Friday, October 18, 2019

SIVAJI



வீர சிவாஜி J K SIVAN

பவானி அம்பா, பழி தீர்த்து விட்டேன்....

மாலை சூரியன் ஒளி எல்லாவற்றையும் பொன்னிறமாக்கிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மலை வாயில் விழுந்துவிடும். எங்கு பார்த்தாலும் மலைத்தொடர் நிறைந்த பிரதேசம் பிரதாப்காட். சிவாஜிக்கு சற்றும் பதற்றம் இல்லை. தன்னுடைய நம்பிக்கையான பாதுகாப்பாளர்கள் ஜிவ்பா மஹாலா, சாம்பாஜி காவாஜி ஆகிய இருவர் மட்டுமே உடன் இருந்தார்கள்.

அப்ஸல் கான் பல்லக்கில் பிரதாப்காட் வந்து கொண்டிருந்தான். அவனுடன் கிருஷ்ணாஜி பிலாக்கர் இருந்தான். அவனுக்கு தான் உருது மராத்தி இரண்டும் தெரியும். அவன் சிவாஜியுடன் சம்பாஷிக்க நம்பகமானவன் . பல்லக்கின் பின்னால் ஏராளமான தேர்ச்சி பெற்ற பிஜப்பூரை சேர்ந்த முகலாய படை வீரர்கள் வந்திருக் கிறார்கள்.

'ஹுசூர், சிவாஜியை சந்திப்பது சாத்தியமாக வேண்டுமானால் நீங்கள் உங்கள் படைவீரர்களை பின்னாலேயே விட்டு விடுவது சமயோசிதம். நிறைய படைவீரர்கள் வருவதை கண்டால் சிவாஜி உங்களை சம்மதிக்க மாட்டான். ஏதோ சூழ்ச்சி என்று மறைந்து விடுவான்.

'' நீ சொல்வதும் வாஸ்தவம். சிவாஜி எத்தனை வீரர்களுடன் வருகிறான் என்று தெரிந்து சொல்.''

''ரெண்டே பேர் தான் அவனுடன் எதிரே வருகிறார்கள்''

அப்ஸல்கான் தன்னுடைய வீரர்களை திரும்ப அனுப்பினான். ரெண்டே பேர் அவனுடன் வர சம்மதித்தான்.

ரெண்டு பேரில் ஒருவன் அந்த காலத்தில் வாள் வீச்சில் நிபுணன் சையத் பண்டா. கண் இமைக்கும் நேரத்தில் பல தலைகளை சீவுபவன்.

கூர்மையான கண்களையுடைய சிவாஜி சையத் பண்டாவை பார்த்துவிட்டார். அவருக்கு தெரியும் அவன் திறமை வலிமை. உடனே ஒரு ஆளிடம் செய்தி அனுப்பினார்.

''அப்ஸல், நீ பேச்சு வார்த்தைக்கு வருவதாக சொல்லிவிட்டு வாள் வீச்சு வீரன் சையத் பண்டாவை கூட்டி வருவது பொருந்த வில்லை. சந்திப்பு நடக்க வேண்டுமானால் சையத் பண்டா இங்கு இருக்கக்கூடாது.'நீ ஒரு ஆளை குறைத்துக் கொண்டால் நானும் ஒரு ஆளை குறைத்துக்கொள்கிறேன்.'

அப்ஸல் கான் சையத் பண்டாவை அனுப்பிவிட்டான். அப்ஸல் கான் ஒய்யாரமாக தனது மனதில் திட்டம் எல்லாம் சரியாக நடக்கிறது என்ற சந்தோஷத்தில் பந்தலுக்குள் நுழைந்தான். அவனது தேக பலத்தில் , மல்யுத்த திறமையில் அசாத்திய நம்பிக்கை. சிவாஜி ஆயுதமின்றி வெறுங்கையனாக எதிரே நிற்பதை கண்டான். மகிழ்ந்தான்.
''பாவம் சிவாஜி, உன் உயிர் இன்னும் சில நிமிஷம் தான் '' என்று அவன் மனம் நினைத்தது. அவன் ஒரு வாளை உடைக்குள் மறைத்து வைத்திருந்தான்.

''ஆஹா சிவாஜியை உயிரோடு பிடிக்கும் தருணம் பல வருஷங்களுக்கு பிறகு இப்போது தனக்கு பெருமை சேர்க்க கூடியிருக்கிறது என்று சந்தோஷம் அவனுக்கு.

ஏற்கனவே மனதில் இருந்த கோபம், ஏமாற்றம் எல்லாம் அவன் முகமூடியை கழற்றி விட்டது.மரியாதைக் குறைவான வார்த்தைகளால் சிவாஜியை ஏசினான்.

''ஒரு சாதாரண ஏழை விவசாயி நீ. உனக்கு எப்படி இவ்வளவு உயர்ந்த வகை பந்தல் போட முடிந்தது. மிக விலை உயர்ந்த பொருள்களை இந்த பந்தலில் அலங்காரமாக எப்படி வைக்க முடிந்தது. பணம் ஏது உன்னிடம் இதற்கெல்லாம்? இதற்கும் நீ திருட, கொள்ளையடிக்க வேண்டி இருந்ததா?''

''உனக்கேன் இந்த வேண்டாத கவலை. நீ ஒரு கூலிக்கு வேலை செய்பவன். பந்தல் எப்படி எங்கே போடவேண்டும் என்று நான் தானே தீர்மானிக்க வேண்டி இருந்தது. வந்தாயா, உன் வேலையை பார்த்துக்கொண்டு போயேன் . உன் அப்பன் சாதாரண சமையல்காரன் என்று கேள்விப்பட்டேனே. பேசாமல் நீயும் அவனுக்கு உதவியாக போய் இந்த தொப்பையை நிரப்பிக் கொண்டிருக் கலாமே. எதற்கு என்னிடம் வந்தாய் ?''

கோபத்தால் முகம் சிவந்த அப்ஸல் கான் ஒரே தாவு தாவி இடது கையால் சிவாஜி யின் கழுத்தை வளைத்து பிடித்தான். சிவாஜி இதை எதிர்பார்க்கவில்லை. அவனது இரும்புப்பிடியில் சிவாஜியின் தலை அப் சல்கானின் இடது கைக்குள் சிக்கி, திரும்பமுடியாமல் தொண்டை நசுங்கியது. மூசசு விடுவது சிரமமாகி எதிரே இருந்த மலைகள் மெதுவாக சுழல ஆரம்பித்தன. அப்ஸல் கானின் வலது கரம் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வாளைத் தொட்டு வெளியே எடுத்தது.சிவாஜியின் வயிற்றில் செருகவேண்டியது தான் பாக்கி. இனி சிவாஜி ஒரு இறந்த மனிதன்.முகலாய ராஜ்யத்தின் தலைவலி வயிற்றில் வலியோடு சாகட்டும்.பெருமிதத்தில் சிரித்தான் அப்ஸல் கான்.

சிவாஜி அப்ஸல் கானிடமிருந்து ஆபத்தை எதிர்பார்த்து தான் வந்தவர். அவரது உடலில் இருந்த இரும்பு கவசம் அவரை ஒருவாறு மூச்சு விட உதவியது. தனக்கு நேர்ந்த எதிர்பாராத சிக்கலை உணர்ந்துகொண்டார். கண்கள் இருள் வதை தடுக்க முயற்சித்தார். மூச்சை இறுக பிடித்துக்கொண்டார். ஒருகணம் தனது கடமையை நினைத்துப் பார்த்தார். துளஜா பவானி கண் முன் தோன்றினாள். ஒரு புது பலம் உடலில் தோன்றியது. தைரியமும் நம்பிக்கையும் மனதில் கூடியது. தனது இடது கரத்தில் விரல் களில் இருந்த கூரிய இரும்பு புலி நகங்கள் நினைவுக்கு வந்து என்னை உபயோகிக்காமல் இருக்கிறாயே என்று ஞாபகப்படுத்தியது. நல்ல வேளை அவரது இரு கைகளும் கட்டுப் பட வில்லை. அவரது கட்டுப்பாட்டில் தானே இருந்தது. எம்பி இடது கையால் மலைபோன்ற அப்ஸல் கானின் பானை வயிற்றை குழந்தை தாயைக் கட்டிக் கொள்வதைப் போல் கட்டிக்கொண்டு அவரது இடது கை விரல்கள் முழுதுமாக அவன் வயிற்றை தொட்டது.

இதற்குள் அப்ஸல் கானின் வலது கரத்தில் இருந்த வாள் சிவாஜியின் தலையில் இறங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் முழு பலத்துடன் சிவாஜியின் இடது கை விரல்கள் அப்ஸல் கானின் வயிறுப்பகுதியில் ஆழமாக சதையைக் கிழித்து உள்ளே இறங்கி அவன் வயிற்றை நார் நாராக கிழித்தது. அதில் தடவியிருந்த விஷம் அவன் ரத்தத்தோடு குடலில் கலந்தது.

திடீரென்று தனது வயிற்றில் இருந்து வந்த மரண வலி அப்ஸல் கானை நிலை குலைய வைத்தது. அவன் இடது கரம் பிடியை தளர்த்தியது. அதற்குள் வலது கரத்தில் இருந்த வாள் சிவாஜியின் தலையில் இறங்கியது. நல்லவேளை சிவாஜி முன்னெச்சரிக்கையாக கனமான இரும்பு கவச தொப்பியை தலைப்பாகைக்குள் அணிந்திருந்ததால் தலைப்பாகை கிழிந்ததே தவிர தலையில் உள்காயம் வலியை மட்டுமே தந்தது.

வயிறு கிழிந்த அப்ஸல் கானின் வலது கரம் சக்தியற்று வாளை கீழே வீசியது. கால்கள் தள்ளாடின. வயிறு இரண்டாக பிளந்துவிட்டநிலையில் ரத்த வெள்ளம் அவனை அரைமயக்க நிலைக்கு தள்ளி கீழே சாய்ந்தான். ஹா என்று வலியில் பிளிறினான்.

விடுவிக்கப்பட்ட சிவாஜி மின்னல் வேகத்தில் அருகே இருந்த ஜிவ்பா மஹாலா வைத்திருந்த வாளை பிடுங்கி அப்ஸல் கானின் இடது தோளை வெட்டினார். ஓவென்று கதறி அந்த மாமிச மலை கீழே விழுந்தது. அவன் அபாயக் குரலை கேட்டு தூரே இருந்த சையத் பண்டா வாளை உருவிக் கொண்டு ஓடிவந்தான். மற்ற வீரர்களும் ஓடி வந்தார்கள்.
அப்ஸல் கானை வாரி பல்லக்கில் போட்டுக்கொண்டு ஓடினார்கள். சிவாஜி அதற்குள் ஜிவ்பா ஒருபக்கம் தாக்க சையத் பண்டாவை எதிர்த்தார். அதற்குள் சாம்பாஜி காவாஜி வாளுடன் உதவிக்கு வந்துவிட்டான். சையத் பண்டா வால் மூன்று சிறந்த வாள் வீரர்களை சமாளிக்க முடியவில்லை. சாம்பாஜி பல்லக்கை தூக்கிக் கொண்டு ஓடுபவர்கள் கால்களை வெட்டினான். பல்லக்கு கீழே சாய்ந்தது. சாம்பாஜி தாவி ஓடி அப்ஸல் கானின் தலையைச் சீவினான். கழுத்திலிருந்து துண்டு பட்ட அவன் தலையை கொண்டு வந்து சிவாஜியின் காலடியில் மண்ணில் போட்டான்.அதற்குள் சையத் பண்டா கொல்லப் பட்டிருந்தான் .

சிவாஜி சங்கை ஊத மராத்திய வீரர்கள் தயார் நிலையில் இருந்தவர்கள் பீஜப்பூர் படையை சுற்றி நிலை குலைந்திருந்த அவர்களை ஒருவர் விடாமல் கொன்றார் கள். சில வினாடிகளில் அங்கு அமைதி முன்பு போல் சூழ்ந்தது.

சூரியன் அஸ்தமித்தான். அவனுக்கு முன்பே அப்ஸல் கான் அஸ்தமித்து விட்டானே.சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டானே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...