Saturday, June 16, 2018

kaalabairavashtakam 6








கால பைரவாஷ்டகம் 6 J.K. SIVAN
ஆதி சங்கரர் ஆதி சங்கரர் தான். யாரால் அவர் போன்று சமஸ்க்ரித ஸ்லோகங்களை அருவி போல் ஓட செய்யமுடியும்? கால பைரவாஷ்டகம் ஒரு அற்புதமான ஸ்லோகம். அதன் சந்தங்கள் செவிக்கினியவை. அர்த்தங்களோ அந்த சிவனையே நேரில் கொண்டு வந்து நிறுத்துபவை. சிவனுக்கு காலில் தங்க செருப்பாம். அதில் கண்ணைக் கவரும் ஒளி வீசும் மணிகள். காலே அழகு. அவன் இடது பாதம் தூக்கி ஆடும் போது எப்படி மனத்தை காந்தத்தால் கவர்கிறது. தாங்கி நிற்கும் வலது காலின் அழகு தான் என்னே! என்றும் நிரந்தரமான ரக்ஷை அந்த பாத ரக்ஷை. பரிசுத்த பரம சிவனே, காலனை காலால் உதைத்த கால சம்ஹார மூர்த்தி. உன்னை திருக்கடையூரில் கண்டு வியக்காத நேரமே கிடையாதே. இடது பதம் தூக்கி ஆடும் நடராஜா, உன்னடி பணிகுவோம் நெஞ்சே. சிவ மானஸ பூஜா என்றால் என்ன தெரியுமா? மனதால் சிவனை வழிபடுவது. அதாவது கூடை பூ, சந்தனம், பழம் இதெல்லாம் ஒன்றுமே வேண்டாம். மனசு பூரா சிவனை நிரப்பிக்கொண்டு அவனை நினைந்து மனம் குளிர மனதாலேயே பூசிப்பது. இதற்கு சக்தி அதிகம் வெளியே பண்ணுகிற பூஜையை விட. மனது உறுதிப்படும். எண்ணம் சிதறாது. விழியொன்று நாட, கை மணியோன்று அடிக்க, வாய் செல் போனில் பேசிக்கொண்டிருக்க, காது கிச்சனில் வரும் சத்தத்தில் கவனமாக இருக்க, இது என்ன பூஜை எத்தனை கூடை பூ போட்டு என்ன பயன்? மரத்தடியில் அமர்ந்து கண்ணை மூடி, நிறைய ஏக்கர் ஏக்கராக நிலம் வாங்கி ரிஜிஸ்தர் பண்ணி, கல், சுண்ணாம்பு, மரம், மண் எல்லாம் வந்து இறக்கி, ஆயிரம் ஆயிரம் கொத்தனார் சித்தாள் வேலை செய்ய, இரவும் பகலும் வேலை நடந்து, சிறந்த கற் சிற் பிகள் விரதத்தோடு ஆகம சாஸ்திரப்படி சிவனை யும் அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் செதுக்க, நல்ல நாள் பார்த்து, வேத கோஷங்களோடு, யானை குதிரை பரிவாரங்களோடு, ரிஷிகள், சிவ கணங்கள் வேத மோத, பிரதிஷ்டை பண்ணி, கும்பாபிஷேகம் நடைபெறுகிற நேரம், ஆயிரமாயிரம் பேருக்கு அன்னதானம் ஜோராக நடக்கிறதே. அடேயப்பா, யார் இந்த கோவில் கட்டியது, எங்கிருக்கிறது? எவ்வளவு பணம் ஆச்சு? -- ஒரேபதில் எல்லா கேள்விக்கும். ஒரு பைசா செலவில்லை. எல்லாம் 'மனக்கோயில்' . பிற்காலத்தில் பல்லவ ராஜா கேள்விப்பட்டு ஓடி வந்து தான் கட்டிய கோவிலுக்கு பரமேஸ்வரன் வர இயலாமல் இந்த மனக்கோயிலில் குடியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, கும்பாபிஷேகத்தையும் சிவ பெருமான் மூலமே அறிந்து மனக்கோயில் கட்டிய பூசலார் நாயனாரை வணங்கி திரு நின்றவூரில் ஒரு சிவன் ஆலயம் கட்டினான். அந்த ஆலயத்தில் காட்சி தரும் சிவன் பெயர் ''ஹ்ருதயாலீஸ்வரர்'' மனக்கோவில் ஈசன் '' இப்படி அருள் தரும் சிவனே உன் ஒரு அம்சமாக கால பைரைவேசனை ஆதி சங்கரர் வர்ணிக்கும் அழகிய ஆறாவது ஸ்லோகம் இது: நான் சொன்ன ஹ்ருதயாலீஸ்வரர் கோயில் சென்னைக்கு மிக திரு நின்ற ஊரில் (என்ன அழகான பெயர்). சென்னையில் கொலைகாரன் பேட்டை கூட இருக்கிறதே. திருமழிசையிலிருந்து 15 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 17 கி.மீ. சென்னையிலிருந்து 35 கி.மீ. தான். ஒரு மணியில் சந்நிதியில் நிற்கலாம். அவ்வளவு தான் தூரம். ஒரு பெரிய சிவன் கோவில் கட்ட மனதில் ஆசை அந்த துறவிக்கு. அவரிடம் இதற்கு இருந்த சொத்து ஒரு கோவணம், கப்பரை மட்டுமே. ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து மனதால் கோவிலுக்கு நிலம் செலக்ட் பண்ணி, ஆள்களை வைத்து கட்டி, மேற்பார்வை பார்த்து, சிற்பிகளை வரவழைத்து எல்லா மூர்த்திகளையும் வடித்து, ஆகம விதிப்படி கோயிலை அமைத்து, குளம் வெட்டி, கும்பாபிஷேகத்துக்கு நாள் பார்த்து விட்டார். பரமேஸ்வரன் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். அதே நாளில் பல்லவ ராஜ ராஜசிம்ம வர்மன் நிஜமாகவே ஒரு சிவாலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நாள் குறித்தான. சிவன் ராஜாவின் கனவில் வந்து சாரி பல்லவா, நான் ஏற்கனவே பூசலார் கோவிலில் அன்று இருப்பதாக நியமனம் ஆகிவிட்டதே. நீ வேறே நாள் பார்.'' என்று சொன்னவுடன் பல்லவன் திகைத்தான். என் ஆட்சியில் எனக்கு தெரியாமல் ஒருவன் கோயில் கட்டி அதே நாள் கும்பாபிஷேகம், அதில் பரமேஸ்வரன் விஜயமா ? எங்கே அந்த கோவில் அன்று நாம் அங்கே கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மேள தளங்களுடன் பரிவாரங்களுடன், அனைத்து பூஜா திரவியங்களுடன் திருநின்றவூர் வந்து தேடுகிறான். எங்கேயும் கோவில் காணோமே. யாருக்குமே கோவில் பற்றி ஒரு விஷயமும் தெரியவில்லை. ''அதோ அந்த பக்கம் ஒரு இலுப்பை மரத்தடியில் ஒரு சிவ பக்த சாது உட்கார்ந்து இருப்பார். அவரை கேளுங்கள்? அவர் பெயர் பூசலார்'' என்று சொல்ல அவர் காலில் விழுந்தான் ராஜா. அந்த நேரம் தான் பூர்ணாஹுதி முடிந்து கும்பாபிஷேகமும் மூலவருக்கு அபிஷேகமும் ஆகும் நேரம். ''என் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கப்போகிறது. ராஜா நீ வந்திருக்கிறாய் . நல்ல சகுனம். பரிவட்டம் கட்டிக்கொண்டு வந்து நில். கண்குளிர தரிசனம் செய். அனைவருக்கும் அன்னதானம் நடக்கப்போகிறது. துவங்கி வை.'' என்கிறார் பூசலார். ராஜா ராஜசிம்மன் தலையை திருப்பி சுற்றுமுற்றும் பார்க்கிறான். மரங்கள், வெட்ட வெளி, சில பசுக்கள், பன்றி கூட்டங்கள் தவிர ஒரு குடிசையைக்கூட காணோமே ஒரு மனிதவர்கமும் காணோம். ஒரு ஈ காக்கா கூட இல்லை. அன்னதானமா? கோவில் எங்கே, கும்பாபிஷேகம், பரிவட்டமா?? என்ன சொல்கிறார் இவர். ''சுவாமி கோவில் எங்கே இருக்கிறது? ''என் மனத்தில் , என் ஹ்ருதயத்தில்'' என்கிறார் பூசலார். கையால் தொட்டு காட்டுகிறார். முகம் ஆனந்த பரவசமாக இருக்கிறது. கோவிலை கட்டி இறைவனை நிலை நிறுத்தி எண்ணத்தை பூர்த்தி செய்த்துவிட்டாரே. அந்த இடத்திலேயே பல்லவ ராஜா ஒரு கோவிலை கட்டினான் அது தான் இன்றும் நாம் காணும் திருநின்றவூர் ஹ்ருதயாலீஸ்வரர். ஹ்ருதய ஆலய ஈஸ்வரர். கருவறை ஹ்ருதயவடிவத்தில் இருக்கிறது. கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய ஆலயம். அதே நாளில் கும்பாபிஷேகம் நடக்க இருந்த ராஜசிம்ம பல்லவன் கட்டிய கைலாசநாதர் கோவில் இன்றும் காஞ்சிபுரத்தில் சுற்றுலா காட்சி கோவிலாக தான் இருக்கிறது. சிலர் அங்கே சென்று தரிசித்தால் ஹிருதய நோய் வராது. வந்தால் தீர்ந்து விடும் என்கிறார்கள். சொல்லிவிட்டு போகட்டுமே. நிறைய பேர் கோவிலுக்கு வர என்ன சொன்னால் தான் என்ன? நமக்கு எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும், தேடும் வழக்கம் இருக்கும்வரை இப்படி சொல்ல தான் வேண்டும். ஆதிசங்கரர் மனதில் சிவனின் அலங்கார ரூபம் எப்படி தோன்றுகிறது நமக்கு எவ்வளவு திவ்யமாக காட்சி தருகிறார் காலபைரவர் என்று இந்த 6வது காலபைரவாஷ்டகத்தில் இனி காண்போம். रत्नपादुकाप्रभाभिरामपादयुग्मकं नित्यमद्वितीयमिष्टदैवतं निरंजनम् । मृत्युदर्पनाशनं करालदंष्ट्रमोक्षणं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥६॥ ரத்ன பாதுகா பிரபாபி ராம பாத யுக்மகம் நித்யம் அத்விதியம் இஷ்ட தைவதம் நிரஞ்சனம் மிருத்யு தர்ப்ப நாசனம் கராள தம்ஷ்ட்ர மோக்ஷனம் காசிகா புராதி நாத கால பைரவம் பஜே. Ratna-Paadukaa-Prabhaabhi-Raama-Paada-Yugmakam Nityam-Advitiiyam-Isstta-Daivatam Niramjanam | Mrtyu-Darpa-Naashanam Karaala-Damssttra-Mokssannam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||6|| காசி மாநகர் சிறக்க அதிபதியாக விளங்கும் கால பைரவா உனது பொன் திருவடிகளில் ஒளிவிடும் மணிகள் பதித்த ரத்ன பாதுகைகளா! ஆஹா! என்ன நேர்த்தி. என் இஷ்ட தெய்வமே, எல்லாம் ஒன்றேயான பரமேஸ்வரா, மாசிலாமணியே, ஒளிவிடும் பரிசுத்த செழுஞ்சுடரே. காலம் காலன் எல்லாமே வென்றவனே, பயநாசினி, பாபவிநாசனே, மோக்ஷதாயகனே, காசிமாநகரத்தில் அருள்புரியும் காலபைரவா, நெஞ்சில் ஆசை பாசங்களை அகற்றுபவனே, பிறவித்துன்பத்திலிருந்து காப்பவனே, உனக்கு நமஸ்காரங்கள். என்கிறார் ஆதி சங்கரர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...