Thursday, October 17, 2019

SHEERDI BABA



மனிதருக்குள் ஒரு தெய்வம்  J K SIVAN
ஷீர்டி பாபா


வாத்யார்  ஷ்யாமும்  வைத்யர்  பாபாவும்

ஷீர்டி  பாபா ஒரு உன்னத, அபூர்வ  ப்ரம்ம ஞானி. அவர் செய்யும் காரியங்களுக்கோ, சொல்லும் வாசகங்களுக்கோ எளிதில் பாமரர்களாகிய  பக்தர்களுக்கும்  நமக்கும் அர்த்தம் புரியாது. ஏதோ பைத்தியம் என்று வேண்டுமானால் சொல்லத்  தோன்றும். விமர்சிக்கலாம்.

திடீரென்று ஒருவரை ''எனக்கு  பதிமூன்று ரூபாய்  எட்டணா  கொடு'' என்று பிடுங்குவார். அடுத்த கணமே  யாரோ ஒருவரை அவர் எதிர் பார்க்காமலேயே  கூப்பிட்டு அதை கொடுத்து விடுவார்... ஏன்  எதற்கு? பின்னராவது  சம்பந்தப் பட்டவர் களுக்கு காரணம்  புரியுமோ புரியாதோ?

ஒருநாள்  ''கேல்கர், இங்கே வா.  இன்று  குரு பூர்ணிமா இல்லையா. எனக்கு குரு பூஜை பண்ணவேண்டாமா?'' என்றார். " குரு பூஜை என்றால் என்ன. எப்படி செய்வது?  என்று தெரியாதே.

'' பாபா  குருபூஜா என்றால் என்ன ?''  பட்டென்று கேட்டுவிட்டார் கேல்கர்.

'' குரு யார்  என்று நீ நினைக்கிறாய்?  மடத்தில் மற்றவர்கள் காட்டும்  யாரோ ஒருவர்  இல்லை. தாடி மீசை, ஜடாமுடி முனிவர்களும் காவி வேட்டி  சன்யாசிகளும் குரு இல்லை . பகவான் தான் குரு. புரிகிறதா?  அது தான்  ப்ரம்மா.  அவர் தான் விஷ்ணு. அதுவே  மகேஸ்வரன்.  பரம்பொருள், பரமாத்மா என்கிறார்களே  அது.  அதற்கு தான்  நமஸ்காரம் எல்லாம்.  உண்மையான குரு என்பவன் நான்  சொன்ன மூன்று தெய்வங்களின், திரிமூர்த்திகளின் உருவும் ஒன்றானவன்.  சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றையும்  கண்காணிப்பவன். இதிலிருந்து புரியவில்லையா?   பகவான் தான் குரு''  என்றார்  பாபா.

''பாபாஜி,  அப்படியென்றால்   நான்  பிரம்மா  விஷ்ணு  ருத்ரனை வழிபட வேண்டுமா, பூஜிக்கவேண்டுமா? ''கேல்கர்  கேட்டார்.
பாபாவுக்கு  கோபம் வந்துவிட்டது. குரல் உயர்ந்தது
''ஹே  சைத்தான்,  நான் இங்கிருக்கிறேனே. என்னை பூஜை  செய் , வணங்கு'' என்று கத்தினார் பாபா.  கேல்கர் மற்றும் அருகிலிருந்தோர்கள்  பாபாவின்  பேச்சிலிருந்து அவரது சக்தி என்ன என்று புரிந்து கொண்டார் கள்.

நாளாக ஆக  ஷீர்டியின் மஹத்வம் எங்கும்  பரவ ஆரம்பித்தது.  பக்தர்கள் கூட்டம் பெருகியது.  ஸாதே பாபுவுடன்  இருப்பவர்.  அவரது அணுக்க தொண்டர்.   ஸாதே யை பக்தர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர் மீது பக்தர்களுக்கு கோபம் வெறுப்பு உண்டாவதற்கு காரணம் பாபாவிற்கு  பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை ஒரு உண்டியலில் வசூலித்து அதை கோயில் கட்ட உபயோகிக்க எண்ணினார்.  இந்த காலகட்டத்தில் ஒரு  அதிர்ச்சி.

யாரோ கொடுத்த வெள்ளி த்தேர், வெள்ளி குதிரைகள் ஸாதேயின்  கண்காணிப்பில் இருந்தபோது திருடு போய்விட்டது.   இந்த திருட்டில் ஸாதேவுக்கும்  ஏதோ ஒரு பங்கு இருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. தனியாக அவர்  பிரயாணம் செய்யும்போது அவரை கோடாலியால் வெட்ட  ஒரு சிலர்  திட்டம் போட்டார்கள். இந்த விஷயம் காற்றில் கசிந்து ஸாதேயின் மாமாவுக்கு தெரிந்து விட்டது.

''ஸாதே,   இனி நீ இங்கு இருப்பது ஆபத்து. உன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஷீர்டியிலிருந்து போய்விடு என்று அறிவுரை சொன்னார்.  நீ  எங்கிருந்தாலும் ஷீர்டி பாபாவை மனதார வேண்டிக்கொள்.  உடனே இங்கிருந்து வெளியேறு''   என்றார் மாமா.    பாபாவைப் பிரிய மனமில்லாமல் ஸாதே  ஷீர்டியை விட்டு வெளியேறினார்.

பாபாவை பொறுத்தவரை  அடிக்கடி  ஸாதேயை  அழைப்பார். அருகில் வரச்சொல்லி ஏதாவது கேட்பார், வேலை  கொடுப்பார் ,திட்டுவார்.

''எங்கே  ஸாதேயைக் காணோம்''  என்று  கேட்டார்,  தேடினார்.  ஸாதேயைக்  காணாமல் பாபாவின் சஞ்சலம்  புலப்பட்டது.  பக்தர்க ளுக்கு  ஸாதேயின்  பிரிவு பாபாவை எப்படி நெகிழ வைத்தது என்று புரிந்தது. ஸாதே  திரும்பி வந்தார்.

இந்த கால கட்டத்தில் தான்  ஷியாமின் பெற்றோர் அந்த   ரெண்டு வயது குழந்தையோடு  ஷீர்டிக்கு  பாபாவின்  தரிசனத்துக்கு வந்தார்கள்.  ஷ்யாமின் தந்தை வேலையிலிருந்து ஒய்வு பெற்றுவிட்டதால்  இனி  சொச்ச நாட்களை ஷீர்டியிலேயே கழிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஷ்யாமை பெற்றோர்கள் மோகன் என்று கூப்பிட்டாலும் பாபா  அவனை ஷ்யாம் என்று தான் கூப்பிடுவார்.  அவனை  ஷீர்டியில் பள்ளி யில் சேர்த்தார்கள்.

ஷ்யாம் வளர்ந்து படித்து  முடித்து  ஆசிரியர் உத்யோகத்துக்கு பயிற்சி பெற்று ஷீர்டியில் பள்ளி ஆசிரியர் ஆனான். பாபா தங்கு மிடத் திற்கு அடுத்த அறை  தான் பள்ளிக்கூடம்.  நடுவே தடுப்பு சுவரில்  காற்று  வீச ஒரு இடைவெளி.   கதவில்லாத  சாளரம்.  . பகலில்  ஷ்யாம் பாடம் நடத்துவான். இரவில் பள்ளி அறையிலேயே தங்கும் ஷ்யாம் மேலே சாளரம் வழியாக  பாபாவை  கவனிப்பான் அடிக்கடி அவரைப்  பார்ப்பதுண்டு.
பாபா  தனக்குத் தானே  பேசுவார்.  சில சமயம் கோபம்,  ஹாஹா  என்று கோட்டை சிரிப்பு,  அல்லது ஏதாவது வினோதமாக  அங்கசேஷ்டைகள் பண்ணிக்கொண்டிருப்பார்.  சுவற்றின் கூரையிலிருந்து  தொங்கும் சங்கிலியில் ஒண்ணரை அடி நீள  பலகையில் ஏறி படுப்பார்.  சின்ன பலகையில் குறுக்கிக்கொண்டு படுக்கிறாரே  கீழே விழுந்தால்  அடிபடுமே  என்று  ஷ்யாமுக்கு கவலை.

பாபாவிற்கு காலை பிடித்து விட்டு கொண்டி ருக்கும்போது ஒருநாள் ஷ்யாம் தைர்யமா கக்  கேட்டு விட்டான்\
.
''குருதேவா,  ஏன்  நீங்கள் தூங்குவதே இல்லை.?தனக்கு தானே, பேச்சு, கோபம், சிரிப்பு,  என்ன அர்த்தம் இதற்கெல்லாம்?

"முட்டாளே,  நீ மட்டும்  தான் எனது லட்சியம் இந்த உலகில்  என்ற கற்பனையா உனக்கு? எத்தனையோ பேர் என்னை நினைத்து  வேண்டுகிறார்கள், கூப்பிடுகிறார்கள். என்னென்னவோ கேட்கிறார்கள், நான் அவர்களோடல்லவோ  பேசுகிறேன், கோபிக்கிறேன், சிரிக்கிறேன். என் விரலை அசைத்து அவர்கள் மனதை மாற்றுகிறேன்.  அவர்கள் முட்டாள்தனம், அறியாமை எனக்கு சிலநேரம் சிரிப்பை உண்டாக் கிறது.  என்  பக்தர்கள்  மீது தான்  என் கவனம்  எப்போதும் , புரிகிறதா குழந்தாய்?  என்கிறார்  பாபா.

''பாபா  எனது ஒரு சிறு வேண்டுகோள்.  எனக்கு  பள்ளிக்கூடத்தில்  பாடம் நடத்த அதிக நேரம் பிடிக்கவில்லை. மற்ற நேரத்தில் உங்களோடு இருந்து உங்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஒரு ஆசை." பாபா  தலையசைத்து  ஆமோதித்தார்.

பாபாவுக்கு தினமும்  லட்சுமி பாய்  என்ற ஒரு பெண்  சமைத்து உணவு  தருவாள். ஷியாம் அவளுக்கு உதவி செயது கேழ்வரகு ராகி ரொட்டி தயார் பண்ணுவான்.   பாபாவுக்கு கத்திரிக்காய் ரொம்ப பிடிக்கும். ஷ்யாம் லக்ஷ்மி பாயிட மிருந்து கத்திரிக்காயில் என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம் என்று கற்றுக் கொண்டான்   ஷ்யாம் இவ்வாறு பாபாவுக்கு சேவை செய்து அதில் பரம திருப்தி  அடைந்தான்.அந்த ஆனந்தம் அவனுக்கு தான் தெரியும்.

திடீர் திடீர் என்று பாபாவுக்கு கோபம் வரும். எப்போது யாரிடம் என்று சொல்லவே  முடியாது. வெளிப் படையாக தான் இது.  சில சமயம் கையிலிருக்கும்  கம்பை  ஓங்கி வீசி யார் மீதாவது எறிவார்.
"குருதேவா, இப்படி கொம்பால் சிலரை கோபத்தால் அடிக்கிறீர்களே.  யாருக்காவது படாத இடத்தில் பட்டு இறந்து போனால் உங்களுக்கு அபகீர்த்தி அபவாதம் இல்லையா?''
''சைத்தான், உனக்கு தெரியாது பேசாமல் இரு.  அவன் உயிர் என் கையில் இருக்கிறது. நான் அனுமதித்தால் தான் அவனுக்கு மரணம்.  நீ  உன் வேலையைப்பார். மற்றவர்களைப்பற்றி  உனக்கென்ன கவலை.?? அவனை திருத்தி நல்வழிக்கு கொண்டுவர அது தான் வழி. அப்போது தான் அவனுக்கு  நான் செய்த உதவி புரியும்.  இல்லாவிட்டால் குதிரை வழிக்கு வராது. ''
பாபா அநேகரை இப்படித்தான்  பயமுறுத்தி, கடின வார்த்தை பேசி திருத்தி இருக்கிறார். இந்த வகையில் தான் என் கோபமே தவிர  எவர் மீதும்   கோபமோ,அவர்களை  புண் படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை.''
இந்த ரஹஸ்யம் பாபாவிடமிருந்து ஷ்யாமுக்கு மட்டுமே சொல்லப்பட்டது. வேறு யாருக்கும் கிடைக்க வில்லை.  பாபா அன்பே உருவானவர் என்பது பலருக்கு தெரியாது.  எத்தனையோ வருஷங்கள் பாபா ஷியாம் தனக்கு சேவை செய்ய  அனுமதித்தார் .  ஒருநாள்......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...