Friday, October 14, 2022

AMBAL

 அத்தனையும்  அம்பாளே -   நங்கநல்லூர்  J K SIVAN 


நமக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளும்  அம்பாள் வழிபாட்டுக்கு  உகந்த நாள். சுக்ர வாரம் என்று பெயர் கொண்டது.  அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை  தை வெள்ளி என்றால்  பெண்கள் கோவிலை மொய்ப்பார்கள். வீடுகளில் பூஜைகள், பாராயணங்கள், வெல்ல கொழுக்கட்டைகள் நிறைந்திருக்கும்.

 எல்லாவற்றிலும் ஹிந்துக்களுக்கு எதிரிடையான  கொள்கைகள் கொண்ட  இஸ்லாமியர் களுக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமை. அவர்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கிய தொழுகை நாள். அம்பாள் பரமேஸ்வரனின் பாதியானவள்.  பாகம் பிரியாள் . அர்த்தநாரி. அவளைக் கொண்டாடி வழிபட்டால் ஈஸ்வரனையும் வழிபட்ட பலன் அதனால் உண்டு.

எல்லா சரீரத்திற்குள்ளும்  ஜீவன்  இருக்கிறது. இத்தனை சரீரங்களும் ஒரு சரீரத்தில் அடக்கம்.  அந்த மூல வஸ்து  தான் ப்ரம்மம். பரமேஸ்வரன்.  ஆகவே  அத்தனை தோற்றங்களும்  சிவனில் பாதியான சக்தியே என்று புரிகிறது.   ஜீவன்களுக்கு சக்தி அவளால் தான்.  இயற்கை என்று நாம் அறியும் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளின் மனசு, புத்தி, சித்தம், அஹங்காரம், எல்லாமே  பரமேஸ்வரனில் அடக்கம்.  பிரம்மமும் ப்ரம்ம சக்தியும் பிரிக்கமுடியாதவை.

நாம் காணும் அனைத்து உருவங்களும், அவற்றின் எண்ணங்களும்  காரியங்களும்  அம்பாள் ஸ்வரூபம் தான்.  சர்வம் சக்தி மயம் .

 அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். c இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார். த்வயி பரிணதாயாம் நஹி பரம்.
இந்த உலகமே  பரமாத்மாவுக்கு சரீரம். சகல உயிர்களுக்கும் அவரே  அந்தர்யாமி.  ஒவ்வொரு ஜீவனிலும் காணப்படும்  துளியூண்டு ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும்  ஆதாரம்  அந்த  அந்தர்யாமி பரமாத்மாவே தான். 

அத்வைதம் என்ன சொல்கிறது?  எல்லாம் ஒன்றே என்று .   அந்த ஒன்று தான் எங்கேயும் எதிலுமாகவும், எதுவுமாகவும் உள்ளது என்றால்   எப்படி தற்கு தனியாக ஒரு உருவம் இருக்க முடியும்.   EVERYTHING IS  NOTHING . NOTHING  IS  EVERYTHING  என்பது இப்போது புரியும்.  உருவம் அருவமாகவும் அருவம் உருவமாகவும் காணப்படுவது இபடித்தான். 

காற்று எங்கேயும் இருக்கிறதே.  இல்லாத இடமே இல்லை, ஒவ்வொரு ஜீவனிலும் பிராணனாகவும் காற்று தான் இருக்கிறது. உள்ளும் வெளியும் எங்கும் இருக்கும் அதற்கு உருவம் எது? ஏது ?  அம்பாள் அப்படிப்பட்ட ஸூக்ஷ்மமானவள். ஸர்வ சக்தி அவள்  இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம்  எதிலும் நிறைந்தவள்.  அவளுக்கு எப்படி ஒரு தனிப்பட்ட உருவம் இருக்கும்?  நம்மைப் போன்ற சாமானிய மனசுக்கு இதெல்லாம் புரியாது.  அவள் தாய். அவளிடமிருந்து பிறந்தவர்கள் நாம் எல்லோருமே.  அதனால் தான் அவள் லோகநாயகி, லோகமாதா.  குழந்தைக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமே?  அதற்கு தான் பல ரூபங்களில் அவளைக்  காண்கிறோம். 

மகா பாபங்களை காரியமாக செயலில் காட்டாவிட்டாலும்  நம்  மனசில் நிரப்பிக்கொண்டு,  ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான  ஈஸ்வரி அம்பாள் தான். அம்பாள்  சுந்தரி ஸெளந்தரி .ஆதி சங்கரர்  ஸெளந்தரிய லஹரி  ஸ்தோத்ரங்களில் அவளை நம்  கண்முன் கொண்டு நிறுத்துகிறார். அவள் அழகுக்கு காரணம்,  அவள் அன்பு,  தாயின் கருணை, பாரபக்ஷமில்லாத தயை ஒன்றே. 

நாம் அவளை நினைத்த உருவத்தில், பெயரில்,  போற்றிப்பாடுகிறோம், வணங்கி வழிபடுகிறோம். ஆகவே தான் அவளை காளிதாசன் ''ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே '' ('சியாமளா தண்டகம்) என்கிறான். வர்ணம் என்றால் இங்கே கலர் இல்லை. அக்ஷரம். ஒலி வடிவ நாமம்.   தரங்கம், லஹரி என்றால் அலை.
அலையின் சப்தம்  அதன் மடிப்புகளுக்கேற்ப ஒலிக்கும்.  ஓயாமல் ஒழியாமல்  ஒலிப்பது.  சமஸ்க்ரிதத்தில்  சப்தத்தை 51 அக்ஷரமாக பிரித்திருக்கிறது. ''மாத்ருகா''  என்று பெயர். மாத்ரு என்றால் தாயார் என்றும் அர்த்தம். அம்பாள் தாய் தானே.  ஸப்த கோர்வை தான் மந்திரம்.  வேத மந்த்ரங்களை,  பீஜ அக்ஷரங்களை முறையாக உச்சரித்தால் அம்பாளை நேரில் காணலாம்.  லலிதா  ஸஹஸ்ர நாமம் அழகாக இதை சொல்கிறது. ஆகவே  அம்பாள் தான் இறைவன். இறைவன் தான் அம்பாள், 

 ஸ்ருஷ்டி  ஸ்திதி, சம்ஹாரம், ஆகிய முத்தொழில்களையும்  புரிபவள் அம்பாள்.  'அ, உ ம''  தான்  ஓம் எனும் பிரணவ மந்திரம், அதுவே பிரணவ ஸ்வரூபியான  உமா.   எவ்வளவு சிம்பிள் புரிந்துகொள்ள!


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...