Friday, October 18, 2019

AINDHAM VEDHAM



 ஐந்தாம் வேதம்.  J K  SIVAN 

                                               பீஷ்ம  ஞானோபதேசம் 


வேத வியாசர் நான்கு வேதங்களை தொகுத்து கொடுத்தவர்.  அவருடைய  மஹா பாரத இதிஹாசம் ஐந்தாவது வேதமாக  ரிஷிகளால் அங்கீகரிக்கப்பட்டது. அதை 12000 பக்கங்கள் கண்ட 18 பருவமாக பிரதாப் சந்திரராய் மூல மொழி  சமஸ்க்ரிதத்திலிருந்து பரிசுத்தமாக வங்காளமொழியில் மொழிபெயர்த்து அதை கங்குலி என்பவர் ஆங்கிலத்தில் தொய்வு இல்லாமல் எழுதி நூறு வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த புத்தகத்தை படிக்க எனக்கு பாக்யம் கிடைத்து, அதை சிறிதாக்கி குழந்தைகளுக்கும் புரியும்படியாக கதைகளாக்கினால் என்ன என்று ஒரு எண்ணம். அதை செயல் படுத்த  ரெண்டு வருஷம் ஒன்பது மாதம், எட்டு நாள் 14 மணி நேரம்... ஒவ்வொருநாளும்  குறைந்தது  16-18 மணி நேரம் உழைப்பு.  கதைகள்  ஆயிரம் பக்கத்தில் ரெண்டு பாகங்களாக, ஒவ்வொன்றிலும்  500 பக்கங்கள்..உயரந்த ரக வழவழ காகிதத்தில் ஐந்து வர்ணங்களில் படங்களோடு அற்புதமாக எங்கள் அச்சகம் பிரசுரித்து தந்தது.  இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் இதில் தான் முழுமையாக  பகவத் கீதை 18 பருவங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுமையாக, யக்ஷ ப்ரச்னம் கேள்விபதில்கள் அத்தனையும்  சிந்தித்து எளிமையாக எனக்கு தெரிந்த எழுத்தில் விளக்கி இருக்கிறேன் இந்த புத்தகம் விலை இல்லாதது. விற்பனைக்கும் எங்கும் கிடைக்காது.  நன்கொடை கொடுப்பவர்களுக்கு அன்பளிப்பாக,  போட்டிகளில் குழந்தைகளுக்கு பரிசாக, நூலகங்கள், பள்ளி லைப்ரரிகளுக்கு இலவசமாக  கொடுக்கப்படுகிறது. வேண்டுவோர் என்னை அணுகவும்.  ஜே.கே. சிவன்  9840279080. வாட்ஸாப்ப் இதே நம்பரில் பேசலாம். விவரங்கள் தருகிறேன்

.+++

பீஷ்மர்  அம்பு படுக்கையில்  உத்தராயண புண்யகாலத்தில் பூமியை விட்டு வெளியுறுமுன் யுதிஷ்டிரனுக்கு  கிருஷ்ணர் அறிவுரைப்படி  உபதேசம் செய்வதை தான் படித்துக்கொண்டிருக்கிறோம்.

''யுதிஷ்டிரா,  எவன் ஆத்ம பரிசுத்தம் அடைந்தவனோ அவன் தேஹ சிந்தனை அற்றவன். ஆசா பாச உணர்வுகள் தான் அழிவை தருகின்றன. மாயையில் மூழ்கியவர்கள்  ஞானத்தை  இழந்து புலன்கள் வசப்பட்டு அல்லல் படுகிறார்கள்.  வேதமறிந்தவன் உள்ளும் வெளியும் ஒளி பெறுபவன்.    குருடன் தனக்கு  வழி காட்டி இல்லாமல் துன்புறுவது போல்  ஞானம் அற்றவன் உலக வாதனைகளில் சிக்கி திண்டாடுகிறான்.   மனக் கட்டுப்பாடும்  புலன்களை அடக்கி ஆள்வதும்  ஒருவனை  ப்ரம்ம ஞானம் அடைய உதவும். உள்ளேயும் வெளியேயும் காணப்படும் உலகம் மனதில் குடிகொண்ட உணர்வின் பிரதிபலிப்பு.  மனமே  ஆத்மாவிலிருந்து தோன்றிய ஒரு விளைவு தானே. எனவே ஆன்மாவில் எல்லாமே அடங்கி உள்ளது.

ஏன் இப்படியும் சொல் லலாமே. ஆன்மா சர்வ வியாபி. எங்கும் எதிலும்  நிறைந்தது.  மனத்தை வசப் படுத்தியவன் ஆன்மாவில்  அனைத்தும் அறிந்தவன்.  இந்த உடம்பு தான் கனவுகளின் வாசல். ஏனெனில் உடம்பு,   கடந்த பல  கர்ம பலன்களை  பொறுத்து உண்டானது.    உடல் மனதில் கரைந்தது என்றால் கனவற்ற உறக்கத்தில் மனது,  இந்த  உடல் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் அமைதி உறுவது.  ஐம்புலன்களின் சக்திகள் மனதால்  தன்னை பாதிக்காமல் ஒடுக்கப்பட்ட நிலை.  இதெல்லாம் யோகிக்கு முடியும். தவத்தால் இது சித்திக்கிறது.  ஆத்மா ப்ரம்மமாகிறது.  சாதாரண மக்கள் இந்த நிலை அடைய ரொம்ப பிரயாசை பயிற்சி வேண்டும்.

ப்ரக்ரிதியும் புருஷனும் இரண்டுமே  ஆரம்பமோ முடிவோ இல்லாதது. அழிவற்றது. ப்ரக்ரிதி க்ஷேத்ரம். புருஷன் க்ஷேத்ரஞன். புருஷன் பரமாத்மா இரண்டுமே எளிதில் விளக்க  முடியாதவை.  யோகத்தின் பயன் தான்  ஞானம்.  வாழ்க்கையை  அவரவர்  தனக்கு வேண்டும் விதத்தில்  விருப்பத்தின்  ஈர்ப்பில்  அமைத்துக் கொண்டு அதன் பலனை அனுபவிக்கிறார்கள். ஒவ்வொருவனுடைய  கஷ்டமும் சுகமும், இன்பமும், துன்பமும் தானாகவே இவ்வாறு  தேடிக்கொண்டவை தான்.

கபில ரிஷியின் மகன் பஞ்சசிகன், உலகமெல்லாம் சுற்றிவிட்டு மிதிலைக்கு வந்தான். விரதங்கள் அனுஷ்டித்து தவம் செய்து இன்ப துன்பம், சுக துக்கம் எல்லாம் கடந்தவன்.பஞ்சகோசத்தை அறிந்தவன். யாகங்கள் யக்ஞங்கள் புரிந்தவன்.சிறந்த ரிஷி.

ஒரு ரிஷிகளின் கூட்டத்தில்  ரிஷி அசூரி பிரம ஞானத்தை விளக்க,  பஞ்சசிகி மகிழ்ந்து அவர் சீடரானான். அசரியின் ரிஷி பத்னி அவனை தனது மகனாக வளர்க்கிறாள். பஞ்சசிகன் ஜனகன் வமிசத்தில் வந்த  ஜனதேவன் என்ற அரசனுக்கு  நீதி சாஸ்திரங்களை அழகாக விலாவாரியாக உபதேசிக்கிறான். பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், புத்தி  மனம் இவை சேர்ந்து மொத்தத்தில்  பன்னிரெண்டும்  ஆத்மாவுடன்  சேராதவை என்று விளக்குகிறான் பஞ்சசிகி.


இன்றைக்கு இது போதும். நீதி நாளைக்கு.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...