Thursday, October 27, 2022

MYLAPORE

 


மயிலையே கயிலை.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இப்போதெல்லாம்  விஷய தானத்துக்கு பஞ்சமே இல்லை. எப்போது  மொபைல்  டெலிபோன்  நம்மை நெருங்கி விட்டதோ அன்று பிடித்தது சனி.   நேரடி உறவுகள், சந்திப்பு, பேச்சு எல்லாம் மறைந்து  அடுத்த அறையில் மனைவியோடு கூட   டெலிபோனில் தான்  வாட்டசாப்ப் செய்தி அனுப்பும் அளவுக்கு  எல்லோரிடமிருந்தும் தனித்து விலகி விட்டோம். மனிதம் மறைந்து மெஷின்களாகி விட்டோம்.  இது ஒரு புறம் இருக்க, சில நல்ல விஷயங்களையும் நாம்  மொபைல் மூலம்  அறிய வாய்ப்பு இருந்தும்  அவற்றால்  ஒரு சிலர் மட்டுமே பயன் பெறுகிறார்கள்.

நவக்கிரஹங்கள்  நமது அன்றாட வாழ்வை பெரிதும் பாதிக்கின்றவை. நல்லது   கெட்டது எல்லாமே  நமது கர்ம பலன். ஜென்ம லக்கினத்தில், ராசியில்  எங்கே  சில  நவக்ரஹங்கள் சேர்கின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது.  கெடுதல்கள் நேராமல் அதற்கென சில பரிஹாரங்கள்  இருப்பதால்  நவக்ரஹ ஆலயங்களுக்கு செல்கிறோம். சோழ நாட்டில் நவக்கிரஹ  ஸ்தலங்கள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள்.  தொண்டைமண்டலத்தில், அதாவது சென்னையை ஒட்டி சில நவகிரஹ ஸ்தலங்கள் உள்ளன.  இதுவும்  அநேகருக்கு தெரியும்.  நிறைய அது பற்றி எழுதி இருக்கிறேன். 

நமது சென்னைப் பட்டணத்திலேயே  மயிலாப்பூரை ஒட்டி  நவக்ரஹ  ஸ்தலங்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?  இதுவும்  வாட்சப்பில் தான் பரவியது.  இது போன்ற  விஷயங்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதால் இந்த பதிவின் மூலம்  விவரங்களைத் தர எண்ணினேன்.

மயிலாப்பூர் என்றாலே  கபாலீஸ்வரரின் கம்பீர  ஆலயம்  குளத்தை ஒட்டி அற்புதமாக  கண்முன்  நிற்கிறது.  மிகப் பழைமையான  பாடல் பெற்ற ஸ்தலம். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே,மேலும் சில  பழமையான  ஆயிரம்  வருஷ கால  சிவ ஸ்தலங்கள் இருக்கிறதே  தெரியுமா?  சென்னையில் உள்ளவர்களுக்கே எத்தனையோ முறை மயிலாப்பூர்  சென்றாலும் இவற்றை தெரிந்து கொள்ளாதது  ரொம்ப வருத்தம் தருகிறது. 

ஒரே நாளில்  இங்குள்ள  ஒன்பது  நவக்ரஹ ஆலயங்களை  சுலபமாக தரிசித்து  அருள் பெறலாம்   இவை அத்தனையும் சப்த ரிஷிகளால் தொழப்பட்ட ஸ்தலங்கள்.

1 . முதலில்  தரிசிக்க வேண்டிய   சூரிய ஸ்தலம்  ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில். மைலாப்பூர் பஜார் சாலையில் உள்ளது.  விசாலாக்ஷி  அம்பாள்    சமேதராக  விருபாக்ஷீஸ்வரர் குடி கொண்டிருக்கும் இந்த  ஆலயம் புராதனமானது.   விசாலாக்ஷி  அம்மன் சன்னிதிக்கு எதிரே உள்ள  பலிபீடம் பிரசித்தி பெற்றது.  பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாகத் திகழ்கிறார்.

2  அடுத்தது  ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில்.  மைலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் மார்கத்தில்  நடேசன் சாலையில் உள்ள சந்திரன் ஸ்தலம்.  மாசி  மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் மூழ்கிய ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.   அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட ஆலயம்.  இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயில். ஒரு காலத்தில்  இங்கே  64 வகையான   தெய்வீக சக்தி வாய்ந்த தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாம்.  நீருக்கு  அதிபதி  சந்திரன்.  

3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில்   எனும்   அங்காரக க்ஷேத்ரம்,  செவ்வாய் ஸ்தலம்  மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது.  மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றார் என்பது ஐதீகம்.   

4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்  மைலாப்பூரில்  பஜார் ரோடு  பகுதியில்  காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது.  இது  தான் புதன் க்ஷேத்திரம்.   ஒரு காலத்தில் இங்கே  எங்கு பார்த்தாலும்  கமகம வென்று  மணம் வீசும்  மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்ததால் இந்த  ஆலய  சிவனுக்கு  மல்லீஸ்வரர் என்ற திருநாமம்.  அம்பாள் பெயர்  ஸ்ரீ  மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட ஸ்தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீ  மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.
 
5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் ஒரு குரு ஸ்தலம்.  மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது.    ரிஷி  வசிஷ்ட ர் வழிபட்ட க்ஷேத்ரம். பிரபஞ்சத்தில்  எல்லாம்  இயங்குவதற்கு  காரணம்  ஈஸ்வரனே  என்பதால்  சிவனே   சர்வ காரணம் என்ற  அர்த்தத்தில்   இங்கே  சிவனுக்கு  ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற  பெயர் நிலவுகிறது.  அம்பாள் ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த  ஆலய தர்சனம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.   குரு  நவகிரஹங்களில்  தன காரகன் மற்றும் புத்திர காரகன்.  ஆகவே  இந்த  ஆலயத்துக்கு  குருவாரம் ,  வியாழன் அன்று  அநேக  பக்தர்கள் தரிசனம் பெற  வருகிறார்கள். திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்க செல்வச் செழிப்பு பெறுவதில் சந்தேகமே  இல்லை. 
சுந்தரமூர்த்தி நாயனார்  மைலாப்பூரில் இந்த  ஆலயங்களை தரிசித்தவர்.  

ஆறாவதாக  நாம் தரிசிக்கப்போவது ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம். பெயரிலிருந்து இது சுக்ர  ஸ்தலம் என்று புரியும்.  கபாலீஸ்வரர் ஆலயம் அருகிலேயே  இந்த  சிவன் கோவிலும் உள்ளது. சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய  சிவ ஸ்தலம்.  ஆங்கீரச முனிவர் வழிபட்ட  க்ஷேத்ரம்.  மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு 3 அடி  நில தானம் கேட்டார் அல்லவா?  அப்போது,   'மஹா பலி, தானம் தராதே,  தானம் கேட்க  வந்திருப்பது மஹா விஷ்ணு'' என்று எச்சரித்து  அசுரர்  குரு சுக்ராச்சாரியார் தடுத்துவிட்டார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழியில்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்தார். தடுத்தார்.  க் தை  அறிந்த  வாமனனாக வந்த  மஹா விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்  குருடாகியது.  சுக்ராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக  இந்த ஸ்தல  வரலாறு.  கண் தொடர்பான நோய்கள் இங்கு சிவனை வணங்கினால் நீங்கும்.  வெள்ளீஸ்வரனை தரிசிக்க  வெள்ளிக்கிழமைகளில்  எண்ணற்ற பக்தர்கள் இங்கே வந்து   களத்திர தோஷம்,  திருமணத் தடைகள்  நீங்கப்  பெறுகிறார்கள்.

முதலில்  சொன்ன  ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ஒரு சனி பகவான் ஸ்தலம் என்பது நம்மில் அநேகருக்கு  தெரியாது.  மயிலாப்பூர் சப்த சிவ  ஸ்தலங்களில் அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயம்  மிகவும்  புராதனமான  அழகிய  ஆலயம். காஸ்யப முனிவர் வழிபட்ட க்ஷேத்ரம்.  திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்றது. மேற்கு பார்த்த  கபாலீஸ்வரர்.  முதன் முதலில்   இந்த  கபாலீஸ்வரர் கோயில்  கடற்கரையில் இருந்து  மூழ்கி விட்டதாகவும், 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக  சரித்ர  பக்கங்கள் கூறுகிறது. 
புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளிள்ள இறைவனை, அம்பாள்  பார்வதி தேவி மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்த ஊர்  மயிலாப்பூர் ஆகியது.   நவக்ரஹங்களில்  சக்தி மிக்க ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சம் தான்  கபாலீஸ்வரர்.   மண்டை  ஓடு, எலும்பு,  கபாலம் எனப்படும்.  எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான்.  எலும்பு துண்டுகள், சாம்பல் (அஸ்தி). இதிலிருந்து பூம்பாவையை  சம்பந்தருக்காக  இறைவன் மீட்ட ஸ்தலம்.  சென்னை மாநகரின் ஒரு முக்கிய  ஸ்தலம் மைலாப்பூர்.இந்த தலத்தை சனி கிழமைகளில் வணங்கி வந்தால்  ஆயுள்  தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும்.

எட்டாவது நவக்கிரஹ  ஆலயம்  ஸ்ரீ   முண்டக கண்ணியம்மன்  ஆலயம். முண்டகம் என்பது  தாமரை  மொட்டு, மலர். இது ஒரு  ராகு ஸ்தலம்.   மைலாப்பூரில்  அனைவரையும் காக்கும்  டாக்டரம்மா,  மருத்துவச்சி  என்று  போற்றப்படுபவள்  இந்த  ஆலய பிரதான அம்பாள்  முண்டக கண்ணியம்மன்.  ராகு அம்சமாக திகழ்பவள் .கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு  புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது.  எந்த  வியாதியும் குணமாக  ராகுவின் அருள் தேவை.  இந்த டாக்டரம்மா தீராத நோய்களை  தீர்ப்பவள் . 

ஒன்பதாவது நவக்ரஹ  கோயில் அருள்மிகு கோலவிழியம்மன்   ஆலயம்.  இது தான்  மைலாப்பூரில் கேது ஸ்தலம்.  துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் சொல்வது வழக்கம்.  எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சம். 
  புத்ர தோஷம், திருமண தோஷம்,  தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும். மைலாப்பூரின்  காவல் தெய்வம்.

ஒரு போனஸாக  இன்னொரு அற்புத கோவில் இருக்கிறது. அது தான்  பத்தாவது க்ஷேத்ரமான   அருள்மிகு அப்பர் ஸ்வாமி கோவில். இது   மைலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில்  இருக்கிறது.  ஞான தெளிவு பெறுவது அனைவருக்குமே அவசியம்.  ஞான  வைராக்யம் பெற  சித்தர்களை வழிபடுகிறோம்.  சிவனடியார்களின்  சிறந்த  ஒருவர்  அப்பர் சுவாமிகள் எனப்படும் திருநாவுக்கரசர்.  1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பின்னர் அது  ஆலயமாகியது. 

ஜீவ சமாதிகள் பிரம்ம ஞானிகளின் சமாதிகள்  பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் விக்ரஹங்கள்  விஸ்வநாதர்  எனப்படுகிறார். அம்பாள் விஸாலாக்ஷி. காசியைப் போலவே  இங்கேயும்  பைரவர் வழிபாடு  ரொம்ப பிரசித்தி.   மைலாப்பூர்  உண்மையில் ஒரு சிவபுரி. 
மயிலையே கயிலை.   இனிமேல் மைலாப்பூர் செல்பவர்கள்  ஒரே நாளில் இவை அத்தனையும் தரிசிக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...