Saturday, October 1, 2022

NIKAASHAA

 ஒரு அன்புத் தாய். --   #நங்கநல்லூர்_J_K_SIVAN 


லங்காபுரியில் யுத்தகளத்தில்   மஹா மேரு மலை போல் ராவணன் சாய்ந்து விட்டான். எவராலும் வெல்ல முடியாத மஹா வீரன், அவனைக் கொல்வதற்கென்றே மனிதனாக அவதாரமெடுத்த ஸ்ரீ ராமனின்  பணத்துக்கு  இரையாகி மாண்டுவிட்டான். அவன் உடலை தக்க ராஜ மரியாதையோடு அரண்மனைக்கு கொண்டு சென்றதும்  அரண்மனைப் பெண்களின் சோகம் நிறைந்த அழுகுரல்  வானைப் பிளந்தது. 
 
ஒரே ஒரு மூதாட்டி, உணர்ச்சியற்ற முகத்தோடு, கண்களில் நீர் வறண்டு, மெதுவாக  அரண்மனையை விட்டு தனியாக  வெளியேறினாள். ராஜ குடும்ப ஸ்த்ரீ. கண்களில் வெறுமை, நடந்து கொண்டிருந்தவளை  வானர சேனை வீரர்கள் மடக்கினர்.

'' எங்கே  தப்பித்து போகிறாய்? யார் நீ? அவள் பதிலே பேசவில்லை. 
''வா எங்களோடு எங்கள் தலைவர் ராமனிடம் உன்னை அழைத்துச் செல்கிறோம்'' 

சந்தோஷமாக நடந்தாள்.  யுத்த களத்தில்  ராம லக்ஷ்மணர்கள் விபீஷணனோடு அமர்ந்திருக்கும்போது எதிரே நின்ற அவளைப்பார்த்த  விபீஷணன்  குதித்து எழுந்தான்.
''அம்மா, நீ ஏன் அம்மா இங்கேவந்தாய்?'' என்று அவளை நெருங்கி  அணைத்துக் கொண்டான்.  ஆம்  அவள்  நிகாஷா, கைகேசி என்ற பெயரும் உடைய  சுமாலி என்ற ராக்ஷஸன் மகள். விஸ்ரவஸ் என்ற ரிஷியை மணந்தவன். ராவணன் கும்பகர்ணன், விபீஷணனின் தாய். 
''ராவணா, நீ செய்வது தவறு, இந்த பெண் சீதையை எங்கே இருந்து கொண்டுவந்தாயோ அங்கேயே  கொண்டு விடு. அவள் புருஷனிடம் ஒப்படை ''.
ராவணன் செவிடனாகவே இருந்து இறந்தான்.

''விபீஷணா, நீயாவது நான் சொல்வதைக் கேள்,  ராவணனோடு இனி நீ இங்கே இருக்க வேண்டாம். ராமனைச் சரணடை.''விபீஷணன் தாய் சொல் தட்டவில்லை. 
யுத்தகளத்தில் முதல் முறையாக நிகாஷாவைப்  பார்த்த லக்ஷ்மணன்

''அண்ணா இந்த ராக்ஷசியைப் பார்த்தீர்களா, பிள்ளை களை, பேரன்களை இழந்தும் இன்னும் உயிர் மேல் ஆசையில் தப்பி ஒடப் பார்த்தவள்''

''நிறுத்து லக்ஷ்மணா , அவசரம் வேண்டாம். அந்த மூதாட்டி என்ன சொல்கிறாள் என்று முதலில்  கேட்போம்''

''ராஜமாதா,  எங்கள் வானரர்கள் நீங்கள் யாரென்று தெரியாமல் அவமரியாதை செயதிருந்தால் நான் மன்னிக்க வேண்டுகிறேன்.   அம்மா, நீங்கள் எதற்கு வெளியேறுகிறீர்கள்,  அரண்மனையில் மற்ற எல்லோ ருக்கும், பெண்களுக்கும் ஒரு வித பயமுமின்றி வாழ அறிவுரை கூறுங்கள். இதோ விபீஷணன் உங்கள் மகன் உங்களை எல்லாம்  ஜாக்கிரதையாக பாதுகாக்க பொறுப்பேற்றுக் கொள்வான்''

''ராமா, உனக்கு ஒரு சேதி  சொல்ல வந்தேன். உன் மனைவி சீதாதேவி எல்லாவித சித்திரவதைகளையும் இங்கே அனுபவித்தாலும் ஒரு கணமும் அமைதி இழக்காமல் உன் மேல் பக்தியும் பாசமும் கொண்டு எந்த கஷடத்தையும் ஏற்றுக்கொண்டு உனக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்தவள் என்பதை நினைவு கொள் . நான் நீண்ட காலம் வாழ்ந்து உன் பெருமைகளை கேட்டு உன் ராஜ்ய பரிபாலனம் பற்றி  அறிந்து மகிழ நீண்ட காலம் வாழ விரும்புகிறேன். ராமா உன்னை போற்று கிறேன் என் பிள்ளை ராவணனை  உன்னைப் போல்  வளர்க்கவில்லையே என்று என் தவறுக்கு வருந்துகிறேன்.''

விபீஷணனின் அரசாட்சியில் தாய்  நிகாஷாவும்  மற்றவர்களும் சௌகர்யமாக வாழ்ந்தார்கள். நிஷாகா  ராம த்யானத்தில் நேரம் போக்கினாள். அடிக்கடி  அயோத்யாவிலிருந்து ராமனிடமிருந்து அவளுக்கு  பரிசுகள் பொருள்கள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன.  

காலம் சென்றது அவதாரம் முடிந்து ராமன் சரயுவில் 
இறங்கி மானிட உருவை நீத்து  நாராயணனாக வைகுண்டம் சென்றான் என்ற  சேதி நிகாஷாவுக்கு எட்டியது. 

ராமனை மூச்சாக  கருதி தியானம் செய்து வந்த நிகாஷா  வாழ்நாள் இனி  தேவையில்லை என்று கருதினாள். 

''என்னைஇருளிலிருந்து  மீட்ட நீ இல்லை என்றால், ராமா,  இனி எனக்கு உலகத்தில் எதுவுமே வேண்டாம். நீ மறைந்து போனபின் இனி எனக்கு உலகில் என்ன இருக்கிறது?'

'அன்ன  ஆகாரம் வெறுத்து  தியானத்தில் ஈடுபட்டு சில நாட்களில்  நிகாஷாவும்  ராமனைச் சேர்ந்தாள். நிகாஷாவை  அநேர்கருக்கு தெரியாதே. இனி தெரிந்து கொள்ளட்டும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...