Monday, October 31, 2022

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


தெய்வ குத்தம்.

இது தான் நம் குணம். குடும்பத்தில் எப்போதாவது நல்லது ஏதாவது நடந்தால், காரியம் வெற்றிபெற்றால் அதற்கு நாம் தான் காரணம். தடங்கல் வந்தால், தோல்வியுற்றால், அதற்கு காரணம், சிலருடைய பொறாமை, வயிற் றெரிச்சல், துரோகம், குடும்ப சாமி குத்தம்.திருஷ்டி. இப்படிப்பட்ட மனப்பான்மை அன்றிலிருந்து இன்றும் தொடர்வது. இப்படி நினைக்காத குடும்பங்கள் உண்டா என்பது அதிசயம்.

சொந்த விஷயத்தில் தான் இது என்பதல்ல. பொது விஷயத்திலும் சாமி குத்தம் மிக முக்யமானதாகும்.

மஹா பெரியவா கிட்டே இப்படி ஒரு வந்தது

மாயூரத்திலிருந்து சீர்காழி செல்லும் பாதையில் அஞ்சு ஆறு கி.மீ தூரத்தில் ஒரு கிராமம் நாகங்குடி. சீர்காழி பாதை யிலிருந்து உள்ளே அரைமணி நேரம் நடந்தால் வரும். ஊரில் எங்கும் பச்சைப் பசேல் என நெல் வயல். எங்கும் மரங்கள், வரப்பு மேல் நடந்து சுருக்கு வழியில் செல்வது ஊரார் வழக்கம். ஒத்தை மாட்டு வண்டி வழியாக ஊர்ப் பாதையில் சென்றால் அடையவும் வழியுண்டு. அது சுற்று வழி. 60 அல்லது 65 வருஷங்களுக்கு முன்பு இந்த ஊரில் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்.

ஊர்க்கரர்களிடையே நல்ல ஒற்றுமை. பக்தி. எல்லோருமாக ஒன்று சேர்ந்து கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்டியபோது ஒரு ஷாக். நிதி வசூல், புனருத்தாரண கும்பாபிஷேக வேலைகள் ஜரூராக நடக்கையில் முக்யமான நபர் கமிட்டி தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தாராம். வேலை அப்படியே நின்றது. என்ன செய்வது?

சில மாதங்கள் கழித்து மீண்டும் திருப்பணி ஆரம்பித்தார்கள். என்ன துரத்ரிஷ்டமோ, வேறொரு அறங்காவலராக நியமிக்கப்பட்டு பணி மீண்டும் துவங்கியது. அவரும் திடீரெனெ போய் சேர்ந்துவிட்டார்.

சின்ன ஊர். யாரோ கொளுத்திப் போட்ட பட்டாசு படால் என வெடித்தது ''இது ஏதோ சாமி குத்தம்'' தக்க பரிஹாரம் பண்ணாமல் வேலை நடக்காது'

கிராமமே கலங்கி முழங்கால் மேல் தலையை வைத்துக்கொண்டு நடுங்கிப் போய் யோசித்தது.

'கோவில் வேலையா, ஐயோ, எனக்கு வேண்டாமப்பா' என்று எல்லோரும் உதறிக்கொண்டு சென்றால் வேலை எப்படி தொடரும்? கோவில் வேலை பாதியில் அப்படியே நின்றது.

அந்த கிராமம் கதி மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காகவே ஒரு மகான் அங்கே விஜயம் செய்தார்.
ஈஸ்வரனே அங்கே நடமாடும் தெய்வமாக மஹா பெரியவாளாக அந்த கிராமத்திற்கு விஜயம் செய்து சில நாட்கள் தங்கினார்கள்.

கிராமத்தார் பெரியவாவிடம் ஓடினார்கள்.
“சாமி…. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியலே… அடுத்தடுத்து இந்த மாதிரி நடந்துடுச்சு… கோவில் திருப்பணியும் நின்னு போச்சு… சாமி தான் ஏதாவது வழி காட்டணும்”
பெரியவா காலில் விழுந்து வணங்கி கிராம மக்கள் வேண்டினார்கள்.
பெரியவா கோவிலை சென்று பார்த்தார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை…
“கோவிலை சுற்றி முதலில் அகழி வெட்டுங்கள். அப்புறம் திருப்பணியை துவக்கலாம்!” என்றார்.
பெரியவாவின் உத்தரவை அடுத்து கோவிலை சுற்றி உடனடியாக பெரிய அகழி வெட்டப்பட்டது.

ஏன் அகழி? கோபம் என்பது உஷ்ணம். சூடானது அல்லவா. அதைத் தணிக்க நீர் தானே அவசியம்? ஏதோ தேவதையின் கோபத்துக்கு ஆளான அந்த கிராமம் பெரியவா சொல்லி கட்டிய அகழிக்குப் வெகு விரைவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகமும் நிறைவு பெற்றது. மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.கோவில் கிராமத்திலிருந்து துண்டிக்கப் பட்டு ஒரு தனித் தீவு போல காட்சியளித்தது. இன்றும் நாகங்குடி செல்பவர்கள் கைலாசநாதரையும், சௌந்தர்ய நாயகியையும் தரிசிக்க அகழியைக் கடக்க போட்டிருக்கும் பாலம் மூலமாக செல்லலாம் என்று தெரிகிறது. அதற்கு பின்னர் சில கும்பாபிஷேகங்களும் நடைபெற்றிருக்கிறது.

இந்த கோவிலைப் பற்றி rightmantra.com என்ற வலையகத்தில் உள்ளதாக ஒரூ நண்பர் சொல்லி அந்த கோவிலின் படத்தை மட்டும் அதிலிருந்து எடுத்து உங்களுக்கு காட்டுகிறேன்.

அது சரி…பெரியவா ஏன் அகழி வெட்டச் சொன்னார்கள்? என்ன தோஷம்? எந்த தேவதைக்கு கோபம்?
தேவ ரகசியத்தை என்னிடம் கேட்டால் நான் எப்படி சொல்லமுடியும்.!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...