Tuesday, October 4, 2022

DEVANAMPALAYAM TEMPLE








 ஒரு அருமையான கோவில்  - #நங்கநல்லூர_J_K_SIVAN


 தேவனாம்பாளையம் சிவன் 

கோவில்கள் என்றாலே  என் மனதில் தோன்றுபவர்கள்  இருவர்.  ஒருவர் என் அருமை நண்பர் ராஜேந்திரன். அற்புதமான  புகைப்படங்களோடு  ரொம்ப ரொம்ப விவரமாக  எங்கெல்லாமோ   மூலை  முடுக்குகளில் இருக்கும் கோவில்களைக் கூட தேடி ச் சென்று படமாக்கி, தேனாக  விஷயங்களை சேகரித்து அளிப்பவர்.  அவர் தான் நான் அன்பாக அழைக்கும்  கோவில் ராஜு.   இன்னொருவர்  வேலுதரன் , இவர் படங்கள் வெகு அற்புதமானவை. ஒவ்வொரு படத்திலும் அவர் பெயர் இருக்கும்.  இவரை நான் நேரில் அறிந்த தில்லை, பழக்கமும் இல்லை. அவர் புகைப்படங்கள் கோவில் விவரங்கள் மூலம் என் நெஞ்சில் நிறைந்தவர்.

கோயம்பத்தூர்  ஜில்லாவில் பொள்ளாச்சி பகுதியில் ஒரு கிராமம்  தேவனாம்பாளையம். தேவநகர்  என்ற பெயரும் அதற்கு இருந்தது ரொம்ப பொருத்தம் ஏனென்றால் அங்கே  அமணீஸ்வரர் என்ற சிவன் கோவில் அற்புதமானது. அம்பாள் பெயர்  அறம்வளர்த்த நாயகி.  அகிலாண்டேஸ்வரி. தர்மசம்வர்த்தனி. கற்பக ஆறு எனும் நதிக்கு நடுவே  ஒரு பெரிய பாறையின் மீது இந்த கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது விசேஷம். ஆற்றில் ஜலம்  நிரம்பினால் கோவிலை அடைவது கொஞ்சம் சிரமம்.   பிரஹாரத்திலும்  கோஷ்டங்களிலும்  அற்புதமான  சிலைகள் கண்ணைக் கவருகிறது. . முக்கியமாக  ருத்ர தாண்டவ சிவன்  அஷ்ட புஜங் களிலும், எட்டு கரங்களிலும்  ஆயுதங்கள்  தாங்கி  ஆவேசமாக  உரோரு காலை தலைக்கு மேல் தூக்கி ஊர்த்வ தாண்டவமாடும்  சிற்ப நேர்த்தி  ஈடு இணை இல்லாதது.. ஒரே   கர்ப  க்ரஹத்தில் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் எனும் திரிமூர்த்திகள்  ஸ்வயம்புவாக  சிலா ரூபத்தில் காட்சிதருகிறார்கள்.   சமணர்கள் ஆதிக் கத்தில்  இந்த கோவில் சமணர் கோவிலாக இருந்து பின்னர்  மறுபடியும் சிவன் கோவிலானது காலத்தின் கட்டாயம்.

கோவிலை ஒட்டிய  பாறைகளில் சமணர்கள் மூலிகைகளை அரைப்பதற்கான குழியை  தோண்டி உபயோகித்தது  இன்னும் இருக்கிறது.. கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இவை  விக்ரம சோழன் காலத்திற்கும் முந்திய காலத்தவை. என்று சொல்கிறது.  தாராளமாக இது  கிட்டத்தட்ட  ஆயிரம் வருஷ கோவில் தான்.  அத்ரி மகரிஷி அனசுயா தேவி  சிவனை வழிபட்ட ஸ்தலம்.  கோவில் மண்டப தூண்கள் சிறந்த சிற்பக்கலை கொண்டது.  பராமரிக்க தெரியாதவர்கள் நாம் தான். 
இந்த கோவிலை  கோயம்பத்தூர் உக்கடம் பஸ்  நிலையத்திலிருந்து 34 கி.மீ. தூரத்தில் அடையலாம் .  பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ. வாடகை கார் வசதி இருக்கிறது.

தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு   சிவனை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவார்கள் என்பதால் இந்த ஊருக்கு தேவநகரம் என்று பெயர். அதுவே இப்போது தேவனாம்பாளையம். சிவனுக்கு ஆபரணம் சர்ப்பம். சிவன் கோவில்களில் நாகத்தின் நடமாட்டம் உண்டு. இங்கும் ஒரு வாழும் பாம்பு உள்ளதாக சொல்வார்கள்.
பொள்ளாச்சியில் இருந்து ( 18 கிமீ)நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பஸ்கள். கிணத்துக்கடவிலிருந்து (15 கி.மீ.)நெகமம் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.வாடகை கார்களில் செல்வது நல்லது.

சிதைந்து சீரழிந்து அடையாளம் இன்றிப்  போகுமுன் நாம்  காப்பாற்றி புதுப்பிக்க, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க  இது போல் எத்தனையோ  கோவில்கள்
 இருக்கின்றன. எந்த மஹானுபவர்கள் இதை நிறைவேற்றுவார்களோ.!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...