Monday, June 4, 2018



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
                                                                                             
  37  
 பிராமணன் வென்ற  ஸ்வயம்வரம் 

''ஜனமேஜயா,  சில  நாட்களாக   நடந்து பாண்டவர்கள் ஐந்து  பிராமண பிரம்மச்சாரிகளாக குந்தியோடு துருபதன்  ராஜாவாக ஆண்ட தெற்கு பாஞ்சால தேசத்தில்  துருபதனின் அரண்மனையை அடைந்தார்கள் அல்லவா?  என்று வைசம்பாயனர் தொடர்ந்தார்.

''துருபதன் ஒரு  பெரிய மைதானத்தின் நடுவில் ஒரு  துவஜஸ்தம்பம் மாதிரி ஒரு கொடிமரம் நட்டு அதன் மேல்  தானாக  இயங்கும் ஒரு விசையை பொருத்தி  அதன் நடுவே ஒரு மத்ஸ்யம் பொம்மையை வைத்திருந்தான்.  மேலே  உயரத்தில் சுழலும்  மத்ஸ்ய இயந்திரத்தை கீழே நின்று  ஜலத்திலோ கண்ணாடியிலோ  தெரியும்  அதன் பிரதி பிம்பத்தை பார்த்தவாறு கொடுக்கப்பட்ட வில்லில் கணை தொடுத்து இயந்திரத்தின் மீது படாதவாறு  நடுவே பொருத்தப்பட்டு  சுழலும்  மத்ஸ்யத்தை (மீனை) மட்டும் வீழ்த்தவேண்டும்.

 ''எவன் இவ்வாறு மத்ஸ்யத்தை குறித்த நேரத்திற்குள் கொடுத்த கணைகளுக்குள்  தொடுத்து  வீழ்த்துகிறானோ அவனுக்கு பரிசு என் மகள்  திரௌபதி''  என்ற  துருபதனின் அறிவிப்பு   ஊர்,  நாடு எங்கும்  ஏற்கனவே  பறை சாற்றி அறிவித்தாகிவிட்டது. எல்லா தேசத்து ராஜாக்களும் போட்டியில் பங்கு கொள்ளவும், வேடிக்கை, கேளிக்கை பார்க்க்கவுமாக  வந்து சேர்ந்துவிட்டதால் பாஞ்சால தேசம் களை  கட்டியிருந்தது. எங்கும்  ஜேஜே என்று கூட்டம். மக்கள்  ஆரவாரம், உற்சாகம்.  வாகனங்கள், யானை குதிரை ஒட்டக, தேர்கள்  நிரம்பி  வழிந்தது.  ரிஷிகள் முனிவர்கள்  வாழ்த்த வந்து விட்டனர்.  தான தர்மங்கள் சமர்த்தியாக  வழங்கப்படுவதால் அநேக  பிராமணர்கள். வேத கோஷ்டிகள். வாத்ய காரர்கள். வெளியூர் மக்கள்.

துரியோதனன் வந்துவிட்டான்.  ராஜோபசாரமாக  வரவேற்பு அவனுக்கு.   பொதுமக்கள்  விருந்தினர், போட்டியாளர்கள், அரச குடும்பத்தினர் என்று வகை வகையாக  அவரவர்  அமர  இடம் தயார் செய்யப்பட்டு  அந்த  மைதானம்  ஜன சமுத்ரமாக  காட்சியளித்தது.  இது போன்ற ஸ்வயம்வரம் நடந்ததே இல்லை என்று அனைவரும் பேசிக்கொண்டனர். urchaama

வடகிழக்கு சிறப்பு வாசல் வழியே துருபதன்  அரங்கத்திற்கு வந்தான். காதைப் பிளக்கும் வாத்ய ஒலிகள் எழும்பின. சந்தனம் பன்னீர்  கலந்த  வாசனாதி திரவிய  நீர்  அனைவர் மேலும் தெளிக்கப்பட்டது. காற்றில் கம்மென்ற  நறுமணம்  ஜம்மென்று வீசியது. விருந்தினர்  போட்டியாளர் அனைவருக்கும்  வாசமலர்கள்  அணிவிக்கப்பட்டது.

பிராமணர்கள் அமர்ந்திருந்த பகுதியில்  பாண்டவர்கள் அவர்களோடு சேர்ந்து அமர்ந்திருந்தார்கள்.   ஹோமகுண்டம்  வேத மந்த்ரங்களோடு  நிறைய நெய் வார்க்கப்பட்டு  ஜொலித்தது.

போட்டி  சாஸ்த்ரோக்தமாக  ஆரம்பிக்கப்பட்டது.   உயர்ந்த ரக ஆடை உடுத்தி  மாலையோடு  திரௌபதி  அரசன் அரசி அருகே அமர்ந்திருந்தாள்.  திருஷ்டத்யும்னன் ஒரு கையில்  திரௌபதியை பற்றிக்கொண்டு  எழுந்து கம்பீரமான குரலில்  அரங்கத்தின் நடுவே  இடி முழக்க குரலில்  அறிவிப்பு ஒன்றை நிகழ்த்தினான்:

 ''இங்கு  குழுமியிருக்கும்  அரசர்களே, அரச குமாரர்களே, இங்கு வைக்கப்பட்டிருக்கும் வில்லை உபயோகித்து கொடுக்கப்பட்ட அம்பைப்  பூட்டி  இதோ மேலே காணும்  சுழலும்  மத்ஸ்ய இயந்திரத்தில் இயந்திரத்தின் மேல் துளியும் படாமல் மத்ச்யத்தை வீழ்த்த வேண்டும். இது தான் ஸ்வயம்வர போட்டி. எவன்  இதில் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு என் சகோதரி திரௌபதி மாலையிடுவாள். இது சத்யம்'' என்றான்.

போட்டிக்கு வந்த  அரசர்கள் பெயர்  வாசிக்கப்பட்டது. துரியோதனன் முதாலான  அனைத்து அரசர்கள் பெயரும் உரக்க கேட்டது.  வந்திருந்த கௌரவ  விருந்தினர்கள் பெயர்களும் கேட்டன.  பலராமன் கிருஷ்ணன் பெயர்களும் வாசிக்கப்பட்டன.

கிருஷ்ணன்  பலராமனிடம்  ''அதோ தெரிகிறார்களே  பிராமணர்களின் இடையே  அது தான்  யுதிஷ்டிரன், இவன் பீமன், அந்த  பக்கமாக இருப்பவன் தான் அர்ஜுனன் இவர்களுக்குப் பின்னால்  தெரிபவர்கள் இருவருமே  நகுல சகாதேவர்கள் போல்  இருக்கிறார்கள் '' என்று தெரிவித்து  சந்தோஷம் அடைந்தான்.

அரசர்கள் ஒவ்வொருவராக வந்து  அந்த  வில்லை தூக்கி நாண்  ஏற்றுவதற்கே திணறினர்.  சிலர் பெருமூச்சு விட்டனர். சிலருக்கு கிட்டத்தட்ட மூச்சே நின்றுவிட்டது.  உயிரா,  த்ரௌபதியா என்ற கேள்விக்கு  உயிர்  தப்பினால் போதும் என்று பலர் முடிவெடுத்து  வெளியேறினர். சிலர் ஒருவழியாக அம்பை செலுத்தினாலும் அது இலட்சியத்தையோ  இலக்கையோ அடையாமல் தோற்றனர்.

கர்ணன் எழுந்தான்  சுலபத்தில் வில்லை எடுத்து நாண் ஏற்றி லாகவமாக  கணை தொடுக்கும் சமயம்  பாண்டவர்கள்  திடுக்கிட்டனர். கர்ணன் நிச்சயம்  மத்ஸ்யத்தை வீழ்த்திவிடுவான் போலிருந்தது.  ஏனோ  திடீரென்று திரௌபதி தடுத்தாள்.  ''நான்  க்ஷத்ரியன் அல்லாதவனை மணக்க முடியாது ''  என்று  அறிவித்தாள் .    எனவே  போட்டியில் கலந்து கொள்ள வேண்டியதில்லை  என்று ஆகியதால்  ஏமாற்றத்தோடு  வெளியேறினான். ஜராசந்தன், சிசுபாலன், கௌரவர்கள் இன்னும் அநேகர்  வெற்றி பெறமுடியாமல் திரும்பினர்.

 ''வேறு யாரும்  இல்லையா''    என்று  எல்லோரும் ஏமாற்றத்தோடு  எதிர்பார்க்கும்போது  அர்ஜுன பிரம்மச்சாரி  எழுந்தான். மற்ற பிராமணர்கள்  அவனை ஏளனத்தோடு  பார்த்து சிரித்தனர்.  ''பிராமணப் பையனுக்கு  ராணியை அடைய  பேராசை பாவம் ''  என்று சிரித்தனர்.

சிலர்   இந்த  பையன்  வாட்ட சாட்டமாக  புஜபல பராக்ரமத்தோடு இருக்கிறானே  ஒருவேளை  இவனால்  வெல்ல முடியுமோ என்று சந்தேகித்தனர்.

அர்ஜுனன்  அரங்க மேடையில் ஏறினான்.  வில்லை  கையில் எடுத்தான். கிருஷ்ணனை மனதில் நினைத்தான்.  நாண் ஏற்றினான். அம்பைப் பூட்டினான்.  சுழலும் மத்ஸ்யத்தை குறி வைத்து அம்பை செலுத்தினான்.  ஐந்தே அம்புகளில் மத்ஸ்யம் விடுபட்டு எதன் மீதும் படாமல் கீழே விழுந்தது. சபை கரகோஷத்தில் அதிர்ந்தது.   ஆச்சர்யம்  அநேகரை சிலையாக்கியது. பிராமணர்கள் அமர்ந்திருந்த பகுதி கோலாகலத்தில் ஆழ்ந்தது. துருபதன்  மகிழ்ச்சியோடு ஓடிவந்து அர்ஜுனனை தழுவினான். முகமலர்ச்சியோடு  திரௌபதி மலர் மாலையை எடுத்துக்கொண்டு  அர்ஜுனனை நோக்கி வந்து அவன் கழுத்தில் மாலையிட்டாள். மனைவியானாள் . 

Aindham Vedham, in two volumes of 500 pages each in art paper with multicolor pictures available for minimum donation as these books are not for sale and we collect only the bare minimum printing charges.pl contact me for details  j.k. sivan 9840279080


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...