Sunday, October 23, 2022

CHIDAMBARAM NATARAJAA

 


நடராஜா....     நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு அற்புத  பழம் பாடல்  இன்று கேட்டேன். ஆஹா யதுகுல காம்போதி எனும்  மனதை மயிலிறகால்  வருடும் இனியும் ராகத்தில் ஒரு சிவ பக்தன்  மூடிய  தனது கண் திரையில் பளிச்சென்று  கால் தண்டை,  சதங்கை, சிலம்பொலிக்க  சிதம்பரத்தில்  ஆடலரசன் நடராஜன் ஆடிய காட்சியை கண்டு அப்படியே எழுத்தில் படம் பிடித்த அருமையை  ஒரு  தேவ கான  இசையில் ரசித்தேன். அதைக்  கொஞ்சம் சொல்கிறேன்.

கர்நாடக  கச்சேரிகளில் அபூர்வமாக பாடப்படும் பாடல் இது.  அதை  எழுதியவரை  தமிழுலகம் நினைவில் கொள்ளாததால் அநேகர்  மாரிமுத்தா பிள்ளையை அறிய வாய்ப்பில்லை.

மாரிமுத்தாபிள்ளை சிதம்பரம் நடராஜா மேல் பல  கிருதிகளை  இயற்றியுள்ளார். தெலுங்கில் தியாகராஜர்.
கன்னடத்தில் புரந்தர தாசர் போல் தமிழிலும்  சில அற்புத  கவிராயர் இருந்திருக்கிறார்கள்.  மூன்று பேர் நினைவுக்கு வருகிறார்கள். அதில்  ரெண்டு பேர் சம காலத்தவர் கள்.  மாரிமுத்தாபிள்ளையும் அருணாசலக் கவிராயரும்  தான்  அது.

மாரிமுத்தாபிள்ளை கி.பி. 1712 ஆம் ஆண்டு தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தார். சைவ வேளாளர் குலம்.  தந்தையார்  தெய்வப் பெருமாள் பிள்ளை. சிறுவயதில் தமிழ்க் கல்வியும் சமயக் கல்வியும் முறையாகப் பெற்றதுடன் சமய தீட்சையும் பெற்றவர். இசையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் கொண்டு  புலமைகள் அனைத்தும் ஒருங்கே  அவரை சென்றடைந்தது. இயல்பாகவே  பரமேஸ்வரன் போல் பல கீர்த்தனைகள் இயற்றினார்.

மாரிமுத்தாபிள்ளையின் மூத்த மகன் ஒரு தடவை மதிமயக்கத்தால் தன் நினைவிழந்தான். இதைக் கண்டு வருந்திய  மாரிமுத்தாபிள்ளை  "புலியூர் வெண்பா" என்னும் நூலைப் பாடினார். அதைத் தொடர்ந்து பல நூல்களும் கீர்த்தனைகளும் வெளிப்பட்டன. . தமது 75 வது வயதில் கி.பி.1787ஆம் ஆண்டு பிள்ளை காலமானார்.

மாரிமுத்தாபிள்ளை  எழுகூதியவற்றில் சில: புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதி மூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு தவிர  25 கீர்த்தனைகள் .

தில்லை நடராசப் பெருமான் மேல்   பிள்ளை  இயற்றிய  ''நிந்தாஸ்துதி கீர்த்தனைகள்" பிரபலமானவை. அதிலொன்று தான்  காலைத்தூக்கி நின்று ....எனும் முதல் பாராவில் நான் சொன்ன யதுகுல காம்போதி கீர்த்தனை.  அவர் கண்ட காட்சி கண்முன்னால் தெரியும்: 

சிதம்பரத்தில்  ஆனந்தக்  கூத்தன் நடராஜன் ஆடுகிறான். வலதுகாலை தரையில் ஊன்றி இடது பாதம் தூக்கி  ஆடுகிறான்.   ரொம்ப பயிற்சி இருந்தால் தான் நிலையாக இதை ஆட முடியும். அவன் ஆடலரசன் . அவனால் முடியும். அண்ட சராசர அசைவு அவனால் நடைபெறுகிறது.  '' நான் அசைந்தால் அசையும்  உலகமெல்லாமே ...' என்று திருவிளையாடலில் TMS   பாடியதும்   சிவாஜி கணேசன் பெரிய விழிகளை  உருட்டி  அதை  வெள்ளித்திரை முழுதும் பெரிதாக  காட்டியது  நினைவுக்கு வருகிறது. '.  சிவனின்  ஆட்டம் நின்று விட்டால் அண்டமும் பிண்டமும் அகில சராசரமும்  நின்று விடும்.எனவே  நடராஜந்தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறான். 

''ஐயா,  இடது பதம் தூக்கி ஆடும் தெய்வமே உமது அருள் நிரம்பிய  கருணைக்கரத்தால் என்னையும் கொஞ்சம் தூக்கி விடக்கூடாதா?    நீர்  பெற்ற  உமது  இளைய பிள்ளை  வேலாண்டி, வேலைத்தூக்கி  அவுணரைக் கொன்று அன்பரை ஆதரிப்பவன் ஆயிற்றே.  இந்த பொன்னம்பலம்  சலங் சலங் என்று உமது தண்டைக் கால் ஒலியால்  மனதை கொள்ளை கொண்டு எங்கும் ஞானஒளி வீசுகிறதே .  நீர் காலை மட்டுமா  தூக்குகிறீர்.  நீர் தூக்கு தூக்கி.   ஒரு சிவந்த கரத்தில்  மான்,ஒருகரத்தில்  மழு, இது போதாதென்று உம்மோடு சேர்த்து   உண்மை என்ற ஒரு பெண்ணையும் பாதி உடம்பில் தூக்கிக்கொண்டு ஆடுகிறீர்.  தலையிலும்  கங்கை என்று ஒரு பெண்.  ஒளி மிகுந்த சந்திரனைப் பிடித்தும் தலையில் செருகிக்கொண்டு அவனையும் தூக்கி க்கொண்டு நிற்கிறீர்கள்.  என்ன அழகு அந்த பிரச்சந்திரன் சிரத்தில்.  சந்திரசேகரா, உமது தலை எங்கே கால் எங்கே  என்று ஓடி ஓடி தேடி தேடி   காணமுடியாமல்,  பிரம்மாவும் விஷ்ணுவும் களைத்து நிற்கிறார்களே . எங்கிருந்து பிடித்தீர் இந்த நந்தி தேவனை?  உமது தாண்டவத்துக்கு ஏற்ப  தாளம்  அற்புதமாக வாசிக்கிறாரே. கலகம் செய்யும் நாரதரும் அதை மறந்து  மஹதி  யாழ் வாசித்து உமது ஆட்டத்துக்கு நந்தியின் தாளத்துக்கு  இசை கூட்டுகிறாரே. பிரமன்  தோம் தோம் என்று இசைத்து ஆடுகிறான். 
எல்லாம் தூக்கிக்கொண்டு நிற்கும்   உமது காலைத் தூக்கிக் கொண்டு முயலகன் நகரமுடியாமல்  படுத்துக்க கிடக்கிறான்.
 இது தான் அந்த பாட்டு.  M S  S  அற்புதமாக இதை பாடி இருக்கிறார் கேளுங்கள்   https://youtu.be/aS7T7c_PGKQ


ராகம் : யதுகுலகாம்போதி தாளம் : ஆதி
பல்லவி
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - என்னைக்
கைதூக்கியாள் தெய்வமே

பல்லவி
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக்                                                                        
கை தூக்கியாள் தெய்வமே                                                                
அனுபல்லவி
வேலைத்  தூக்கும் பிள்ளை தனைப்  பெற்ற தெய்வமே                                
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு                    (காலை)
சரணம்1
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி                                                        
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி                                                              
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத                          (காலை)
சரணம்2
நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க                      (காலை)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...