Wednesday, June 20, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்     J.K. SIVAN
                                                                                             
                    41.  
  இந்திர பிரஸ்தம் !

பாண்டவர்கள் தமது விருந்தினராக இருப்பதை அறிந்து ஹஸ்தினாபுரத்தி லிருந்து விதுரன் அவர்களைக் காண வந்திருக்கிறார் என்று சேதி பாஞ்சால தேசத்தில் பரபரப்பை உண்டு பண்ணியது.

விதுரனை  துருபதன்  சகல  ராஜ மரியாதைகளோடு  வரவேற்று உபசரித்தான்.

விதுரன்  நிறைய  பரிசுகளை  துருபதன், அவன் மக்கள்,  பாண்டவர்கள்  அனைவருக்கும்  திருதராஷ்ட்ரன் அன்போடு அளித்தான் என்று  கூறி  வழங்கினான்.

பிறகு  கிருஷ்ணன், துருபதன்  ஆகியோர்  அமர்ந்திருக்க  விதுரன் '' துருபதா  நான்  சொல்லப்போவதை கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும்.  பாண்டவர்கள் உயிர் தப்பி  நன்றாக இருக்கிறார்கள்,  உன்னுடைய போட்டியில் வென்று திரௌபதியைக் கைப்பிடித்தார்கள்  என்று  அறிந்து திருதராஷ்ட்ரன் மிக்க மகிழ்ந்தான்.  அவனோடு  பீஷ்மர், துரோணர்,  ஆகியோரும்  எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.   பாண்டவர்களை  மீண்டும்  ஹஸ்தினாபுரம் திரும்பி வரவழைக்க  ஆர்வமாக இருக்கிறார்கள்.  திரௌபதியைக்காண  வெகு ஆர்வமாக இருக்கிறார்கள்.  எனவே   அவர்களை ஹஸ்தினாபுரம் அனுப்ப  அனுமதி வேண்டுகிறேன்.  எனினும்  நானாக  இதை சொல்லக்கூடாது.  யுதிஷ்டிரனும், அவன் சகோதரர்களும்,  பலராமன்,  கிருஷ்ணன் ஆகியோரும் அவ்வாறே கருத்து கொண்டவர்களாக  இருப்பின் அவர்களும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.'' என்றான் விதுரன்.

எல்லோரின் பார்வையும் கிருஷ்ணன் மீது பாய்ந்தது. எல்லோரையும் புன்சிரிப்போடு  பார்வையிட்ட கிருஷ்ணன்   தொண்டையை கனைத்துக் கொண்டு பேசினான்:

 ''பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்புவது நல்லதே. இருந்தாலும் துருபதனின் எண்ணத்தையும்  முதலில்  நாம் அறியவேண்டும் ''

''விதுரர்  உரைத்தது  தான்  முறை என்று எனக்கும் தோன்றுகிறது''  என்றான் துருபதன். பிறகு ஒரு நல்ல நாளில்  சகல மரியாதைகளுடன் பாண்டவர்களை துருபதன் ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்புகிறான்.

பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் சென்றபோது அவர்களை வரவேற்க  துரோணர், கிருபர், விகர்ணன் மற்றும் அநேக சேனைத்தலைவர்கள், பொதுமக்கள் கூட்டத்தோடு  ஏராளமாக  குழுமியிருந்தனர்.  மக்களுக்கு  ஆனந்தம்.  ''ஆஹா  பாண்டவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள். நமது தேசத்துக்கு திரும்பிவிட்டார்கள்.  இனி நமக்கு சுபிக்ஷம்'' என்று கோலாகலமாக, உற்சாகமாக  கூவினார்கள்.   பாண்டவர்கள்  முதலில் விதுர  பீஷ்ம  துரோணர்களை  சந்தித்து  நமஸ்கரித்தார்கள். பிறகு திருதராஷ்ட்ரனை வணங்கினார்கள்.

சில நாளில்  திருதராஷ்டிரன்  பாண்டவர்களிடம்   ''காண்டவ பிரஸ்தத்தில்  நீங்கள்  குடியேறி  பாதி ராஜ்யத்தை ஆளுங்கள்'' என்று  கூறினான்.  

உண்மையில் காண்டவ பிரஸ்தம்  ஒரு பாலைவனமாக காட்சியளித்தாலும்   பாண்டவர்கள்  உற்சாகமாக  அங்கே  சென்றனர். கிருஷ்ணன்  உடன் சென்று அவர்களுக்கு அதை சோலைவனமாக  மாற்றி அங்கே  மாட மாளிகை கூட கோபுரங்கள் அமைக்க  உதவினான்.  மக்கள்  கூட்டம் கூட்டமாக  சென்று அங்கே குடியேறினர். அது சிறந்த  சாலைகள், நீர் நிலைகள்  மரங்கள் செடி கொடிகள்  பூத்த  குபேர பட்டினமாக  மாறிவிட்டது.  பிராமணர்களின் வேத சப்தம் எங்கும் ஒலித்தது.

ஹஸ்தினாபுரத்தை விட காண்டவ பிரஸ்தம் வெகு விரைவில் மிக சிறந்த நகரமாகி விட்டது. அதன் தலைநகரமாக   இந்திர பிரஸ்தம் பொன்னகரமாக பாண்டவர்கள் அரண்மனையோடு விளங்கியது.  தற்போதைய டில்லி பிரதேசம் தான்  அக்காலத்தில்  இந்திரப்பிரஸ்தம்.    எல்லோரும்  சந்தோஷமாக  வாழ்ந்தனர்.

 ஒருநாள்  நாரதர் அங்கு வந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...