Sunday, October 30, 2022

MAN AND MIND

 மனசும் மனிதனும்  -   நங்கநல்லூர்  J K  SIVAN   


மனித மனம் அதி அற்புதமானது.  எண்ணற்ற சிந்தனைகள் அதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.  ஒருவர் எண்ணம் போல் மற்றவர்க்கு இல்லை. எண்ண ஓட்டத்துக்கு  எல்லையே இல்லை.  அது இருபக்கமும்  கூரான கத்தி.  நல்லதும் எண்ணும் , தீயதும் எண்ணும் . ஆசை, பேராசை, கோபம், அஹங்காரம் சகலமும் உருவாவதற்கு அதுவே  ஆதாரம். அதைக்   என்று பல  மஹான்கள் சொன்னாலும், கீதை திருப்பி திருப்பி சொன்னாலும் நமக்கு  அது ஒன்று மட்டும்  முடிவதே இல்லை.  ஒரு சின்ன கதை.

ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனருகில் வந்தார்.

''என்னடா  ஏதோ ஒரு  கற்பனை உலகத்தில் இருக்கிறாய் ?''
''பையன் தலையாட்டினான்,  இல்லை என்கிறானா,  ஆமாம் என்கிறானா ? அவருக்கு புரியவில்லை.
''உன் மனதில் என்ன எண்ணம்?  எந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்?
''ஐயா,  எங்கள் வீட்டில்   ஒரு அழகிய காளை  இருக்கிறது.  அதன் நினைவே எனக்கு எப்போதும் இருக்கிறது''
''ஓஹோ  அப்படியா  நீ எழுந்திரு அதோ தெரிகிறது பார்  ஒரு சிறு மேடு  அதன் மேல் போய் உட்கார்ந்து கொண்டு   உன் அழகிய காளையைப் பற்றி யோசித்துக் கொண்டிரு''  என்று அவனை வகுப்பை விட்டு அனுப்பினார் ஆசிரியர்.
அந்த  மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் தினமும் அந்த  மணல் மேட்டின் மேல் அமர்ந்து  தந்து வீட்டு காளையைப்  பற்றியே   எண்ணியபடி இருந்தான். நல்ல  ஆழ்ந்த  எண்ணம். 
எட்டாம் நாள்  ஆசிரியருக்கு  அவன் மேல்  பரிதாபம் வந்து அவனைக் கூப்பிட்டார்  
 மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் உள்ளே  நுழையாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். 
''என்னடா சோமு,  இப்போதும்  நீ உன் காளையைப் பற்றிய  தியானத்தில் தான் இருக்கிறாயா?  இல்லையென்றால் உள்ளே வா வந்து மற்ற பிள்ளைகளுடன் நீயும் பாடம் கற்கலாமே''
"ஐயா  இனிமேல் நான் அந்த மணல் மேட்டுக்குப்  போக மாட்டேன், காளையைப்  பற்றியும்  நினைக்கமாட்டேன், ஆனால் வகுப்பறைக்குள் நுழைய முடியாது''
 "ஏன்டா  இப்படிச் சொல்கிறாய் சோமு?''
''ஐயா  நான் என்ன செய்வேன்.  எனது தலையின் ரெண்டு பக்கமும் நீளமாக  கூரான  கொம்புகள் வளர்ந்திருக்கிறதே.  வாசலை  இடிக்குமே, உள்ளே வரமுடியாமல் தடுக்குமே/''  என்றான் பையன்.

விடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே மனதளவில் மாற்றி விட்டது. 
ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை.  

மனதை  தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம். தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அதனால்  அழிவு நிச்சயம்.இதைத் தான் கிருஷ்ணனும் கீதையில் சொன்னான். நீ எதை நினைக்கிறாயோ அதற்காக ஆகிவிடுவாய்.  மனசு தான் மனுசன் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...