Wednesday, June 27, 2018

WEDDING RITES.



டும் டும் டும் கல்யாணம் 5 J.K. SIVAN மாப்பிள்ளை ஒரு முடிச்சு கழுத்தில் தாலி காட்டியவுடன் அவனது சகோதரிகள் மற்ற முடிச்சுகள் போடுவதற்கு தயாராக பெண்ணிற்கு பின்னால் நிற்பார்கள். அது ஒரு பிரெஸ்டிஜ் சமாச்சாரம் அவர்களுக்கு. தாலி முடிந்ததற்கு பின் முக்கியமான சடங்கை பாணிக்கிரஹணம் என்போம் . கையைப் பிடித்துக் கொள்வது. பெண்ணின் வலக்கரத்தை மாப்பிள்ளை வலக்கரத்தால் கெட்டியாக பிடித்துக்கொள்வது. உள்ளங்கைகளை சேர்த்து பிடித்துக்கொள்வது. கட்டைவிரலையும் சேர்த்து தான் . அப்போது சொல்லும் மந்திரம் அர்த்த புஷ்டியானது. ''நான் உன் கரத்தை பிடித்துக் கொள்வது நாம் சேர்ந்திருப்பதையும், தொண்டு கிழமாகும் வரை ஒருமித்த கணவன் மனைவியுமாக வாழ்வதை குறிக்கிறது. நமக்கு நல்ல சந்ததிகள் பிறக்கட்டும். பகன் , அர்யமான், சவிதா, இந்திரன் ஆகியோர் உன்னை எனக்கு கொடுத்திருக்கிறார்கள், இந்த வீட்டின் எஜமானி நீ. சரஸ்வதி தேவி, உன்னை புகழ்ந்து போற்றி சகல ஜீவன்களின் முன்பு பாடுகிறோம். உன் அருளை தந்து எங்களை ஆசிர்வதி அம்மா. பெண்ணே, நீ என்றும் எனக்கு மனமுவந்த பதி சொல் தவறாத பாவையாக இருக்க எல்லா தெய்வங்களும் அருள் புரியட்டும் ''. அடுத்த முக்கிய சடங்கு -............... இதற்குள் அநேகர் அவசரம் அவசரமாக மேடையேறி எப்படியாவது தங்கள் கையை அந்த மணப்பெண்ணோ மணமகனோ பிடித்துக் குலுக்க அலைவார்கள். அவர்களை பொறுத்தவரை கல்யாணத்துக்கு '' முகூர்த்தத்துக்கு '' வந்தாகி விட்டது. தாலி கழுத்தில் ஏறியதும் முடிந்தது..ஆகவே பரிசை கொடுத்து விட்டு காலி இலை தேடி ஓடவேண்டும். மேற்கண்ட மந்திரமும் தெரியாது, அதன் அர்த்தமும் தெரியாது. எனவே வாத்தியார் ஒவ்வொரு கல்யாணத்திலும் கோஷமிட்டு யாரும் மணப்பெண்ணுக்கோ மணமகனுக்கோ கை கொடுக்கவேண்டாம் இன்னும் மந்திரங்கள் முடியவில்லை, நிறைய இருக்கிறது என்று கத்துவார். அதையும் மீறி கை குலுக்கினால் அவர் என்ன செய்வார்?. ஒரு கதை உண்டு. ஒரு வாத்யார் கர்ம சிரத்தையாக மந்திரங்களை சொல்பவர். சாஸ்த்ர சம்பிரதாயங்கள் வழுவாமல் கடைப்பிடித்து சடங்குகள் நடத்தி வைப்பவர். ஒரு க்ரஹஸ்தனுக்கு புத்ர சந்தான அபிவிருத்திக்கு ஒரு ஹோமம், சடங்கு ஏற்பாடு பண்ணினார்கள். வாத்யார் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார், ''இந்த மந்திரங்களை தப்பு இல்லாமல் திருப்பி சொல்லவேண்டும். நான் சொல்வதை சொல்லுங்கள், செய்யச் சொல்வதை செய்யுங்கள்'' என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி சடங்கு நடத்தினார். பிள்ளை வேண்டி ஹோமம் வளர்த்தவரும் நிறைய பணம் கொட்டி செலவழித்தார் அந்த க்ரஹஸ்தர். இந்த ஹோமம், மந்திரம் எதற்கு ஏன் இது எல்லாம் என்று அக்கரையோ ஆர்வமோ இல்லை. மந்திரங்களை சொல்லாமல் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக தப்பும் தவறுமாக சொன்னார். வாத்யார் திருப்பி திருப்பி சொன்னாலும் பயனில்லை. விழாவிற்கு வந்த பெரிய மனிதர்கள், vip க்களை கவனிப்பதில் தான் க்ரஹஸ்தனுக்கு கவனம். கடைசியில் மந்திரங்களை சரியாக சொன்ன வாத்தியாருக்கு தான் வீட்டில் ஆறாவது குழந்தைக்கு பிறகு ஏழாவது குழந்தை பிறந்தது.! ஆகவே ஆசிர்வாதம் ஆரம்பிக்கும் முன்பாகவே கவர் , பரிசுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேடையில் செருப்பு காலோடு ஏறி கைகுலுக்கும் ''வெள்ளைக்காரர்கள்'' இதை சற்று கவனித்து இனி அவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அடுத்த முக்கிய நிகழ்வு சப்தபதி என்கிற அர்த்தமுள்ள மந்திர சடங்கு. சப்த பத்தி என்றால் ஏழு தப்படிகள். இது முடிந்தபின்னால் தான் பெண் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். கல்யாண உற்சவம் நிறைவேறும். பெண்ணின் இரு உள்ளங்கைகளை இணைத்து தனது இடது கையால் மாப்பிள்ளை பிடித்துக் கொண்டு தனது வலது கரத்தால் பெண்ணின் வலது பாதத்தை உயர்த்தி ஏழு அடிகள் நகர்த்தி வைக்கிறான். அப்போது சொல்லும் மந்திரங்கள் ஒவ்வொரு அடிக்கும் ஒன்று. அற்புதமானவை. அவற்றை இனி சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...