Tuesday, June 5, 2018

POONDI MAHAN



சித்தர்கள் - J.K. SIVAN

பூண்டி ஸ்வாமியார் : 9

சித்தர்கள் நினைத்த நேரத்தில் மறைபவர்கள், தோன்றுபவர்கள். அவர்களின் செயல்பாடுகள் எளிதில் அறிய முடியாது.

பர்வத மலை பற்றி எவ்வளவோ பக்தர்கள் நிறைய சொல்வார்கள். ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் நடமாடும் ஸ்தலம் அது. மனிதர் அதிகம் உலாவமுடியாதது.பௌர்ணமி காலங்களில் சித்தர்கள் பலர் வந்து சிவனுக்கு பூஜை அபிஷேகம் செய்வார்கள் இன்றும் கூட என்று நம்பிக்கை.

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு பிள்ளை என்று ஒருவர் பர்வத மலைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதுவும் சிவராத்திரி அன்று மிக விசேஷமான பூஜைகள் நடக்குமே . அவர் அங்கேயே தான் அப்போதெல்லாம் குடியிருப்பார். தன்னுடைய பெற்றோர்கள் சகோதரர்களோடு அங்கே இருப்பார். ஒரு சிவராத்ரி அன்று ஒரு உள்ளூர் விறகு வெட்டி பிள்ளை குடும்பத்ததோடு சேர்ந்து கொண்டு பௌர்ணமி சிறப்பு பூஜை காண பர்வத மலை சென்றார். அங்கே அன்னதானம் செய்தனர். பூஜைகள் முடிந்து இரவு மேலே மண்டபத்தில் தங்கினார்கள். அவர்களோடு ஒரு வயதான விறகு வெட்டிபோல் ஒருவர். இரவெல்லாம் பிள்ளை குடும்பத்தோடு தங்கிய அந்த முதியவர் மறுநாள் காலை எல்லோரும் கீழே இறங்கும்போதும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

அந்த விறகுவெட்டி போல் தோன்றியவர் உண்மையிலே யாரோ ஒரு சித்த புருஷராக இருக்குமோ என்று பிள்ளையின் குடும்பத்தினர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்த விறகுவெட்டி முதியவருக்கு அது எப்படி தெரிந்தது?

என்னைப்பற்றி அல்லவோ அவர்கள் பேசுகிறார்கள், நான் யாரென்று அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த முதியவருக்கு தோன்றி இருக்கும்.

அவர்கள் அத்தனைவருக்கும் தெரியும்படியாக ஒரு முள்புதர்முன் நின்றார்.

''நான் யார், என் சக்தி என்ன என்று தெரியவில்லையோ,நம்பவில்லையோ போல் இருக்கிறது. இவர்களுக்கு நான் யாரென்று நிரூபிக்கிறேன்'' என்ற சன்னமான குரல் அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாக கேட்டது.

எல்லோர் கவனமும் அந்த முதியவர் மீது படிந்தது. அடுத்த கணம் அவர் நின்ற அந்த புதர் அப்படியே ரெண்டாக பிளந்தது. அவர் அதன் நடுவே நிற்க மறுகணம் அந்த புதர் மீண்டும் ஒன்று சேர்ந்தது. அவரைக் காணோம்.

''அடாடா, நம்மோடு இருந்தவர் ஒரு சித்த புருஷரா? என்று அவர்கள் வியந்து பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் அந்த முதியவர் புதரிலிருந்து வெளியே வந்தார். எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் கீழே இறங்கி பச்சை அம்மன் ஆலயம் நெருங்கினார்கள். பூஜை நடந்தது. எல்லோரும் உணவு அருந்தினார்கள். பிறகு நடந்தார்கள்

முதலில் நாலு ஐந்து பேர், நடுவே அந்த சித்தர், அவர் அருகே பிள்ளை, அவர் உறவினர்கள்.

வழியில் ஒரு காட்டாறு. சித்தர் அதில் இறங்கி நீர் பருக சென்றார். அவரை திடீரென்று காணோம். எல்லோரும் தேடினார்கள். ஆற்றில் வெள்ளம் எதுவும் இல்லை, சிறிய ஓடை. முழுக வழி இல்லையே. வெகு நேரம் தேடி காணாமல் மனம் நொந்து வீடு திரும்பினார்கள்.

பிள்ளைக்கு ரொம்ப வருத்தம். ''அந்த சித்தரை நேற்று ராத்திரி எங்களோடு சேர்ந்து சாப்பிட வாங்க சாமி '' என்று கூப்பிட்டேன்.

''பரவாயில்லை அப்பா, நாங்க பன்னிரண்டு பேரு . நான் மட்டும் தான் வந்திருக்கிறேன். இன்னொரு சமயம் நாங்க பன்னிரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட வறோம் '' என்றார். எப்படியும் பிள்ளை விடாமல் அவரை வற்புறுத்தி அன்று இரவு அவர்களோடு சேர்ந்து சாப்பிட வைத்தார்.

இந்த கதையை பிள்ளையிடம் இருந்து கேட்டபோது பரணீதரனுக்கு பொறி தட்டியது. பர்வத மலை பற்றி பூண்டி சாமியாரிடம் கேட்டபோது. ' கதவை தட்டினேன். திறந்திருந்தது. உள்ளே போய் பார்த்தேன் பன்னிரண்டு பேர் இருந்தாங்க, சரி நேரம் சந்தர்ப்பம் சரியில்லை, நாம் எதற்கு அவர்களை தொந்தரவு செய்யவேண்டும் என்று வெளியே வந்துவிட்டேன்'' என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை அந்த முதியவர் சொன்ன பன்னிரண்டு பேர் பூண்டி சாமியார் ஏற்கனவே பர்வத மலையில் பார்த்த பன்னிரண்டு சித்தர்களோ? எத்தனையோ ரகசியங்களை தாங்கிக் கொண்டு இந்த பூமி இருக்கிறதே. அதில் இதுவும் ஒன்றோ?

ப்ரம்ம ஞாநி ஒன்று குழந்தை போலோ, அல்லது ஒரு சித்தபிரமை பிடித்த பைத்தியம் போலோ தான் நடந்து கொள்வான் என்று புரிகிறது. அவன் சொல்லும் செயலும் இப்படி ஒரு எண்ணத்தை நமக்கு தரும். பூண்டி சுவாமியார் மாதிரி ஒருவரை நாம் காணமுடியாது.

ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியார் சித்தர்களை ஞானிகளை பற்றி சொல்லும்போது “நாம் எல்லோருமே இந்த எலக்ட்ரிக் பல்ப் மாதிரி தான், நமக்கு ஒளி கிடையாது. ஆனால் நாம் ஒளிவீசுபவர்கள். பூண்டி சுவாமியார் போல் இருப்பவர்கள் நமக்கு ஒளி வீசும் சக்தியை அளிக்கும் சுவிட்ச் போன்றவர்கள். ஸ்விச் போடப்பட்டால் தான் விளக்குகள் ஒளி வீசும்.

பெரியவா பூண்டி ஸ்வாமிகளை பற்றி பேசும்போது ரொம்ப உயர்வாக மரியாதையோடு பேசுவார். ''நான் பூண்டி ஸ்வாமிகள் தர்சனம் பெற்றிருக்கிறேன்'' என்பார்.

தபோவனம் குரு மஹராஜ் ஞானானந்த ஸ்வாமிகளை கேட்டபோது ''அவரா, பூண்டி ஸ்வாமிகளா, அவர் உச்சத்துக்கு எல்லாம் உச்சமாயிற்றே'' என்றிருக்கிறார். எத்தனையோ ஞானிகள் அவரை தரிசிக்க பூண்டி சென்றிருக்கிறார்கள்.
1955களில் கூட பூண்டி சுவாமியார் கலசப்பாக்கம் கிராமத்தில் ஒரு கந்தல் உடுத்த பைத்தியம் போன்று உலவியிருக்கிறார்.

கம்பீர நடை, உடல் ஆகிருதி அவரை ஒரு ராணுவ வீரன் மாதிரி காட்டும். ஆரம்ப காலத்தில் அவரை அடிக்கடி கலசப்பாக்கம், காக்கும் கரை பிள்ளையார் கோவிலில் பார்க்கலாம், அல்லது ஒரு இடிந்த மசூதியில் காணலாம். இந்த ரெண்டு இடத்தில் இல்லாவிட்டால் அவரை நிச்சயம் திரௌபதி அம்மன் கோவில் அருகே ஒரு மரநிழலில் காணலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...