Tuesday, October 18, 2022

MY GRAND PA

 


தாத்தா  ஞாபகம். -  நங்கநல்லூர்  

சில மஹான்கள் குடத்திலிட்ட  விளக்காக  வெளியே அதிகம் தெரியாமல் வாழ்ந்து மறைந்துவிடுபவர்கள். அப்படி ஒருவர்  பிரம்மஸ்ரீ புராணஸாகரம்  வசிஷ்ட பாரதிகள். நேற்று  அக்டோபர்  18, (1945).  அவர் நினைவுநாள்.  77 வருஷங்கள் ஆகிவிட்டது அவர் மறைந்து.    
அவர் விட்டுச் சென்ற  சில குறிப்புகளிலிருந்து சில   தகவல்களை இன்று  நினைவு கூர்கிறேன். 
தாத்தா  ஞாபகம் - நங்கநல்லூர்  J K  SIVAN 

என் தாய்  ஜம்பாவதி  சிறுவயதிலேயே  தாயை இழந்தவள். இரண்டே குழந்தைகள் தாத்தாவுக்கு அப்போது.  என்  பெரியம்மா பெயர்  மைனாவதி.  ரெண்டு மூன்று வயது பெரியவள்.  தாத்தாவுக்கு மறுமணம் ஆகவில்லை. ரெண்டு தாயில்லா குழந்தைகளையும்  யார் பொறுப்பிலாவது ஜாக்கிரதையாக விட்டுவிட்டு  பல ஊர்களுக்கு சென்று ராமாயண பிரசங்கம் செய்து ஜீவனம். ஒவ்வொரு பிரசங்கமும் சிலசமயம் 10நாட்கள், ரெண்டு மாத காலம் கூட  ஆகும்.  
இது பற்றி  தாத்தா சொல்வதைக்  கேளுங்கள்:

''நான் தஞ்சாவூரில்  கருத்தட்டாங்குடியில் (இப்போது கரந்தை) பிறந்தவன். சிலகாலம்  புதுக்கோட்டையில் வாழ்ந்த பிறகு மெட்ராஸ் வந்து ஸ்திரமாக வசிக்க தொடங்கினேன்.  

அப்படித்தான்  ஒரு முறை கும்பகோணம் செல்லும்போதும்  குழந்தைகளை  பொறுப்பாக ஒரு குடும்பத்திடம்  விட்டுச் சென்றேன். கும்பகோணம் குடந்தை எனப்படும்.  அங்கே பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு முறை  கங்கை, சிந்து, யமுனா,  சரஸ்வதி கோதாவரி, நர்மதா நதிகள் வந்து காவேரியில் கிணறுகளில் வந்து  சங்கமமாகும் புண்ய நிகழ்ச்சி நடைபெறும்.  கும்பகோணத்தில் நடுநாயகமாக  கும்பேஸ்வரர்,  நாகேஸ்வரர், கிழக்கே மேற்கே கோமேசர்,  விஸ்வேசர் ஆலயங்கள்.  உலகின் பல பாகங்களிலிருந்து  மஹாமஹ புண்ய ஸ்நானம் செய்ய எத்தனையோ பேர் வருவது வழக்கம்.

எனது ஆப்தர், நண்பர், ஸ்ரீ பாலக்காடு அனந்தராம பாகவதர்  திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் ஆதரவில் கும்பகோணம் காமாக்ஷி ஜோசியர் தெருவில் ஒரு தனி க்ரஹத்தில் அப்போது  சௌகர்யமாக வசித்து வந்தார்.  

நான் கும்பகோணம் சென்ற சமயம் கீலக  வருஷம் மாசி மாதம். அம்பலவாண  தேசிகர்  கும்பகோணம் மஹாமஹ ஸ்னானம் செய்ய  வந்திருந்தார்.  மாதளம்பேட்டை  தெருவில்  உள்ள ஆதீன மடத்தில் தங்கினார். தெருவை மடக்கி பெரிய  பந்தல் போட்டு  அரசாங்க உத்யோகஸ்தர்கள், மற்ற பிரமுகர்கள் வந்து தங்க, விருந்து  போஜனம் செய்ய தடபுடல் ஏற்பாடு செய்திருந்தார்.   பிரபல சங்கீத வித்வான்களை அழைத்து கச்சேரிகள் நடந்தன.   வித்வான்கள் அனைவருக்கும் சன்மானம் அளித்தார்.  அனந்தராம பாகவதர் என்னை அழைத்துக் கொண்டு போய் ஆதீன  மடாதிபதி  அம்பலவாண தேசிகருக்கு  அறிமுகம் செய்வித்தார். 

''இவர்  தான் வசிஷ்ட பாரதிகள்.  எனக்கு தமிழ் போதித்தவர். அப்பர் ஸ்வாமிகள் சரித்திரம், மற்றும் சில புராண கதைகள்  இவர்  மூலம் தான் நான் அறிந்துகொண்டு  பிரவசனம் பண்ணுகிறேன்.   கம்ப
ராமாயணத்தில் ப்ரஸித்தர். சன்னிதானம் இவரைப் பற்றி  பத்ரிகைகளில் அறிந்திருக்கலாமே '' 

''ஆஹா, இவரைப் பற்றி  அறிந்திருக்கிறேன்'' என்ற அம்பலவாண தேசிகர்  என்னைப்  பார்த்து  ''உங்களுக்கு  ''எண்ணுதற்காக்கரிது.. பாடல் பழக்கமுண்டோ?'' என்றார். 

''ஆம்  ஸ்வாமிகளே.   அது  கம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில்,   வேள்விப்படலத்தில் வரும் கம்பநாட்டாழ்வாரின் ஒரு அற்புத  கவிதை'' என்று  பாடினேன்.

''எண்ணுதற்க்காக்கரிது  இரண்டு மூன்று நாள் 
விண்ணவர்க் க்காக்கிய  முனிவன்  வேள்வியை, 
மண்ணனைக்  காக்கின்ற மன்னன் மைந்தர்கள் 
கண்ணினைக்  காக்கின்ற இமையில் காத்தனர்''

அர்த்தமும் விளக்கினேன்:  '' ப்ரம்மாவாலேயே முடியாத காரியம் இந்த மஹா யாகம்.   யாகத்தின் பெருமைபற்றி   எண்ணுவதற்கே  இயலாத அளவு பெரியது. இந்த யாகத்தை தடுக்க அரக்கர்களால்  எண்ணக்கூட முடியாது.   முனிவர்கள் ரிஷிகள் இருக்கும் இடங்களை அறிந்து அவர்களுக்கு துன்பம் விளைவிக்கும்  ராக்ஷஸர்கள், இந்த யாகத்தைப்பற்றி  அறிந்து எப்படி தடுப்பது என்று கவலை கொண்டார்கள்.  ஆங்கிலத்தில்  THOUGHT READING,  MIND  READING  வகை.  பாட்டில் வரும் 2,3  என்பது  யாகத்தின் காலம், ஐந்து நாள் என காட்டும்.  பஞ்சராத்ரம் என்றும் கொள்ளலாம்,  2X 3 =6 நாள் (ஷட் ராத்ரம்)  என்றும் பொருள்படும். நாள் என்பது  நக்ஷத்திரத்தையும் குறிக்கும். 

கம்பர்  மிதிலைப்படலத்தில்  ஒரு கவிதையில் ''அரச மாதவன் யாதி ஐந்து நாள்....'' என்று வருவதைக் குறிப்பிட்டேன்.  வடக்கே உள்ள ஐந்து நக்ஷத்திரங்கள் (அவிட்டம் முதல் 5)  தென்பால் மாற்றியவை   அமையும்.... எனும்போது தேசிகர்  குறுக்கிட்டார்.  

''பாரதியாரே , ஆஹா, அற்புதம். ரெண்டடிகளே போதும்... இதை அறிந்துகொள்ளவே  அரை மணி நேரம் ஆனது தெரியவில்லை.  அனந்தராம பாகவதரே,   நீங்கள்  ரொம்ப அருமையான ஒரு ஸ்நேகிதரைப் பெற்றிருக்கிறீர்கள். பிறகு ஒருநாள் விவரமாக  இவரிடம்  நிறைய  அறியவேண்டும் ..''  என்றார். 
எனக்கு  சன்மானம், பீதாம்பரம் அளித்தார்.''

 சின்னசாமி ஐயர் குமரன்  சுப்ரமணிய அய்யருக்கும்'' பாரதி'' பட்டம்   எட்டையபுரம் ஜமீன்   சமஸ்தான ராஜாவிடம் பெற்றபடி, எங்கள் தாத்தா புதுக்கோட்டை சமஸ்தானத்தில்  ''பாரதி'' பட்டம் பெற்று என்றும் வசிஷ்ட பாரதிகளாகி விட்டார். 

தாத்தா பற்றி சொல்வதற்கு ரொம்ப இருக்கிறது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...