Friday, October 21, 2022

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
மஹா பெரியவா கிட்டே  100 கேள்விகள்.


எல்லோரையும்   ஆன்மீக  விஷயங்கள், பகவத் விஷயங்கள் படியுங்கள்  என்று ஊக்க முயற்சிப்பது  ரொம்ப கடினமான  முடியாத காரியம்.  சிலரைப் படிக்க  வைப்பதற்கே  தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். அது நல்ல விஷயங்கள் மேல் இயற்கையாக  எந்த வெறுப்பினாலும் இல்லை.   ஸத்  விஷயங்களுக்கு,  மீதி  அக்கப்போர்  விஷயங்கள், ஊர் வம்புகள், கிசு கிசுக்கள்,  நடிகர் நடிகை வாழ்க்கை விஷயங்களைப்  போல்    கிரஹிக்க  வைக்க இயலுவதில்லை.    விஷம், விஷமம்,  கலந்த  ஆர்வம்  ஆகியவற்றில் இருக்கும்  ஈர்ப்பு சக்தி நல்ல விஷயத்துக்கு  ரொம்ப கம்மி.  

ஆன்மீக  விஷயங்களைபோல  மற்றவற்றை  புரிந்து கொள்ள கஷ்டப்பட வேண்டாம்.  மூளையை கசக்கிக் கொண்டு யோசிக்க வேண்டாம்.  இந்த காதில் வாங்கி அந்த காதில் விடலாம்.  அடுத்தவரிடம் பகிரலாம்

.ஆன்மீகம்  கோவில் குளம் பக்தி போன்ற  விஷயங் களுக்கு எல்லோரையும் ஈர்க்கும் சக்தி, க்ராஹிக்கும்  சக்தி நிச்சயம் இருக்கிறது.   நாட்டம் வேண்டும். மனம் கொஞ்சம் பண்பட்டால்,  பக்குவப்பட்டால்  அவை நம்மை  ஈர்க்கும்.  கிரஹிக்கும். அதன் ருசி அறிந்தவன் பிறகு வேறெதிலும் நாட்டம் கொள்ள மாட்டான். 

எனக்கு உள்ளூர  ஒரு சந்தோஷம்.  நிறைய பேரை  நான் நல்ல விஷயங்கள் படிக்க வைக்கிறேன் என்று தெரிகிறது.  மனதிற்குள்ளேயே  திட்டினாலும் , வெளிப்படையாக  சபித்தாலும்  அது நேரில் இல்லை. நிறைய  நண்பர்களை,நான் பார்த்ததும் இல்லை, அவர்களோடு பேசியதும் இல்லையே.    கிருஷ்ணன்
இன்னும்  அநேகரை   ஆன்மீக வலைக்குள்  வளைத்துப் போட அருள் புரிய வேண்டும். இதுவே  இந்த ஜென்மத்
தில் நான் செய்த ஒரே புண்ய கர்மா என்று அப்போது   திருப்தி கொள்வேன்.

மஹா பெரியவா சொன்ன அற்புத விஷயங்களை 
சில வற்றை   ''அவரிடம் நான் கேள்வி கேட்டு அவர் பதில் சொன்னது போல்''   அமைத்திருக்கிறேன்.  படிக்க எளிமையாக இருக்கும். கஷ்டப்பட வேண்டாம். 
மஹா  பெரியவா  கிட்டே இருந்து நமக்கு கிடைக்கற  வார்த்தைகள் முத்துக்கள்.அபரிமிதமாக முத்துக்கள் தோன்றும் மஹா சமுத்திரம்  மஹா பெரியவா. அவர்  பேசினது, சொன்னது எல்லாத்தையும்  ஒருத்தராலும் ''இவ்வளவு தான்'' என்று எடுத்து காட்ட முடியாது.   ஏதோ  அங்கே ஒண்ணு  இங்கே ஒண்ணு  என்று தேடித் பிடிச்சு சொல்றதப் பார்த்தே  அசந்து போகும்  நண்பர்களே,   இதுவே சாத்தியமா  என்று நினைக்கிறீர்களே, மஹா  பெரியவாளோடு எத்தனை லக்ஷம் பேர் கூடவே இருந்து முடிந்தவரை அதெல்லாம் அனுபவித் திருப்பார்கள்.  எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு'.    இரு கரம் சிரம் மேல் தூக்கி  அடி மனசி லிருந்து ஆழமாக  சொல்கிறேன். கண்ணீர் மல்குகிறது. 

ஒரு நூறு  கேள்விகளுக்கு பெரியவா பதில் சொல்றா மாதிரி சில அற்புத விஷயங்களை சொல்லட்டுமா   இது பக்தர்கள்  கேள்விகளுக்கு பெரியவா பதில் மாதிரி அமைச்சிருக்கேன்.

1. பெரியவா  உங்களை ஒண்ணு  கேக்கணும்
''.''கேளேன்''
''பகவான் எங்கே இருக்கார்?  அவர் இருக்கிறதை 
தெரிஞ்சுண்டு நான்  தப்பு பண்ணாம இருக்க முடியுமா?.

''ஸ்வாமி  எங்கும் இருக்கிறார்.  எதுக்கு அப்போ  அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமே  தவிர  எங்கேயு மே  அவர் இருக்கார்  என்ற நினைவு மனதில் யாருக்கும் இல்லை.  சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம்  இருந்தால் ஒருத்தன்  பொய்சொலுவானா? கெட்ட காரியம் பண்ணுவானா.  பகவான்  கேட்டுண்டு இருக்கார், பார்க்கிறார் என்ற உறுத்தல் இருக்கணுமே. எங்கும் பகவான்   இருப்பது உண்மை.   அவர் இருப்பது மாத்திரம் தெரிஞ்சா அது  நமக்குப் போதாது.அவரை சதா நினைக்கணும்.  அவருடைய அருளைப்பெற வேண்டும்.

2. 'அதற்கு தான்  ஆலயங்கள் அவசியமா?''
''நல்ல கேள்வி கேட்டேடா''
'சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பு தான்.  ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால்  அடுத்த கணமே அது ''கப்'  என்று  தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக  சூரிய  கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது.   அது தானே நெருப்புக்குக்  காரணம்.   லென்ஸ் மாதிரி தான்  கோவில்கள் எல்லாமே.  எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படி   அருளை, அனுக்ரஹத்தை  குவித்து சேமித்து நமக்கு தருவதற்கு தான்  கோவில்கள் அவசியம்.  அங்கே போனால் எனக்கு  ஒரு ''வைப்ரேஷன் வருது''    என்று சொல்கிறோமே  அது தான் இந்த  கோவில் லென்ஸ் செய்ற காரியம்.   இனிமேயாவது குடும்பத்தோடு, குழந்தைகளோடு கோவிலுக்குப்  போ.''.

3. ''எல்லோரும்  இதை புரிந்து கொண்டு பூரணத்வம் பெற முடியுமா  பெரியவா ?''

''கோடானு   கோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அந்த  ஒருத்தன்  பெற்ற  அனுக்ரஹத்தாலேயே  இந்த  உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருத்தன்   உருவாகவே,   உண்டாகவே தான்  என் போன்ற சந்யாசிகள் ஊர் ஊராக  அலைந்து தெய்வீக  பிரசாரங்களைப்  பண்றோம்.''

4.'' பெரியவா, ஒரு சின்ன கேள்வி கேட்டு நிறுத்திக் கிறேன் இப்போதைக்கு.   மனுஷா  பாபம்  பண்ணாம இருக்க முடியாதா?''

'உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா ன்னு கேட்டால்,  நிச்சயம் குழந்தை அல்லது பைத்தியக்காரன்  தான்  பாபம் பண்ணா தவன்.    ஞானிகள்  அடையும்  உயர்ந்த நிலையை ‘பாலோன் மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மத்தம்  என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம். உன்மத்தத்தை  உடையவன்  உன்மத்தன். ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை பரமேஸ்வரன் மட்டுமே  தரித்துக் கொண்டிருக் கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம்.  அவனைப்   ''பித்தா''  என்று கூட  தேவாரத்தில் கூப்பிட்டிருக்கே.   உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.(பைரவர்களில் கூட  உன்மத்த பைரவர் ஒருவர் உண்டு)

இன்னும்  கேட்டுச் சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...