Thursday, October 6, 2022

PUNYA KARMA

 


புண்ய கர்மா  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மனம் வாக்கு காயம்  இந்த மூன்றினாலும் நாம்  செய்யும் அத்தனையும் தான்  ''கர்மா'. காரியம் என்று அர்த்தம். அது தப்பானதும் சரியானதும் நல்லதுமாக எல்லாமுமாக இருக்கிறது . தப்பை பாப கர்மா, என்றும் நல்ல செயல்களை, நல்ல எண்ணங்களை சத் கர்மா, புண்ய கர்மா என்றும் பிரித்துக் கொள்கிறோம்.  அததற்கேற்ற பலனை அனுபவிக்கிறோம். பாப காரியங்களை குறைத்துக்கொண்டு  பரோபகாரம்,  கருணை, தான தர்மம், ஜீவா காருண்யம், அன்பு,   போன்ற செயல்களில் பிற ஜீவன்களுக்கு உதவுவது தான் புண்ய கர்மா.     சுயநலம் கருதாமல் செய்கிற காரியம், எண்ணம் மனதுக்கு திருப்தி அளிக்கும்.  இப்போது நமது வாழ்க்கை, அதில் அனுபவிக்கும் சுகம் துக்கம் எல்லாமே இந்த ஜென்மாவிலும் பூர்வ ஜன்மாக்களிலும் செய்த கர்ம பலன் என்று புரிந்து கொள்ளவேண்டும்.  நல்ல விளைவு ஏற்பட நல்ல செயல்களை எண்ணங்களை கைக் கொள்ளவேண்டும். இது தான் CAUSE & EFFECT  THEORY. வினை விதைத்து தினை அறுவடை செய்ய ஆசைப்பட்டால் எப்படி முடியும்?

ரோஜா  ஊமத்தை ரெண்டுமே  செடிகளில் பூக்கும் புஷ்பங்கள்  என்றாலும் கண் ஒன்றை சிறந்ததாக, மற்றதை மதிப்பற்றதாக  பார்க்கிறது.  மனதில் ஞானம் குடிகொண்டால் புத்தி ரெண்டையும் வேறுபாடு இன்றி பயனுள்ளதாக  பார்க்க வைக்கும்.

பணம் பர்ஸிலிருந்து எடுத்து செலவழிக்கும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக சிக்கனமாக செலவழிக் கிறோம் அது போல் வார்த்தைகளை பொறுப்போடு ஜாக்கிரதையாக அளந்து பேசவேண்டும்.   வள்ளுவர் அதனால் தான்  ''யா காவாராயினும்  நா காக்க'' என்றார். 

போட்டி பொறாமை, ஆசை இது தான் மனிதர்களிடையே சண்டை சச்சரவு துன்பம் ஏமாற்றம், கோபம்,  எல்லாம் உண்டாக்குகிறது.   எவரிடமும் மன நிறைவு காணோம்.  பணக்காரன் சுகமாக இருப்பதாக நாம் நினைப்பது அறியாமையால்.    சகல ஜீவன்களுக்கும் கஷ்டம் சுகம் எல்லாம் வெவ்வேறு அளவில், விதத்தில்,  ரூபத்தில் இருப்பதை உணரவேண்டும்.

ரிஷிகள் மனித மன எல்லையை கடந்து பிரம்மத்தை அனுபவித்தவர்கள் என்பதால் அவர் அளித்த வேத சாஸ்திரங்களை நாம் மதித்து அறிந்து பயன் பெறவேண்டும்.  நம்மால் முடியாததை செய்தவர்கள் ரிஷிகள்.

பகவானைப்  போற்றி நன்றியுணர்வோடு பாட  சங்கீத ஞானம் வேண்டாம், நல்ல குரல்வளம் வேண்டாம், பாட வெட்கமும் வேண்டாம்.  மன நிறைவு ஒன்று தான் முக்கியம். நான் அடிக்கடி  பாடித்  தள்ளுவதற்கு இதே காரணம். தினமும் ஐந்து பத்து நிமிஷமாவது மனம் இறைவனோடு ஒன்றிட இது உதவுகிறது. திருவல்லிக்கேணி பாண்டுரங்க மந்திர ஆலயத்தில் என்னை பாட சொன்னபோது தயக்கமின்றி தெரிந்த ஒரு பாடலை பாடினேன்  

https://youtu.be/TXETnCfR87s

ஆஸ்பத்திரிகள் எப்படி  உடல் நோயை தீர்க்க அவசியமோ அதுபோல்  குரு உபதேசம், பாடசாலை எல்லாம் மனதில் தோன்றும்  வியாதிகளை போக்க ரொம்ப அவசியம்.  நான் நல்ல விஷயங்களைத் தேடி பிடித்து உங்களை சிரமப்படுத்துவதற்கு காரணம், மனதில் நல்ல விஷயங்கள் நிரப்பவேண்டும் என்பதற்காகவே. எனக்கும் இதில் லாபம். நானும்  மகிழ்கிறேனே .


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...