Thursday, October 3, 2019

NANGANALLUR




                         அரை நூற்றாண்டுக்கு முன் நங்கநல்லூர்
                                                               J K SIVAN

என் மனவியின் மூத்த சகோதரி கணவர் மற்ற ஆபிஸ் நண்பர்களோடு சேர்ந்து நங்கநல்லூரில் ஒரு மனை வாங்கி, வீடுகட்ட ஆபிஸ் லோன் போட்டு வேலை ஆரம்பித் தார். பரங்கிமலையில் அலுவலகம் என்பதால் நடந்தே ஆபிஸ் போக குறுக்கு வழி வயல்கள் வழியாக தான்.

நங்கநல்லூரில் ஒரு கூட்டுறவு சங்கம் மனை வாங்கி பிளாட்கள் போட்டு விற்றார்கள். நம்பர் போட்ட தெருக்கள் வந்தன. 19வது தெருவில் என் உறவினர் மனைவாங்கி வீடு காட்டினார். கூட்டுறவு சங்கத்திற்கும் இயக்குனராக என் சகோதரி கணவர் கிருஷ்ணமூர்த்தி இருந்ததால் என்னை மனை வாங்கேன் என்கிறார். அதில் விருப்பமில்லை எனக்கு அப்போது.

அந்த நேரத்தில் தான் நங்கநல்லூர் என்று ஒரு ஊர் இருப்பது எனக்கு தெரிந்தது. 1968க்கு முன்னால் அது ஆப்பிரிக்காவின் காங்கோ பக்கம் எங்கோ ஒரு பகுதி என்று தான் நம்பிக்கை .

உறவினர் நங்கநல்லூர் வீட்டு கிரஹப்பிர வேசத்துக்கு அழைத்தார். நீண்ட பிரயாணம் செய்து அதில் கலந்துகொள்ள சென்றோம்
.போனோம். போனோம் போய்க்கொண்டே இருந்தோம். ரெண்டு வழி. ஒன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கி நடப்பது, இன்னொரு வழி அதேமாதிரி மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து. ரெண்டுக்கும் ஒரே தூரம் தான் இடையே என்றாலும் பரங்கிமலையில் ஒரு வசதி. குதிரை வண்டி. நாலு ஐந்து பேர் சேர்ந்ததும் சவாரி. 2 ரூபாய். வாணுவம்பேட்டை எனும் இடம் இரு பக்கமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு போல் பசுமையாக வயல் வேலிகள். தூரத்தில் மீனம்பாக்கம் ஆகாயவிமானம் தரை இறங்குவது ஏறுவது எல்லாம் கண் கொள்ளாக் காட்சி. மின்சார ரயில் வெள்ளையாக மரவட்டை மாதிரி தூரத்தில் ஊர்ந்து செல்வது தெரியும்.

நேரு பள்ளிக்கூடம் இருந்தது. இன்னும் இருக்கிறது. ரெண்டு மாவு மெஷின் வரப்பிரசாதம். ஹோட்டல் எதுவும் கிடையாது. டாக்டர் சீதாராமன் அவர் மனைவி சுபத்திரா சீதாராமன் ரெண்டு ரூபாய்க்கு வைத்தியம் பார்த்தார்கள். சைக்கிளில் வீட்டுக்கு சுபத்திரா மாமி வருவாள். பல் டாக்டர் ஜனார்த்தனம் இன்றும் வைத்தியம் பார்க்கிறார்.

நீயும் இங்கே ஒரு மனை வாங்குப்பா, நல்ல இடம். வீடு கட்டிக்கொள். வசதியான இடம். கன்னிகா காலனியில் 22-23 பிளாட்கள் ஒரு சோடாக்கடைக்காரர் பொறுப்பேற்று லேஅவுட் போட்டிருக்கிறார். இன்னும் சில பிளாட்கள் தான் மிச்சம் இருக்கிறது. சீக்கிரம் வாங்கு. நீயும் அங்கே ஒரு வீடு கட்டிக் கொண்டு வந்துவிடலாம். திருவல்
லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் ஒண்டுக்குடித்தனம் போதும் எனறு என் மனைவி வர்க்கம் துளைத்தது. கன்னிகா காலனியில் சிறிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டேன்.

எங்கள் கன்னிகா காலனி மீனம்பாக்கம் ஆகாய விமானத்தில் சுங்க இலாக்கா அதிகாரிகள் வேலைக்கு போக சுலபமாக இருக்குமே என்று நாலைந்து பேர் அங்கே வாங்கியிருந்தார்கள் என் மனைவயின் இன்னொரு சகோதரி கணவர் ராமகிருஷ் ணன், AG ஆபீஸ், என் மாமனார், மற்றும் கலெக்டர் சபாபதி, உதவி கலெக்டர் வாசுதேவன்,,சிவராமகிருஷ்ணன், லக்ஷ்மிநாராயணன், ராஜகோபாலன், சுப்ரமணியன் , துறைமுக வேலையில் இருந்த ஜீவரத்தினம், பொன்னுரங்கம் , காட்ரேஜ் கம்பெனியில் வேலை பார்த்த பத்மநாபன் இன்னும் சிலர் பெயர் மறந்து விட்டது ஏற்கனவே வாங்கியிருந்தார்கள். ரயில்வே இலாக்கா ரெண்டுபேர் பாலமுகுந்தன், தெய்வசிகாமணி, .ஹரிபூஷணம் போன்றோர், தவிர அருகே வோல்டாஸ் கம்பனி சேர்ந்த பலர் சில பிளாட்கள் வாங்கி வோல்டாஸ் காலனி ஏற்கனவே தயாராகிவிட்டது.

ஆகவே நானும் ஒரு பிளாட் வாங்கினேன். ராமநாதய்யர் என்பவர் வீடு கட்டிக்கொடுப்பார், குறித்த நேரத்தில் குறைந்த விலையில் கட்டுவார் என்று என் உறவினர் தனது அனுபவத்தை சொல்லி நானும் அவரை வீடுகட்ட வைத்தேன். அப்போதெல்லாம் கடைக்கால் ரேண்டம் ரப்பிள் (RANDOM RUBBLES ) எனும் பாறை கட்டிகள்வைத்து சிமெண்ட் பூசி அஸ்திவாரம் போடுவார்கள். கான்க்ரீட் போடுவதில்லை. பால் கிடைத்தது, மொத்தமே பத்து பதி னோரு வீடுகள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம். சேர்ந்து சைக்கிளில் பரங்கிமலை வரை செல்வோம். அப்புறம் மின்சார ரயில். சபாபதி ஒருவர் மட்டும் அம்பாஸடர் கார் வைத்திருந்தார். வெளியே போகும் போதெல்லாம் யார் வருகிறீர்கள் வெளியே போக என்று கேட்பார்கள். ஊரைத்தாண்டி பட்டணம் போக இந்த வசதி கிடைத்தது பாக்யம். பாலக்காடு பிராமணர் வாசுதேவன் வீட்டுக்கும் நிறைய கார்கள் வரும் போகும். அதில் தொத்திக் கொண்டு வெளியே போவோம். வரும்போது இருக்கவே இருக்கிறது பரங்கிமலையிலிருந்து நடை.

ஒரே ஒரு பஸ் நங்கநல்லூர் வரும். 18C. இன்னும் அந்த நம்பர் பஸ் மற்ற பஸ் களோடு சேர்ந்து ஓடுகிறது. பஸ் நிற்கும் இடம் சிதம்பரம் ஸ்டோர்ஸ். இன்னும் இருக்கிறது. ரோஜா மெடிக்கல். அதுவும் இன்னும் இருக்கிறது. ஒரே ஒரு சினிமா கொட்டகை ரங்கா. அது பெயர் மாறி விட்டது. பெரிதாகி விட்டது. துளசி மெடிக்கல் மருந்துக்கடை இன்னும் இருக்கிறது. வயல் வழியே குறுக்காக போக வர அரைமணி ஆகும்

இப்போது பழவன்தாங்கல் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் ஒரு டபுள் கேட் . லேசில் திறக்க மாட்டார்கள். ரெண்டு பக்கமும் வண்டிகள் ஊருக்குள் வர, வெளியே போக காத்திருக்கும். முக்கால் மணி நேரம் கூட சில நேரம் ஆகும். திறக்க. சில நிமிஷங்களில் டாங் டாங் என்று மணி அடித்து மூடிவிடு வார்கள். டாக்ஸி ஆட்டோ கிடையாது. ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் சைக்கிள், சிலர் வீட்டில் அபூர்வமாக மோட்டார் சைக்கிள். ஸ்கூட்டர் கிடையாது.

மொத்தமே ஒரு சில டிவிக்கள் தான் எங்கள் காலனியில். எங்கள் வீட்டில் டயனோரா கருப்பு வெளுப்பு சிறிதாக இருந்தது. ரொம்ப சத்தத்தோடு பாடும். கோடு கோடாக வரிகள் ஓடும். ஆன்டென்னா என்று ஒன்றை திருப்பி திருப்பி வைத்தால் கொஞ்சம் ஆடிக்கொண்டே முகங்கள் தெரியும். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலீயும் . சனிக்கிழமை ஒரு ஹிந்தி படம். ஞாயிறு தமிழ் படம். புலவர் நன்னன், வயலும் வாழ்வும் கூட ஆர்வமாக பார்ப்போம். கண்ணன் என்பவர் ஷோபனா ரவி ஆகியோர் சேதி சொல்லுவார்கள்.

யார் வீட்டில் விசேஷமானாலும் கூப்பிடுவார்கள். கூப்பிடுவோம். தீபாவளி நவராத்ரி பொங்கல் பண்டிகைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லோர் வீடுகளுக்கும் செல்வோம். பக்ஷணங்கள் பரிமாறிக் கொள்வோம்.

மழைக்காலங்களில் ஊர் வெள்ளக்காடு. மின்சாரம் வேலை செய்யாது. எங்கும் இருள். எங்களோடு நிறைய பாம்புகள் தவளைகள் பூரான்கள் வசித்தது. கொசுவைப் பற்றி சொல்லவேண்டாம். அது அந்த ஊர் ஆதிவாசி. உருவத்தில் பெரிதாகவே இருந்தது. புதிதாக குடியேறிய எங்களை பிடிக்காததால் எதிர்த்து துன்பத்தை விளைவித்தது. வேலைக்கு செல்பவர்கள் ஆபிசில் ஒரு பேண்ட் ஷர்ட் ஷூக்களை வைத்து இருப்போம். அங்கே போய் டப்பா கட்டு வேஷ்டியை முடித்துவிட்டு ஆபிசுக்கான உடை அணிவோம். சாயந்திரங் கள் எனக்கு கிடையாது. இரவு நங்கநல்லூர் திரும்பும்போது மீண்டும் வேஷ்டி டப்பா கட்டு. முழங்கால் அளவு ஜலம் ஆறாக தெருக்களை மறைத்து ஓடும். தில்லை கங்காநகர் பகுதி வரும் வழியில் இருட்டில் மயானம். சைக்கிளில் வேகமாக அதை கடக்கும்போது யாரோ பின்னால் வருவது போல, எதிரே வா என்று கை ஆட்டுவதாக எல்லாம் பயங்கர கற்பனை. சரி மின்னம்பக்கம் வழியாக வருவோம் என்றால் அங்கும் ரயில்வே கேட் கடந்ததும் ஜெயின் காலேஜ் ஒட்டி ஒரு மயானம். பாதி எரியும் பிணங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். பகலில் பன்றிக் கூட்டங்கள். நாய் சந்தை.



நங்கநல்லூரில் சற்று தள்ளி பிள்ளையார் கோவில். அப்போது ராஜராஜேஸ்வரி கோவில் வரும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேறு கோவில்கள் இல்லை. ஆகவே எங்கள் காலனியில் ஒரு சிறு கோவில் கட்டலாம் என்ற எண்ணம் எங்களுக்குள் எழுந்தது. மேலே சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...