Thursday, October 24, 2019

SHEERDI BABA


மனிதருக்குள் ஒரு தெய்வம்    J K  SIVAN 
ஷீர்டி பாபா 
                          
               
                       
இரவில் ஒரு அதிசய விருந்தாளி  

ப்ரதான் ஷீர்டி பாபா பக்தர்.  முடிந்தபோதெல்லாம்  தனது ஊரிலிருந்து ஷீர்டி வந்துவிடுவார். ஓரிரு நாட்கள் தங்கி பணிவிடை செய்வார். அடிக்கடி வருவார்.
                  
 ஒருநாள்  பாபா  ப்ரதானோடு பேசிக்கொண்டிருந்தபோது  என்ன தோன்றிற்றோ தெரியவில்லை.  ''பிரதான்  எனக்கு  நீ  ஒரு சின்ன குளம் கட்டக்கூடாதா ?''  என்று கேட்டார். அப்போது  ப்ரதானுக்கு தெரியவில்லை.  தான்  பாபாவுக்கு சமாதி எழுப்பப்போகிறோம் என்று.

1918 வாக்கில்  ப்ரதானின்   மனைவி  தனது  கிராமத்தில் இருந்தபோது ஒரு கனவு அவளுக்கு வந்தது. 
அதில்  பாபா மரணமடைவது போல் காட்சி.  அவளுக்கு  அதிர்ச்சி.  எழுந்து உட்கார்ந்து அழுது தீர்த்தாள்.  அக்காலத்தில்  டெலிபோன் வசதியெல்லாம் கிடையாது.  அப்போது பிரதான்  ஷீர்டியில்  பாபாவோடு இருந்தார்.

என்ன ஆச்சர்யம் .  வீட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள் . ஆனால்  யாரோ பேசும் குரல் அவளுக்கு கேட்டது. 
"பாபா  மரணமடைந்தார்  என்று சொல்லாதே.  பாபா ஜீவா சமாதி அடைந்தார் என்று சொல்.' (நாமெல்லாம் மரணமடைந்தால் மனம் வேறுபடுகிறது.   ஆனால்  மஹான்கள் சமாதி அடையும்போது அவர்கள் மனம் அங்கேயே  உடலை அணுகி என்றும் இருக்கிறது). இறப்பு பிறப்பு , சுக துக்கம், லாபம் நஷ்டம் எல்லாமே ஒன்று தான். பேர் தான் வேறு. ஆகவே  பாவுக்கு  மரணம் என்பது கிடையாது''   இப்படி அந்த குரல்  தெளிவாக கேட்டது பிரதான் மனைவிக்கு. எங்கிருந்து வந்தது யாருடைய குரல் இது?? 

அந்த நேரத்தில் தான் அவளுக்கு ஒரு சேத்தி வந்தது. கடுதாசி  பிரதானிடமிருந்து.  ''பாபா இனி இல்லை''

அன்று  விஜயதசமி 1918.   பாபா  பிறந்தது செப்டம்பர் 28 1835.  ஆகவே  பாபா  83 வருஷங்கள் நம்மோடு இருந்திருக்கிறார். உண்மையில்  பாபா  பிறந்ததோ மறைந்ததோ சரியாக  என்று  என்பது யாருக்கும் தெரியாது. 

ஏற்கனவே சொன்னது  ஞாபகமிருக்கிறதா?  பத்ரி கிராமத்தில்  கங்காபவாத்யா  தேவகிரியம்மா தம்பதிகளுக்கு புத்ர பாக்யமில்லாதால்  தாங்கள் வழிபடும்  பரமேஸ்வரன் பார்வதியை வேண்டி பிரார்த்தனை பண்ணினார்கள்.   கங்காபாவத்யாவுக்கு  படகோட்டும் வேலை.  

ஒரு நாள் இரவு. கடும் மழை. இருள் அப்பி இருந்தது.  வீட்டை விட்டு நதிக்கரைக்கு சென்று  படகுகள் ஜாக்கிரதையாக இருக்கிறதா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா என்று  போய் பார்த்து  அவற்றை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவேண்டும்.

''தேவா,  இன்றிரவு நான் வரமாட்டேன். நீ வீட்டில் ஜாக்கிரதையாக இரு ' என்று சொல்லி  சாப்பிட்டுவிட்டு   கிளம்பினார். தானும் சாப்பிட்டுவிட்டு  படுத்தாள். 

ராத்திரி  ஒன்பது மணி  போல  இருக்கும். உத்தேசமாகத்தான். அப்போதெல்லாம் கடியாரம் எல்லாம் கிடையாது. மின்சாரமும் இல்லை.  யாரோ கதவை தட்ட, ஒருவேளை கணவன் சீக்கிரமே  திரும்பிவிட்டாரோ என்று  கதவை திறந்தாள்.  ஒரு வயதான மனிதன். 

 ' அம்மா, வெளியே  ரொம்ப  நடுங்குகிறது,  குளிருகிறது. உள்ளே கொஞ்சம் வந்து ஒரு ஓரமாக படுக்கட்டுமா.''

 வெராண்டாவில் படுக்க அனுமதித்து விட்டு உள்ளே கதவை சாத்திக் கொண்டாள் .மறுபடியும் கதவு தட்டல்.  எழுந்து கதவை திறந்தாள்  அந்த முதியவர் தான் .

''ரொம்ப பசி காதடைக்கிறது. ஏதாவது இருந்தால் சாப்பிட கொஞ்சம் கொடு'' 

வீட்டில் உணவு இல்லை.  மாவில் கொஞ்சம் தயிரை கலந்து உப்பு போட்டு அவருக்கு ஒரு லோட்டா கொடுத்தாள் .மீண்டும் கதவை தாழிட்டு படுத்தவளை  கொஞ்ச நேரம் கழித்து  ''டப் டப்'' . கதவு தட்டல் அவளை எழுப்பியது.
 "மறுபடியும் கிழவர்.  ''அம்மா எனக்கு கால் குடைச்சலாக இருக்கிறதே  கொஞ்சம்  அமுக்கி விடேன்'' 

தேவகிரி  நேராக  பூஜை அறைக்கு சென்று பார்வதியை வேண்டினாள்.

 'அம்மா என்ன சோதனை இது. நான் இந்த கிழவருக்கு  பணிவிடை செய்யவேண்டுமா  முடியாது என்று சொல்லவேண்டுமா? தெரிய வில்லையே.''

 கொல்லைக் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவள் யாராவது கண்ணில் தென்படுவார்களா, அவர்களை விட்டு அந்த கிழவருக்கு  உதவலாமே என்று தேடுகிறாள். பக்கத்து வீடுகளுக்கு செல்கிறாள். அந்த நேரம் இருளில் மழையில் யார்  இருப்பார்கள்?   ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கதவை தாழிடுகிறாள்.

மீண்டும்  கிழவர் கதவை தட்டினார்.   என்னடா இது ? என்று யோசிக்கும்போது  பின் கொல்லை கதவையும் யாரோ தட்டுகிறார்களே?  குரல்  வேறு கேட்கிறது. 

 ''அம்மா...   அம்மா..   என் வீட்டுக்கு வந்தீங்க போல இருக்கே. ஏதோ உதவி வேணும்னு வந்தீங்களா. அப்போ  நான்  கொஞ்சம் பின்னாலே போயிருந்தேன்....என்னம்மா வேணும் ''?

''அம்மா  தாயே,  பார்வதி தேவி, நீயேவா  உதவிக்கு வந்தாய்?   அல்லது யாரையோ அனுப்பினாய்?''  தேவகிரிஅம்மா  கதவை திறந்து அந்த பெண்ணை அனுமதித்து   ''வாசலில் வெராண்டாவில் அந்த பெரியவருக்கு கொஞ்சம் கால் பிடித்து விடம்மா. ரொம்ப கால் வலிக்குதாம்''  என்று சொல்லி அனுப்பி கதவை மீண்டும் தாழிட்டாள்.

வெராண்டாவில் நடந்தது என்ன ? 

 ''பார்வதி, இந்த பெண் வெகுகாலம் நம்மை சந்தான பாக்யம் வேண்டும் என்று கேட்கிறாள். உதவ வேண்டாமா?

''ப்ரபோ, உங்கள் அனுகிரஹத்தால் அவ்வாறே நடக்கட்டும்.''

''நான் இவளை சோதிக்க தான் வந்தேன். நீ அவள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து வந்தாய்.  ஆகவே நீ தான் அவள்  பிரார்த்தனையை  நிறைவேற்றவேண்டியவள்''  என்கிறார் பரமசிவன்.

மீண்டும் கதவு தட்டப்படுகிறது.  தேவகிரியம்மா கதவை திறக்க  எதிரே  பார்வதி பரமேஸ்வரர்கள் தரிசனம்.  அப்படியே  அவர்கள் காலடியில் விழுகிறாள். 

''உனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒரு பெண்ணும் பிறப்பாள்.  நானே உனது மூன்றாம் குழந்தையாக ஒரு மகனாக பிறப்பேன்'' என்கிறார் பரமேஸ்வரன். ஆனந்தத்தோடு  அவர்கள் காலடியிலிருந்து எழுந்த தேவகிரி அவர்கள் மாயமாகிவிட்டதை உணர்கிறாள். காலையில்  எப்போது கணவன் திரும்பி வருவான் என்று  ஆவலாக காத்திருந்து சந்தோஷத்தோடு  இரவு நடந்த அதிசயத்தை சொல்கிறாள். அவரால்  நம்பமுடிய வில்லை.   

''தேவகிரி,   நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய்.  ஏதோ கனவு  நிஜமாக நடந்ததுபோல் உனக்கு தோன்றுகிறதோ?'' 

சில வருஷங்கள் ஓடியது.  தேவகிரியம்மாவுக்கு ஒரு பிள்ளை, பெண் பிறந்தார்கள்.  இப்போது தான்  கணவருக்கு புரிகிறது  அவள் சொன்னதெல்லாம் நிஜம்,  கனவல்ல என்று. 

''தேவகிரி , நீ பாக்கியசாலி, நான் கொடுத்துவைக்காதவன். எனக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.  மூன்றாம்  பிரசவம் நெருங்கியது.  ஒன்பது மாத கர்ப்பவதி.   அப்போது கங்காபவத்யா  ''எனக்கும்   சிவ  தரிசனம் கிட்ட  நான் தவமிருக்கப்  போகிறேன்''  என்று வீட்டை விட்டு காட்டை நோக்கி கிளம்பிவிட்டார். நானும்  உங்களோடு வருகிறேன் என்று  அவளும் அவருடன் செல்ல  வழியில் பிரசவ வலி . அங்கேயே  மூன்றாவது குழந்தை.   ஒரு ஆண்  பிள்ளையை  பெறுகிறாள்.   பிறந்த குழந்தையை ஒரு துணியில் சுற்றி  தெருவோரம்  விட்டு விட்டு அந்த தாய்  கணவனோடு சென்றுவிட்டாள்.

இப்படியெல்லாம் நடந்ததா என்று யோசிக்கவே வேண்டாம். இப்போதே நடக்கிறதே.  பேப்பரில்  அடிக்கடி இதுபோன்ற செய்திகள்  வந்து  மனது நெகிழ்கிறதே..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...