Monday, June 4, 2018

MAGIC



என் தாய் வழி முன்னோர்: J.K. SIVAN

'பீதாம்பர வித்தை''

ரெட்டை பல்லவி சீதாராமய்யர் நாற்பது வருஷ காலமே வாழ்ந்தவர். அவர் மரணம் அடையும் சமயம் அவர் மனைவி ஜானகி என்ற செல்லத்தம்மாளுக்கு வயது 28. பெண் அம்மணிக்கு 10 வயது. பிள்ளை வெங்கட்ராமனுக்கு 7 வயது. வயதான தாய் லட்சுமி அம்மாள் 80 வயதினள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள். இறைவன் மீது நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள்.

இதற்கிடையில் தோடி சீதாராமய்யர் தாய்மாமன் ராமஸ்வாமி பாரதிக்கு ஐந்து பிள்ளைகள் ஒரு பெண். நான்காவது பிள்ளை தான் வைத்யநாத பாரதி.

அவரைப் பற்றிமட்டும் ஏன் சொல்கிறேன் என்றால் அவரே எனது தாய் வழி பாட்டனார் வசிஷ்ட பாரதிகளின் தந்தை.

வைத்யநாத பாரதி, அந்த காலத்தில் செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை ஆகிய மனோவசிய சாஸ்திரத்தில் கை தேர்ந்த ஒரு வித்தகராக இருந்தார். இந்த கலைக்கு பீதாம்பர வித்தை, இந்திர ஜால வித்தை என்று பெயர். .இப்போது நாம் சொல்கிறோமே மாஜிக் (magicshow ) அது மாதிரி நிறைய மனோவசிய வித்தைகளை கற்று பிரபலமாக்கியவர்களில் ஒரு முக்கியமானவர் என் கொள்ளு தாத்தா வைத்யநாத பாரதி என்ற பீதாம்பர ஐயர். பீதாம்பர வித்தைக்கு ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் தெரிந்திருக்கவேண்டும். இதை தான் மனோவசியம் என்று சொன்னேன்.

இப்போதெல்லாம் மாஜிக் ஷோ செயகிறவர்கள், தலைப்பாகை, நீண்ட அங்கி, கலர் கலராக மேலே வஸ்திரங்கள், மீசை, பளபள ஜிலுஜிலு ஆபரணங்களுடன் காணப்படுகிறார்கள் அல்லவே. P .C .சர்க்கார் போன்றவர்கள் படம் பார்த்திருப்பீர்கள். அந்த காலத்தில் இப்படி மாஜிக் ஷோ செய்த வைத்யநாத ஐயரை மக்கள் பீதாம்பர ஐயர் என்று அழைத்தார்கள். இந்த பீதாம்பரையர் எப்படி இருப்பார் என்று என் தாத்தா எழுதி வைத்த குறிப்பிலிருந்து விவரிக்கிறேன்.

ஆஜானுபாகுவாக பரங்கிப்பழம் போல் சிவப்பு நிறம். தலையில் ஜரிகை தலைப்பாகை. கழுத்தில் விலையுர்ந்த ஜரிகை மற்றும் வண்ண வண்ண கொட்டடி போட்ட அங்கவஸ்திரம். உடலில் முழங்கால் வரை நீண்ட ஒரு அங்கி. இடுப்பில் இரு பெல்ட் மாதிரி அங்கவஸ்த்ரம் அதை பிணைத்திருக்கும். பத்து முழம் ஜரிகை வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி இருப்பார். அந்த அங்கியின் மேலே பீதாம்பரம் வஸ்திரம் சால்வை மாதிரி. கை விரல்களில் மோதிரங்கள் ஜிலுஜிலுக்கும். காதில் தோடு. தங்க அரைஞாண் தரித்தவர்.

ஒரு ஊரில் இவரது பீதாம்பர வித்தை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் முன்பாகவே ரெண்டு மூன்று பேரை அனுப்புவார். அவர்கள் தெருவெல்லாம் இவரது பிரதாபம் பற்றி சொல்லிக்கொண்டே போவார்கள். ஜனங்களை நிறுத்தி நிகழ்ச்சி எங்கே எப்போது என்று அனைவரையும் கூப்பிடுவார்கள். பாடுவார்கள். அதுதான் ADVERTISEMENT, அதே போல் நிகழ்ச்சிக்கு அய்யர் வரும் முன்பே சிலர் கட்டியம் கூறுவார்கள். ''பீதாம்பர ஐயர் வருகிறார்'' கல்வி களஞ்சியம், கற்பனை பொக்கிஷம், பில்லி சூனியத்துக்கு எமன் . அனைவரும் வாருங்கள் பீதாம்பர வித்தையில் மகிழுங்கள்.'' என்று மேள தாளங்களோடு அறிவிப்பார்கள். ஒருவன் குடை பிடித்துக் கொண்டு வருவான். சிலர் வாத்யம் வாசிப்பார்கள். அய்யர் குதிரைமேல் சவாரியை வருவார். ரெண்டு ஆள் குதிரை சேணத்தை பிடித்துக் கண்டு பக்கத்தில் நடப்பார்கள். எல்லோருமே சிஷ்ய கோடிகள் தான்.

அந்தக்காலத்தில் மோட்டார் கார், வண்டிகள் வசதி இல்லை. மாட்டு வண்டி, பீடன் கோச் குதிரை வண்டி, பல்லக்கு தான் பிரயாணத்துக்கு உபயோகமாகியது. சிலர் தனிப்பட்ட சௌகர்யங்களுக்கு குதிரை மீது ஏறி சென்றார்கள்.

தனி மனிதர்கள் வசதியுள்ளவர்கள் குதிரைகளில் பிரயாணம் செய்த காலம். ரொம்ப வசதி கொண்ட மேல் மட்ட வகுப்பு பீடன் கோச் வண்டி, ஜட்கா, மோட்டார் சைக்கிள், ரிக்ஷா, தள்ளு வண்டி, மாட்டு வண்டி ஆகிய சாதனங்களை, வாகனங்களை, உபயோகப்படுத்தினர்.

அதிக உயரமில்லாத ''மட்ட'' (cheap, என்று அர்த்தம் இல்லை, ) குதிரைகள் அதிகம் உபயோகித்தார்கள். சேணம், கடிவாளம் பிணைத்து அந்த குதிரைகள் எஜமானன் விருப்பப்படி ஓடும். குதிரையின் இரு பக்கங்களிலும் பைகள் பெரிதாக தொங்கும். அதில் தான் தனக்கு போகும் இடத்தில் தேவையான சமையல் சாமான்கள், பண்டங்கள், புத்தகங்கள், துணி மணிஆடைகள் எல்லாம் இருக்கும். இந்த பெரிய கித்தான் பைகளுக்கு ''கண்டாளம் '' என்று பெயர். இந்த குதிரைகள் உயர்ந்த ஜாதி ரகம் அல்ல. இந்த குதிரைகள் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் விலையுமல்ல. வெட்டவெளியில் புல்லை மேய்ந்து கொண்டு திரியும். கிடைத்த இடத்தில் தண்ணீர் குடிக்கும். மரத்தடியில் வைக்கோல் போட்டு கட்டி போட்டிருப்பார்கள். தூங்கும். அந்த காலத்தில் இப்படிப்பட்ட நாலடி, நாலரை அடி உயர குதிரைகள் பத்து இருப்பது ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது போல் நெரிசல் வீடுகள் இல்லை. ஊரில் சில வீடுகள் மட்டுமே, மற்றவை அங்கங்கு குடிசைகள்.

வைத்யநாத பாரதி என்ற பீதாம்பர அய்யர் ஊர்வலத்தில் இப்படி வரும்போது அந்தந்த ஊர் மணியக்காரர், மிராசு, பண்ணையார்கள், பட்டாமணியம், கர்ணம் , கணக்குப்பிள்ளைகள் ஊர் எல்லையிலேயே நின்று வரவேற்பார்கள். ஒரு பெரிய திண்ணை ஏற்பாடு செயதிருப்பார்கள். அங்கே ஆயத்தமாக, ரத்ன கம்பளம் விரித்து வைத்து, மர நிழல்களில் தரையில் ஜமக்காளத்தில் உட்காருவார்கள்.

நிகழ்ச்சிகள் பொதுவாக, கோவில் மண்டபங்கள், சத்திரங்கள், பொது அம்பல சாவடிகள், பெரியமனிதர் வீட்டு திண்ணைகளில் நடக்கும். தாரை தப்பட்டை அடித்து தெருவெல்லாம் செய்திகள் சொல்வார்கள்.

அய்யர் உட்கார திண்டு, சாய்ந்துகொள்ள தலையணை, தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம், கூஜாவில் நீர்.
தட்டு தட்டாக பழங்கள்.

வைத்யநாத பாரதிக்கு இளம் வயதிலேயே இந்த பீதாம்பர வித்தையில் மனம் பூரணமாக லயித்துவிட்டது. 15வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நேராக லால்குடி சென்றார். அவரிடம் ஒரு முக வசீகரம், சாதுர்யம், அதீத ஞாபக சக்தி, புத்தி கூர்மை இருந்ததால் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். லால்குடியில் வைத்யநாத பாரதியின் உறவினர் பிச்சு அய்யர் இந்த வித்தையில் பிரபலமாக வாழ்ந்திருந்த காலம். வைத்தியநாத பாரதி அவர் வீட்டுக்கு சென்று அவருடைய சிஷ்யனானார். குருவுக்கும் சிஷ்யனை ரொம்ப பிடித்து விட்டது. வெகு விரைவில் அநேக பீதாம்பர வித்தைகளையும் பிச்சு அய்யரிடமிருந்து கற்று கொண்டார்.

வைத்யநாத பாரதி வெளியூர்களான மதுரை திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்தினார். சென்ற இடமெல்லாம் பேரும் புகழும், விருதுகளும் குவிந்தன.

இப்படிப்பட்ட புகழோடு இருந்தவர் கொள்ளுத்தாத்தா. அவருடைய குரு பீதாம்பர பிச்சு அய்யரும் இப்படி தான் லால்குடியில் கொடிகட்டி பறந்தவர். ஐந்து தலைமுறையாக இந்த பீதாம்பர வித்தையில் புகழ் பெற்றவர்கள். அவர்கள் வம்சம் இன்னும் எங்கோ இருக்கும். பீதாம்பரம் முத்தண்ணா என்று திருச்சியில் ஒருவராம். பிற்பாடு வந்த வித்தைக்காரர்கள் பலர் பீதாம்பரம் பிச்சு அய்யர், வெங்கு ஐயர் என்ற பெயரைச் சொல்லியே காலம் தள்ளினார்கள் என்று தெரிகிறது. நிறைய பேரை உறவில் தெரியவே இல்லை.

இன்னும் மேலே சொல்கிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...