Tuesday, June 19, 2018

KALA BAIRAVASHTAKAM



காலபைரவாஷ்டகம் 7 - J.K. SIVAN

ரிக் வேத காலத்திலேயே அவர்களுக்கு தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும். பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன்.

சுக்ல யஜுர்வேதத்தில் சத ருத்ரீயம் என்று ஸ்லோகங்கள் சங்கரன் என்றுருத்ரனை, நமசிவாய என்று அவன் புகழ் பாடுகிறது. நமக்கு அவனிடம் வேண்டுவது என்ன என்று பட்டியல் போட்டு சமகம் என்றும் அவனைப்பற்றி வணங்க நமகம் என்றும் 11 அனுவாகங்கள் சொல்லியிருக்கிறது. அவசியம் எல்லோரும் படித்து அர்த்தம் புரிந்து உரிய முறையில் முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் உச்சாடனம் செய்யவேண்டிய ஒரு பிரார்த்தனை ஸ்தோத்ரம் இது.

''சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார், அவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்'' என்ற ஒரு அருமையான பாடல் கேட்டிருக்கிறீர்களா? இது யார் எழுதியது என்பது மறந்துவிட்டது.

திருமூலர் வெகு அழகாக ஒரு மந்திரம் சொல்லியிருக்கிறார்:

''தேவர் பிரான் தன்னை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார், அறிந்தபின்
ஓதுமின், கேண்மின், உணர்மின், உணர்ந்து பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.''

தேவாதி தேவன் சிவன் யார், அவனது சக்தி, பெருமை, காருண்யம், கம்பீரம் என்று எவன் ஒருவன் அறிந்து கொள்கிறானோ, அவன் அவ்வாறு அறிந்தபின் வாய் ஓயாமல் சிவனை பஜிப்பான், சிவனைப்பற்றி என்னவெல்லாம் அறிந்துகொள்ளமுடியுமோ அவற்றை கேட்பான், தனக்குள்ளே சிவனை உணர்வான், பின்னர் அவனே சிவனாகி உயர்ந்த நிலையை அடைவான்.

நான்கு வேதங்களின் மையக்கருத்தான, உட்பொருளான சிவனை எவன் மனமுருகி அன்போடு கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாக பெருக ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை விடாது சொல்லி உபாசிக்கிரானோ அவன் வாழ்வில் நல்ல மார்கத்தில் உய்வான் என்கிறார் திருஞான சம்பந்தர்.

''காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.''

अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं
दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् ।
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥

Atttta-Haasa-Bhinna-Padmaja-Anndda-Kosha-Samtatim
Drsstti-Paata-Nasstta-Paapa-Jaalam-Ugra-Shaasanam |
Asstta-Siddhi-Daayakam Kapaala-Maalikaa-Dharam
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||7||

அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம்
த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் |
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||

Meaning:
7.1: (Salutations to Sri Kalabhairava) Whose Loud Terrific Laughter Shatters the Continuity of the Sheath of Creation (delusion of our mind) of theLotus-Born Brahma from the Primeval Egg.
7.2: Whose Terrific Glance Destroys the Net of the Powerful and Mighty Rule of Sins (in our mind).
7.3: Who Bestows the Eight Siddhis and Who Wear a Garland of Skulls.
7.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.

ஆதிசங்கரரின் கால பைரவாஷ்டகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து மனதில் ஒரு புத்துணர்ச்சி எழும்பியது. இந்த ஏழாவது ஸ்லோகத்தில் கண்முன்னே மஹா கால பைரவரை கொண்டுவந்து நிறுத்துகிறார் சங்கரர்.

மகாதேவன் கால பைரவேஸ்வரராக அருள் பாலிக்கும்போது 108 பைரவராகக் கூட வணங்கப்படுகிறார். அண்டமே எதிரொலிக்கும் அட்டகாசமான வெடிப்பு சிரிப்பும் கொண்டவர். அதே நேரமும் கால காலமாக அசையாத கல்லும் வெட்கப்படும் சிலையாக அசைவன்றி பனிமலையில் மோனத்திலும் காணப்படுபவர். தாமரை இலை நீர்க்கொப்புளமாக பட்டும் படாமலே ஜொலிக்கும் அநித்தியமானது நமது உலக வாழ்க்கை என்று புரிய வைப்பவர்.

தமிழ்நாட்டிலே தர்மபுரியில் ஒரு அற்புத கால பைரவர் இருக்கிறார். சேலம் ,ஆந்திரா, பெங்களுர் என்று பல இடங்களிருந்து பக்தர்கள் வெல்லத்தை தேடி வரும் எறும்பாக அவரை மொய்க்கிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் இன்றும் காலபைரவர் குல தெய்வம். இந்த ஆலயம் அதியமான் காட்டியது. பழங்கால சக்தி வாய்ந்த ஆலயம். ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் எதிரிகளை வெல்லமுடியாது தோற்ற சமயம் அவனது ராஜகுரு ஜோசியர் ''அப்பனே நீ காலபைரவரை மறந்து விட்டாயே. அவரை தொழு. ஒரு கோவில் கட்டு. உனக்கு தேவையான பலம் சக்தி அனைத்தும் அவர் தருவார். உன்னை எவரும் வெல்லமுடியாது.'' என்கிறார். அதியமான் கோட்டை யில் பைரவரை ஸ்தாபித்து கட்டிய கோவில் இது. பின்னர் வெற்றிகள் தொடர்ந்தது. நாம் இன்றும் அவனை நினைவில் வைத்திருக்கிறோம்.

சனீஸ்வரனுக்கு குரு காலபைரவர். காசியில் சனீஸ்வரன் காலபைரவரை தவமிருந்து வழிபட்டான். ஞானம் பெற்றான். இந்தியாவில் எல்லா இடங்களிலும் பைரவர் அருள் பாலிக்கிறார்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...