Thursday, October 20, 2022

ambal


 பேசும் தெய்வம்   நங்கநல்லூர்  J K  SIVAN 

                                        
அவளைத் தெரியுமா?  

வெள்ளிக்கிழமை  அம்பாளைப்  போற்றி வணங்கி துதிக்கும் வீடுகள் அநேகம் இன்னும் இருக்கிறது.  ஆண்களை விட பெண்களிடம் பக்தி உணர்வு அதிகம் என்பது தெரிந்த விஷயம். வெள்ளிக்கிழமைகள் மங்கள கரமாக  இருக்க இதுவும் ஒரு காரணம். 

உலகமே  அசைவு மயம்.  அசைவற்றது ஜீவனற்ற ஜடம்.  ஸ்திர வஸ்து. STATIC  மேட்டர்.  அதன் அசைவுக்கு 'அவள்' அவசியம். சக்தி.   அவனன்றி  ஓரணுவும் அசையாது எனும்போது  அந்த  ''அவனை'' யே  அசையச் செய்பவள் அவள்.  சக்தி இல்லையேல்  சிவன் இல்லை.

சக்தி உமையை நாம்  யாருமே  பார்த்ததில்லை.  அம்பாளின்  படங்கள்  ஒவ்வொன்றும்  ஒவ்வொருமாதிரி இருக்கிறதே?  எல்லாமே  அழகாகத்தான்  இருக்கிறது.  வைரத்தை  எந்த பக்கம்  பார்த்தாலும்  ''டால்'' அடிக்கி றமாதிரி.

மஹா பெரியவா சொல்லாத  அற்புத சேதிகள்  இல்லையே.  அதில் கொஞ்சம்  அனுபவிக்கலாம்:.

''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு   உருவகப்படுத்த ஒரு  ஐடியா.    ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற   ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா  யோசனை பண்ணிப்பாருங்கோ.    அந்த சந்தோஷத்தில்  அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.

நூறு பேர்  வேண்டாம்.  முடியாது நம்மால்.  ஒரு  பத்து பேருக்காவது  போடறமா?   ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன்  கிட்டேயே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும்  மனஸினால் மகா பாபங்களை , விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான்.  அவள் முகம்  எப்படி ஜீவனோடு  சந்தோஷத்தில்  கொப்புளிக்கும்?

அவளுடைய அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை  பண்ணக்கூட முடியாது. எப்படி சார்  நான் அதைப் பற்றி எழுதறது?  அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம்  ஆச்சே.   அதால்  தானே ஸெளந்தரிய   லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் அற்புதமாக  பாடியிருக்கிறார். சங்கரரால் மட்டும் எப்படி முடிந்தது என்று கேட்கிறீர்களா?. அவரே சக்தியின் உடைமையாளர் தானே. தன்  பாதி உடம்பை பார்த்துக்கொண்டே  பாடியிருக்கலாம்!  பாதி உண்மை பாகன் அல்லவா.  அர்த்த நாரீஸ்வரர் ஆயிற்றே.  

அது சரி,   இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது?  அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?,  தாங்குமா?

அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு  எந்த ரூபத்தில்  மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய  பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, துர்கா,  காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு.  வேறு  வேறு ரூபம்.    

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம்
 என்பது ஒரு சப்தக் கோவை. அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.  காளிதாஸர் அவளை  ''ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே'' என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி  செய்கிறார். வர்ணம் = நிறம் மட்டும்  அல்ல. ''அக்ஷரம்'' என்றும்  அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர் கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது . மாத்ரு என்றால் தாயார் என்பது தெரியுமே.  சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத் தான் மந்திரம் என்கிறோம்.

மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலம் பிரணவம்.(''ஓம்'')  அதிலிருந்து இந்த நாம,  ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது.  நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ  ,உ ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது.

அ - சிருஷ்டி;  உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.''


மஹா பெரியவாளை விட,  இதற்கு குறைந்து  யாராவது  அம்பாளை நறுக்கென்று  விவரிக்கமுடியுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...