளசிவனத்தில் தான் பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மார்கழி முழுதுக்குமானது. முழுக்க முழுக்க கிருஷ்ணன் நினைவிலேயே ஈடுபட்டது. ஈடுபட வைப்பது. எனவே சிறந்த கிருஷ்ணானுபவம் பெற திருப்பாவை உசிதமானது.

ஆண்டாள் என்று நினைக்கும்போது இப்படியும் ஒரு அசாத்திய பெண்ணா என்று ஆச்சர்ய படவைப்பவள். ஒரே பெண் ஆழ்வார். முப்பது திருப்பாவையும் 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியும் எழுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் நமது மனத்திலும் நீங்காத இடம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் தங்களை பெண்ணாக பாவித்து பரகால நாச்சியார், பராங்குச நாச்சியார் என்றெல்லாம் நாயக நாயகி ரூபத்தில் பக்தியை கண்ணனிடம் காட்டினாலும் அவன் மனைவியாகவே தன்னை பாவித்து அவனைத் தன் மணாளனாக ஏற்றுக்கொண்டு பாடி அவனில் கலந்த ஆழ்வார் அவள் ஒருவளே. தன்னை கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடி கோபியரில் ஒருவளாக உருவகித்து அவனை நேரில் கண்டு அவனிடம் அருள் பெற்றவள் அவனை ஆண்டு நம்மையும் ஆண்டருளும் அந்த ஆண்டாள் என்ற கோதை ஒருத்தியே. அப்பாவிடம் வேண்டியதை அம்மாவின் மூலம் நாம் பெறுவது தானே நமக்கு வழக்கம்.

நாச்சியார் திருமொழி ஒரு மகத்தான காவியம் எனலாம். கிருஷ்ணனை அடைய கோதை விழைவதை எளிய தமிழில் தரும் மனதை கவரும் பாசுரங்கள். ஒரு சிறப்பான விஷயம். முதலில் திருப்பாவை ''மார்கழி'' என்று தொடங்குகிறது. முதல் பாசுரம் ''மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் '' என்று ஆண்டாள் தொடங்கியவள் அடுத்த தனது படைப்பான நாச்சியார் திருமொழியில் முதல் அடியாகவே '' தை ஒரு திங்கள் ''என்று கல்யாண மாசத்தில் ஆரம்பிக்கிறாள். மார்கழியில் காத்யாயனி விரதம் இருந்து நோன்பு நோற்றவள் விரத பலன் கை கூடி அந்த அரங்கனையே மணாளனாக அடைந்து விமரிசையாக திருமணம் நடப்பதாக கனா காண்கிறாள். வாரண மாயிரம் என்ற அருமையான வர்ணனை மிக்க பாசுர தொகுப்பு படிக்க படிக்க கண் முன்னே ஆண்டாள் திருக் கல்யாண கோலம் காட்சியை சுவையாக தருகிறது.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆண்டாளை பொறுமையின் பூஷணமான பூமி தேவியாகவும், கருணை பொழியும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியாகவும் போற்றுகிறார். '' சாக்ஷாத் க்ஷமம் காருண்ய கமலம் இவண்யம்'' என்கிறார் கோதாஸ்துதியில். யாராவது பகவானுக்கு என்று பிரத்யேகமாக சாற்றுவதற்கு வைக்கப்பட்ட மாலையை தொட முடியுமா, அணிய முடியுமா?'' ஆனால் அவள் அணிந்த மாலை தான் வேண்டும் என்று அந்த அரங்கனே விரும்பிக்கேட்ட பெருமையும் புகழும் கோதைக்கன்றி வேறு யாருக்காவது உண்டா? உரிமையோடு கிருஷ்ணனை ''கருப்பா'' என்று கூப்பிட்டவள் அவள் ஒருவள் தான். ஏனெனில் அவனும் மகிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டவன் தானே. ஆண்டாளின் தமிழ் என்ன சாமான்யமானதா?. அதன் புகழ் மறக்கக் கூடியதா? ''வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்'' என்ற பெயர் பெற்றதல்லவா அவள் எழுத்து..


.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...