Monday, October 24, 2022

VALLALAR

 அடித்தது போதும் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 நாம்  குடும்பஸ்தர்கள். சகல உணர்ச்சிகளுக்கும்  அடிமை.      கோபம், தாபம்,   சுகம், துக்கம்,  இன்பம் துன்பம், சந்தோஷம், துயரம்  எல்லாம் கலந்து கட்டியாக  அனுபவிப்பவர்கள்,.

குப்பண்ணா  அரசாங்க அலுவலக குமாஸ்தா.  பட்ஜட் வருமானத்தில் வாழ்பவன். அவன் பெரிய பிள்ளை  ராமு  சரியாக படிக்கவில்லை,  கணக்கில்  20/100  வாங்கினான்  என்று அன்று காலை  பிள்ளை முதுகில்   தவில் வாசித்தான்.   ''ஐயோ அப்பா அம்மா;; என்று  ராமு கத்த  சமையல் கட்டிலிருந்து   ஓடி வந்து   அம்மாக்காரி  ''இப்படியா  குழந்தையை அடிப்பே, மனுசனா நீ''   என்று கணவனைத் தள்ளி விட்டு  பையனை அணைக்கிறாள்.   இது தான் தாய்ப் பாசம்.  
ஒருநாள்  சாயந்திரம்  பக்கத்து வீட்டு பையனுடன் விளையாடி அவன் சைக்கிளை ராமு கீழே தள்ளி பக்கத்து வீட்டுக்காரி அவள் பையன் முழங்காலில் ரத்தம் பார்த்துவிட்டு  ஒரே ரகளை .  ராமுவின் அம்மா ''எப்பவும் ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்கறே''  என்று ராமுவை  மொத்தினாள் . அவன் கத்தினான்.  பிள்ளை அழுகுரல் கேட்டு குப்பண்ணா ஓடிவந்து ''ஏ பிள்ளை,   நீ  என்ன பிசாசு பிடிச்சவளா, இப்படி போட்டு  அந்த குளந்தையை   சாத்தறியே'' என்று  அவளை விலக்கி  ராமுவை  தன்னோடு அணைத்து   அழைத்துக் கொண்டான். இது தந்தைப் பாசம்.  

இதெல்லாம் நமக்கு உண்டு.  சந்நியாசிக்கு உண்டா?  துறவிக்குத் தெரியுமா?தெரிந்து தான்  பாடுகிறார் அற்புதமாக  சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்னும் ராமலிங்க வள்ளல் பெருமான்.
'
'தடித்த ஓர் மகனைத்
தந்தை ஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்
தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்கு பேசிய
தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால்
என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்'' 

''அம்பலவாணா, தேனே அருமருந்தே, உன்னை விட்டால் எனக்கு யார்?   எத்தனையோ தவறுகள், பிழைகள் செய்தவன் நான்.  ஒரு வீட்டில் தாய் அடித்தால் தந்தை வந்து அணைப்பார்,  தந்தை அடித்தால்  தாய் வந்து அணைப்பாள் , எனக்கு தந்தையும் நீ தான் தாயும்  நீ தான்.  சகலமும் நீ தானே.  இதுவரை என்னை  வெளுத்து வாங்கி விட்டாய்.   போதும் போதும்,  இனி  தாள முடியாது,  அடிக்கிற கை தானே அணைக்கும். வா வந்து என்னை தடுத்தாட் கொண்டு  அணைத்து   அருள் புரிவாய்,  என உருகுகிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...